தற்கால ஆணியம்

(இது சத்தியமாக ஆணிகள் சம்பந்தப்பட்டது அல்ல. பெண்ணாதிக்கம், பெண்ணியம் போன்ற வாதங்களால் பாதிக்கப்பட்டு காலத்தினால் ஒடுக்கப்பட்ட ஆண்களின் சோக வரலாறு!)

ஆதியில் ஆணாதிக்கம் என்ற ஒன்றோ பெண்ணாதிக்கம் என்ற ஒன்றோ இருந்ததாக சரித்திரத்தின் எந்த பக்கத்திலும் ஏன் வரியிலும் கூட இல்லை. இறைவன் படைத்த உயிரினங்களில் உன்னதமான மனித விலங்கு, தன்னை சுற்றியிருந்த சக மனிதர்களை மனித விலங்காகத்தான் பார்த்ததேயொழிய அதை ஆணாகவோ, பெண்ணாகவோ, உறவுமுறைகொண்டோ பார்த்திருக்கவில்லை. இதில் என்றைக்கு நாணம் என்ற ஒரு உணர்வை (போலியாக!) வரவழைத்துக்கொண்டு தனக்கென்று ஒரு ஆடைத் தேடிக்கொள்ள ஆரம்பித்தானோ அங்கு தொடங்கியது ஆண் பெண் பிரிவினை.

பெண்ணாதிக்கம் என்கிற நம் தலைப்புக்கு இது சம்பந்தமில்லை என்றாலும் பேதைமை ஆரம்பிக்கிற இடத்தில்தான் ஆதிக்க மனப்பான்மையும் தோன்றுகிறது என்பதால், இவ்விடத்தில் பேதைமை உருவான வரலாற்றை சொல்ல வேண்டியும் வருகிறது.

பெண்ணாதிக்கம் உருவான வரலாற்றை இன்ன தேதியிலிருந்து என ஆரம்பிப்பது அனுமார் வாலைத்தேடி போன கதைதான். வேண்டுமென்றால் ஆதாம் ஏவாளின் காலத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் நமக்குத் தெரிந்த முதல் ஆண் பெண் அவர்கள் தான். என்றைக்கு முடியாது என்று கதறி அழுதும் கூட வற்புறுத்தி சாத்தானின் ஆப்பிளை ஆதாமிற்கு சாப்பிடச் செய்தாளோ அன்று ஆரம்பித்தது இந்த பெண்ணாதிக்க மனோபாவம். அது வரை ஒன்றும் தெரியாத அப்பாவியாக இருந்த நமது ஆதாமை வற்புறுத்திய அந்த கணம் தான் பெண்ணாதிக்கம் வேர் விட்டு வளரக் காரணமான கணம். அன்று முதல் இன்று வரை ஆணாதிக்கம் என்ற கூப்பாடின் அடியில் சத்தமில்லாமல் பெண்ணாதிக்கம் இயங்கிவருகிறது.

அன்று முதல் இன்று வரை ஆண்களின் போக்கிற்கு இடையூறாக இருந்து ஆணைத் தன் கைப்பாவையாக இயக்குகிறாள் இந்த பெண். 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண்தான் இருக்கிறாள்' என்கிற ஒரு பழமொழி போதுமே! பெண்ணாதிக்கத்தை எடுத்துச் சொல்ல! அலெக்சாண்டரின் பின்புலத்தில் அவர் தாயான Angelina Jolie  மன்னிக்கவும் Olympias இன் தூண்டுதல் தான் அவனை கடல் கடந்து வந்து நோயால் அவதிப்பட்டு சாகச் செய்தது. இதே மாதிரிதான் சிட்டுக்குருவியாய் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மஜ்னுவை ( இது பிரசாந்த் அல்ல. Original மஜ்னு) காதல் என்ற மாயப் போர்வையில் மூடி கோழி அமுக்குவது போல அமுக்கி கொன்று போட்டது இந்த பெண்ணாதிக்க சமுதாயம். இதைப் பற்றியெல்லாம் இங்கு ஒருவர் கூட கேட்க முன் வரவில்லை. இதையெல்லாம் சொல்லப்போனால் தியாகம் என்கிறார்கள். காதலினால் பெண்கள் இறந்தால் 'பெண்பாவம் பொல்லாதது'. ஆண்கள் இறந்தால் உயிர்த்தியாகமாம். எந்த ஊர் நியாயம் இது?

இன்று வரை ஆண்கள் முன்னேறாததற்கு காரணமே இந்த பெண்ணாதிக்கம்தான். படிப்பில் ஆகட்டும், இல்லை விளையாட்டில் ஆகட்டும், எல்லாவற்றிலும் இந்த பெண்கள் முன்னில் வந்து ஆண்களின் இடங்களை தட்டி பறிக்கிறார்கள். திருமணம் என்பது இவர்களின் பெண்ணிய வாதத்திற்கு ஆதரவாய் சொல்லப்படுகிறது என்றாலும் அதற்கு பிறகு ஆணின் பாடுதான் திண்டாட்டமாகிறது.சொல்லப்போனால் அன்று தலை வணங்குகிற பெண் அதற்குப் பிறகு வணங்குவதே இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டு வீட்டு வேலைகளில் தொடங்கி அலுவலகம் வரை அவன் படுகிற பாடுகள்..ஐயகோ! சொல்லோணாத் துயரக் கடலில் மிதக்கிறான் ஆண். அதுவும் இந்த நெடுந்தொடரும், Reality showக்களும் நடக்கிற நேரங்களில் அவன் பாடு திண்டாட்டம். வேளைக்கு உணவுக்குக் கூட திண்டாட்டம் தான். இதையெல்லாம் பட்டிமன்ற மேடைகளில் பேச்சாளர்கள் பேசினால் வெறும் காமெடியாக கைத்தட்டி விட்டுப் போகிறார்களே... இதை என்னவென்று சொல்வது?

இது என் ஒருவனுடைய குமுறல் அல்ல.. கோடானுகோடி வருடங்களாக நயவஞ்சகமாக ஒடுக்கப்பட்ட ஒரு தலைமுறையின் கதறல். ஒரு நாள் வானம் நம் வசப்படும். இழந்த உரிமைகளும் சுதந்திரங்களும் மீண்டும் கிடைக்கும். அந்த நாள் தொலைவில் இல்லை.

இவண்...
கொ.ப.செ
அனைத்திந்திய அப்பாவி ஆண்கள் சங்கம்

Comments

Paleo God said…
முழுவதும் படித்து விட்டு பதில் போடுகிறேன்.. இப்போதைக்கு ஓட்டு மட்டும்..:))

Popular Posts

பின் தொடர்பவர்கள்