கடலாடல்

பசிபிக் பெருங்கடலின் கரையிலே பிறந்திருந்தாலும் ரிஷி அதுவரையில் கடல் பார்த்ததில்லை. கடல் எத்தனை  சமீபித்திருந்திருந்தாலும் அவனை அதை பார்த்திருக்க விட்டிருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. அவனை முதன் முதலில் வங்காள விரிகுடாவில் தான் கால் நனைக்க வைக்க வேண்டும் என்பதுதான் காரணமாக இருந்தது. சென்னையின் உப்பு கலந்த அந்த மீன் வாடைக் காற்றுக்கு இருக்கும் சுகந்தம் உலகின் வேறெந்த கடலுக்கும் உண்டா?

விரிகுடா - இந்த பெயருக்கான அர்த்தம் எனக்கு இன்று வரையில் தெரியாது. தெரிந்த கொள்ளவும் விரும்பவில்லை. ஒரு வேளை தெரிந்து கொண்டால் அது அந்த பெயர் தரும் பிரம்மாண்டத்தை குலைத்து விடுமோ என்ற பயம் எனக்கு. கம்பராமாயணத்துக்கும் நன்னூலுக்கும் திருமந்திரத்திற்கும் விளக்கம் சொல்லும் அம்மாவும் அப்பாவும் இதையும் நிச்சயம் விளக்கி இருப்பார்கள்தான் என்றாலும் ஏனோ நான் கேட்டது இல்லை. 

தொண்ணூறுகளின் மெரினாவிற்கு என்று ஒரு விஸ்தீரணமும் பிரம்மாண்டமும் இருந்தது. ரோட்டில் இருந்து கரைக்குப் போகவே ஏதோ நிலவில் நடப்பது போல நடந்து போக வேண்டும். அதையெல்லாம் தாண்டினால்தான் அந்த வெயில் கடந்து போன மென்சூட்டு மணல் மறைத்து வைத்திருக்கும் கடல் என்னும் பிரம்மாண்டம் கண்ணுக்குத் தெரியும். அலைகளோடு விளையாடுவது ஒன்று, ஆனால் அலைகளைத்தாண்டி அது ஒளித்து வைத்திருக்கும் மர்மங்களை கரையில் அமர்ந்து தியானிக்க வேண்டும். (Contemplate என்பதற்கு தமிழில் என்ன?) சிறு வயதில் தியானிப்பது என்றால் என்னவென்றெல்லாம் தெரியாது, ஆனால் கடலும் அதன் பிரம்மாண்டமும் அதன் ஆழமும் என்னை கட்டிப் போட்டிருக்கும். விழிக்குப் புலப்படாத ஒரு நாக பந்தனத்தைப் போல. 

அப்பா அப்பொழுது திருவல்லிக்கேணியில் ஸ்டார் பிரசுரத்தில் வேலை பார்த்தார். ஒரு பெரிய வீட்டின் முகப்பில் அந்த பிரசுரம் இருந்தது. அங்கு போன நினைவுகள் இன்னமும் நினைவில் இருக்கிறது எனக்கு.  உள்ளே நுழையும் போதில் இருந்தே மணக்கிற புத்தக வாசனை, சிகப்பு நிறத்தில் எண்களை சுழற்றி அழைக்கிற தொலைபேசி, டக டக வென சத்தம் எழுப்பும் டைப்ரைட்டர்கள், அதன் ரிப்பன் சாயம், பின்னர் பண்டல் கட்டப்பட்ட புத்தக மூட்டைகள். 

என்னை அழைத்துப் போகும் போது எல்லாம் எதிரில் இருக்கும் ஒரு டீக்கடையில் அப்பா ராகி மால்ட் வாங்கித் தருவார். ஒரு கப் அண்ட் சாஸர், அதில் கப் அப்பாவுடையது, சாஸர் எனக்கு. அப்படியே நடந்து பைக்கிராப்ட்ஸ் ரோடில் வலது புறம் திரும்பி கடலைப் பார்த்து நடந்தால் ஒரு ஐஸ்க்ரீம் கடை. அதில் ஒரு கோன் ஐஸ். பாதி தூரம் நடக்கும்போதே கடல் காற்றும் வெயிலும் அதை உருக்கி இருக்கும். இப்பொழுது ஸ்டார் பிரசுரம் அங்கே இல்லை, அப்பாவும் இல்லை. ஏனோ அந்த ஐஸ்க்ரீமின் பிசுபிசுப்பு மட்டும் இன்னமும் கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. 

வார இறுதிகளில் கடல் பார்க்கும் வைபவம் நடக்கும்போது அம்மாவும் எங்கள் கூட வருவாள். 

அப்பா ரொம்ப நாட்களாக ஸ்டாரில் தான் வேலைப் பார்த்தார். அம்மா படித்ததும் விவேகானந்தர் இல்லத்தின் அருகே இருக்கும் லேடி வெல்லிங்க்டனில். ஆனால் இருவரும் ஒரு முறைகூட திருமணத்திற்க்கு முன்  சந்தித்தது இல்லை என்பது எனக்கு அப்போது ஏதோ விந்தையாக இருந்தது. 

இரவில் கடல் பார்ப்பதென்பது இன்னொரு இரகம். வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களில் அடுத்தது சென்னையா இல்லை ஹைதராபாத்தா என்று ஒரு கேள்வி வரும்போது அப்பாவிற்காக சென்னை வர வேண்டியிருந்தது. பெங்களூரை விட்டு வர மனமே இல்லாமல்தான் வந்தேன். அடுத்த நான்கு வருடங்களுக்கு இரவில் ஊர் உறங்கிய பின் அறைவாசிகளான நாங்கள் மூன்றும் பேரும் சேர்ந்து மெரினாவிற்கு போவோம். குறிப்பாக விவேகானந்தர் இல்லத்திற்கு நேராக உள்ள கரையில். அதிக வெளிச்சம் இல்லாமல், ஆளரவம் பெரிதும் இல்லாமல் நிம்மதியாக அமர்ந்து கடல் பார்க்கலாம். கொஞ்ச நேரத்தில் நிலவு மெதுவாக உதிக்கும். ஆனால் நிலவினால் கடலுக்கு வெளிச்சமில்லை. கடலுக்கென்று தன் ஒளியை தானே உண்டு பண்ணிக் கொள்கிறது. 

இப்போது அம்மா இல்லை. விவேகானந்தர் இல்லம் அப்படியே தான் இருக்கிறது. கடலும். அனேகமாக அம்மா தங்கியிருந்த அறையும் அப்படியேதான் இருக்கும். 

கடலுக்குத்தான் எவ்வளவு வண்ணங்கள்? நீரிலும் சரி நிலத்திலும் சரி. கடற்கரையும் ஒரு வகையில் கடல்தான். கடலின் ஆழம் கடற்கரையிலும் உண்டு. முன்னதின் ஆழம் நீரில், பின்னதின் ஆழம் அங்கு திரியும் மனிதர்களில். 

ரிஷியை வங்கக் கடலின் கரைக்குக் கூட்டிப் போனேன். முதலில் மிரண்டான். வாளித் தண்ணீரைப் பார்த்துப் பழகியவன் இதென்னடா இவ்வளவு பெரிய வாளி என்று நினைத்திருப்பான் போல. பின் மெதுவாக அவன் கைப் பிடித்து கால் நனைத்தேன். முதன் முதலில் மண் கலந்த தண்ணீரில் கால் வைக்கிறான். விரல்களின் இடையில் உருண்டோடும் மண் கூசியது போல. கலகலவென சிரித்தான். பின் கைகளை உதறிவிட்டு அவனே மெதுவாக இன்னும் கொஞ்சம் உள்ளே போனான். பிறகு ஓடி வந்தான். இப்படி ஒரு ஐந்து நிமிடம். பிறகு அப்படியே கடல் நீரில் அமர்ந்து அலைகளின் அடியில் கிடந்த மண் எடுத்து கிளரி விளையாட ஆரம்பித்தான். கடலும் அவனுடம் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. 

சென்னையின் ஜனத்திரள் மறைந்த அந்த நொடியை நிசப்தம் பாவியது. தூரத்தில் யாரோ இரண்டு பேர் கடல் பார்த்த மாதிரி அமர்ந்திருந்தார்கள். நிச்சயம் அது அம்மாவும் அப்பாவுமாகத்தான் இருக்கும்.

Comments

பின் தொடர்பவர்கள்