How to name it?

இளையராஜாவின் how to name it கேட்டுக் கொண்டிருக்கிறேன். மனது முழுக்க அதில் இலயிக்கிறது. இத்தனை வருடங்களில் எத்தனையோ பாடல்கள் கேட்டிருந்தாலும் மனது எதிலும் அவ்வளவு எளிதில் இலயித்ததில்லை. அப்படியே ஒன்றிப் போனாலும் கூட அது எந்த சமயத்திலும் ஒரு எழுத்தை தூண்டியதில்லை. ஏதோ ஒன்று அது எதுவாகிலும் சரி இன்னொன்றை சிருஷ்டிக்கிற பொழுது அது முன்னிலும் பிரகாசிக்கிறது. பரிமளிக்கிறது. அந்த வகையில் இது நிச்சயமாய் அழகான ஒரு பாடல்தான்...

மழை விடுத்த காலையொன்று. மழை விட்ட அதிகாலைகள் எப்பொழுதும் அழகானவை. மழை மண்ணோடு கொண்ட சொந்தத்தை அவ்வளவு எளிதில் விடுவதில்லை. பேச்சுவார்த்தை நின்ற பிறகும் கூட செல்லமாய் ஊடாடிக்கிடக்கும் அது. அது இன்னொரு பெய்மழைக்குண்டான அச்சாரமாகவும் கூட இருக்கலாம். ஆனால் மெல்லியதாக தூறிக்கொண்டேஇருக்கிற ஈரத்தை காத்துக்கொண்டு இருக்கும் அது. அந்த சமயம் உதிக்கிற சூரியன் ரொம்பவும் சுடாமல் லேசாக அதன் கிரணத்தை பூமியின் மீதி தெளிக்கும். பூமிக்கு புது வெயிலில் மயிர்கூச்செறியும். புல் முடியை துளிர்க்க வைக்கும் அது. புனர்ஜென்மம் அது. அதுவரையில் அமைதி காத்த புள் கூட்டமெல்லாம் பெருவோலம் இட்டு அங்கும் இங்கும் பறக்கும். இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் இதுதான் நினைவுக்கு வரும். இதற்காகவே அதிகாலையில் எழுந்து இந்த பாடல் காதுக்குள் ஒலிக்க நடந்து போயிருக்கிறேன்.

தருணங்கள் அற்புதமானவை. அவையெல்லாம் சேர்ந்த இந்த வாழ்க்கையும் அற்புதமானது. வாழ்க்கையின் அர்த்தங்களை பொலிவுறக் காட்டும் இயற்கையும் அற்புதமானது. இயற்கையின் அழகை மென்மையாய் இரசிக்க வைக்கிற பாடலும் அற்புதமானது.

எல்லாவிடத்திலும் இசை விரவிக்கிடக்கிறது. சமைந்து கிடக்கிற கல்லாகிலும் சரி, சுற்றித்திரியும் புள்ளாகிலும் சரி. எல்லாமுமே ஒரு harmonyயில் தான் இயங்குகிறதாய் கலிலேயோ சொல்வார். உண்மைத்தான் போலிருக்கிறது.

-இன்னும்

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்