சாம்பவி

கால்களைப் பின்னும் நாகமாய்
இந்த இரவு
தனித்த பெருவனத்தில்
கனன்று கொண்டிருக்கும்
அக்கினிக் குஞ்சைத்
தாங்கி முன் செல்கிறாய் நீ
அதிதேவதை
ஒரு வார்த்தைக்காய்
ஒரு மூச்சுக்காய்
ஒரு விம்மலுக்காய்
தவிக்கிறது இந்த உயிர்
மழை தங்கும் பூமியின்
மரணவலி
எங்கே போகிறோம் நாம்?
அர்த்தப்பாடுகளின் கவர்ச்சியும்
இரத்தக் கவிச்சியும்
ஒன்றெனவே படுகிறது
ஜனன வெளியின்
புதர் மண்டிக்கிடக்கும் வாசல்
பனிகவிந்த இந்த மலை
உருமிக் கொண்டேயிருக்கிறது
தூரத்தே அனல் கக்குகிற
இருண்ட வெளி
இங்கே சுடுகிறது
எங்கே போகிறோம் நாம்?
வானம் பொய்
பூமியும் பொய்
வர்ணமற்ற வெளியின்
இந்த வர்ணமெலாம் பொய்
ஒளிர்கின்ற ஒரு மான்
தூரத்தில் ஒடுகிறது
அதுவும் பொய்யாகத்தான் இருக்கும்
நடுவில் நடக்கிறோம்
எங்கே போகிறோம் நாம்?
செந்நிற மழை வருஷிக்கும்
இந்த நொடியில்
கேட்கிறேன் சாம்பவி
எங்கே போகிறோம்!

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்