Friday, July 31, 2009

முன்பு ஒரு காலத்தில் இதே இடத்தில் வைக்கப்பட்டிருந்த அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்களேன் என்ற பதிவு யாரும் அர்த்தம் சொல்ல முன் வராத காரணத்தினால் இந்த இடத்திலிருந்து நீக்கப்பட்டது. எனினும் அர்த்தத்தை நானே கண்டுபிடித்து விட்டேன். முயன்றவர்களுக்கு நன்றி!!

Monday, July 20, 2009

நான் வளர்ந்து விட்டேனா??

இது நான் எப்ப செய்த புண்ணியத்தின் விளைவோ தெரியல! நமக்கு நண்பர்களா மாட்டுகிறவர்களின் வயது வரம்பு எல்லாம் ஒன்னு ஒன்றிலிருந்து பத்து வரை. இல்லாட்டி அறுபதிலிருந்து தொண்ணூறு வரை.. (நான் பாத்த அதிக பட்ச வயதே தொண்ணூறு தான். ஏன்னா இவங்க தான் நம்மள நம்பறாங்க.. மத்த எல்லாருமே கொஞ்சம் வெவரமாத்தான் இருக்காங்க...)ஆனாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டாத சினேகம் இதெல்லாம். இந்த குழந்தைகளுக்குள் தான் எத்தனை எத்தனைக் கதைகள்... எத்தனை சின்ன சின்ன உலகங்கள்.... இவங்க உலகத்துக்குள்ள நாமும் பிரவேசிக்கும்போது இவங்க கதைகளோட மட்டும் இல்ல..நம்மோட பால்ய காலத்துக்கு போயிடறோம். H.G. Wellsஒட டைம் மெசின் இவங்க தான் போல...

எங்க வீட்டோட குழந்தை நான் தான்.. வயது, வெறும் 20.. ( சரி.. சரி.. காதுல புகை வரது தெரியுது!! ) கி.பி. 2006 வரைக்கும்.. அதுக்கு அப்பறம் தான் எங்க வீட்டுக்கு ஹரிணி வந்து சேர்ந்தா.. அதாவது எங்க வீட்டுக்கு புதுசா குடி வந்தாங்க ஹரிணியோட அம்மாவும் அப்பாவும்.. இன்னும் சொல்லப் போனா அவ பொறந்தது எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான். அவ வளர வளர என்னோட குழந்தைங்கற இமேஜ் (!) போய் அந்த எடத்துக்கு ஹரிணி வந்துட்டா!... எப்படியோ! இப்ப வரைக்கும் எங்க வீட்டுல அவ தான் குழந்தையா இருக்கா!

நான் சொல்லப் போற விஷயம் நடந்து சுமார் 1 வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்.. நான் கம்பேனியில் சேர்ந்த புதிது(சத்தியமா 'மன்னார் & கம்பேனி' இல்ல). நல்லா பந்தாவா வந்து ஊர்ல இறங்கி இருந்த்தேன்.. இங்கே நாம கிழிச்ச கிழிப்புக்கு ஊர்ல கறி சோறு வேறு.. நல்லா கொட்டிகிட்ட பின்னாடி என்ன பண்றதுன்னு தெரியாம சானல திருப்பிகிட்டு இருந்தேன்...(டிவி யில் தான்.. நம்ம பண்ண பாவத்தோட விகிதாச்சாரங்களின் அடிப்படையில் வச்சு பாத்தா எதிர் வீட்டுல பாட்டி இருக்கறதே பெருசு.. இதுல பார்ட்டி எங்க இருந்து இருக்கும்..) எதுக்கும் உதவாத அதே படங்கள், சில பல மொக்கை ஜோக்குகள்னு வழக்கம் போல பொழுதுகள் வீணாக கழிக்கப்பட்டன..

ஆனால் ஒன்னு.....படிப்பு எங்க படிச்சாலும் வேலை மட்டும் வெளியூர்ல பாக்கனும். ஊரத் தேடி என்னைக்காவது நாம ஓடி வரும் போது அன்றைக்கு அந்த ஊரே நம்மை உபசரிக்கும் பாருங்க.. அந்த சொகத்துக்காகவாவது வெளியூர்கள்ல வேலை பார்க்கனும். ஆனா அதுலயும் ஒரு சூட்சமம் இருக்கு.. பெங்களூர் இல்லாட்டி வடக்கு பக்கம் எங்கயாவதுதான் வேலைக்கு போகணும்.. இங்கனயே சென்னைல வேலை பார்த்தோம்னு வச்சிக்கோங்களேன்.. நம்மள எவனும் மதிக்க மாட்டேங்கறான். இதே வேலையை பெங்களூரிலோ இல்லை வடக்கு பக்கமாக வேறு ஏதோ ஒர் கண் காணாத, பெயர் வாயில் நுழையாத ஊரில் வேலை பார்த்தால் நம்மை ஏதோ வெளி நாட்டு பிரஜை போல பார்க்கின்றனர் இந்த மக்கள். எப்படியோ.. ஒரு பெரிய ஜனக்கூட்டத்தினூடே தனித்து அடையாளம் காட்டப் படுவது எல்லாருக்கும் பிடித்தமான போதை தானே!!

சரி வியாக்கியானத்த விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்.
அன்றைக்கு சானல திருப்பிக் கொண்டு இருந்தவன், திடீர்னு என்ன நினைச்சேனோ தெரியல பக்கத்துல எங்க அப்பா அடுக்கி வச்சிருந்த புத்தகங்கள்ல ஒன்ன எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்... (வேற எதுக்கு? தூங்கறதுக்குத்தான்.. நீங்களா நான் படிப்பாளினு நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.. :)) அது கொஞ்சம் நல்ல புத்தகம்னு நினைக்கிறேன்.. எடுத்த ஐந்தே நிமிடங்கள் தான் அந்த மாற்றம் என்னுள்ளே நிகழ்வதற்கு.. வேற ஒன்னுமில்ல, தூங்க ஆரம்பிச்சிட்டேன்...

அதுவும் இந்த புத்தகத்தை படிச்சிட்டே தூங்கற அந்த சுகம் இருக்கே! அதற்கு ஈடு இணையே இல்லை.. அப்படி ஒரு தூக்கம்.. அதுவும் அந்த 'அரை தூக்கம்' தான் உண்மையிலேயே தூக்கம் எனும் அந்த மாய பிரபஞ்சத்துள் ஒரு உன்னதமான கட்டம். கனவுகள் எல்லாம் நம் இஷ்டப் படி நடக்கிற ஒரு நேரம். அப்போது தான் எனக்குப் பிடித்த ஏதோ ஒரு இடத்தில் உலாவ ஆரம்பித்திருந்தேன்.. கிளிகளும் , பூக்களும் பூத்துக் குலுங்குகிற அந்த நந்தவனத்தில் எங்கோ மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருந்தேன்..
அப்ப தான் தூரத்தில இருந்து ஒரு அழுகுரல். எங்கோ கேட்டது மாதிரி இருந்தாலும் இது போன்ற தோற்ற மாயைகள் நமது கனவுப் பிரதேசங்களில் சகஜம் தானே.. ஆனாலும் இந்த மானுடப் பிறவிகளுக்கே உண்டான ஒரு curiosity. யார் அந்த நிலவு என்று திரும்பிப் பார்க்க உத்தேசித்த போது... 'அண்ணா' என்று மீண்டும் அதே குரல் அழைக்க...

கண்ண தொறந்து பார்த்தா ஹரிணிதான் அவ வீட்டுல இருந்து என்னை சத்தம் போட்டு கூவி கூவி ஏலம் விட்டுட்டு இருந்தா... என்னடானு பதறி அடிச்சு போய் "என்ன ஹரிணி பாப்பா " என்று கேட்டேன்..

அவள் "இங்க வா.. உக்கா' (உட்காரு என்பதின் ஹரிணி version)..
நானும் என்ன பண்ண போகிறாள் என்று யோசித்தபடியே அவளருகில் உட்கார்ந்து "என்ன பாப்பா" என்று கேட்க..

டிவியைப் பார்த்து கையை காட்டி 'அதோ பார் யானை" என்றாளே பார்க்கலாம்...

லிட்டர் கணக்காய் மூஞ்சியில் அசடு வழிய.. யாரும் பார்க்கிறார்களா என்று திரும்பி பார்த்தேன்..

தூரத்தில் ஹரிணியின் அம்மா சிரித்துக் கொண்டே சொன்னார்..

"சின்ன கொழந்தை கூட ஒன்ன பெரிய பையனா மதிக்க மாட்டேங்கறாடா!!!"

என்ன கொடுமை சார் இது!!!

Thursday, July 9, 2009

அவசர அறிவிப்பு!!!!

மதுரைக்கு போன கதை எனக்கே மொக்கையாகத் தோன்றியதால் முதல் episodeஇலேயே அது தொடர்வது தடுத்து நிறத்தப்பட்டது. அதற்காக "அடுத்து வரும் பதிவுகள் எல்லாம் படிக்கிற மாதிரி இருக்குமா கைப்புள்ள?" என்று கேட்கக்கூடாது... ஏனென்றால் அது எனக்கே தெரியாது.. அதனால் தான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் 'இது வரைக்கும் படித்ததையே தாங்க முடியாதவர்களுக்கு, அடுத்த தொடரின் திருப்திக்கு நான் கியாரண்டி தரப் போவதில்லை.. எதற்கும் முடிந்தால் படித்து பாருங்கள்'.

Monday, July 6, 2009

மதுரைக்கு போன கதை

ஊருக்கு போவதற்கு என்று காரணம் ஒன்றும் இல்லை. ஊருக்கு போய் ரொம்ப நாளாகி விட்டதாலும், நம் இருப்பை உற்றாருக்கும் உறவினருக்கும் உறுதி செய்ய வேண்டிய கடமைக்காகவும் போக வேண்டியதாய் இருந்தது. அங்கு ஒரு வேலையும் இல்லை என்றாலும் வழக்கம் போல பலத்த பிரிவுபசாரங்களுக்கு பிறகு கிளம்பி வந்தேன்..

என்னவோ போன வியாழக்கிழமை, திடீரென்று ஊர் ஞாபகம் வந்தது. ஏன் என்றும் தெரியவில்லை. உடனே லீவ் apply செய்து விட்டு கிளம்பிவிட்டேன். ஏதோ இப்போதைக்கு வேலை இல்லாமல் வெட்டியாக இருப்பதால் இதெல்லாம் சாத்தியமாயிற்று.. இல்லாவிட்டால் இன்னேரம் ஏதோ projectஅயே நம்மதான் நட்டமா தூக்கி நிப்பாட்டப் போற மாதிரி சத்தம் போட்டு ஊர கூட்டி இருப்பாங்க... இத்தனைக்கும் நாம பாக்கறது என்னவோ excel sheet, இல்லாட்டி word document proof reading மாதிரியான வேலையாத்தான் இருக்கும். அதுக்கே இப்படி... என்ன கொடுமை சார் இது!

இந்த கலி காலத்தில் தான் off-season, season என்ற பாகுபாடே கிடையாதே.. அதனால் வியாழக்கிழமை அதுவுமா மதுரைக்கு ஏதாவது பஸ் கிடைக்குமா என்று பயந்து பயந்து கோயெம்பேடு என்ற ரத நிறுத்ததிற்க்கு (அதாங்க bus stand) சென்றேன். போவதற்கு ஆட்டோவில் 150 ரூபாய் வேறு. (பிற்பாடு இதையே வீட்டில் பெருமையாக பேசி அப்பாவிடம் வாங்கிக் கட்டி கொண்டது என்னவோ வேறு விஷயம். பின்ன.. மதுரைக்கே unreserved compartmentல் வெறும் 120 ரூபாய் தான்.. ) எப்படியும் இந்த பிறவியிலும் சரி முற்பிறவியிலும் சரி.. நான் புண்ணியத்தைத் தேடியதற்கு வாய்ப்பே இல்லாத காரணத்தினால் எனது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் யாரோ மண் தரையில் நடந்து சென்ற ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்த புண்ணியம் எனக்கு ஒரு ஏசி பஸ் ஒன்று கிடைத்தது. (கடைசி வரை பக்கத்து சீட்டில் யாரும் வராமல் அந்த இரண்டு சீட்டையும் நானே ஆக்ரமித்து வந்தது அந்த புண்ணியத்தின் பக்கவிளைவுகளில் ஒன்று)

வழக்கமாய் பேருந்தை 13-15 மணி நேரம் உருட்டி எங்கள் சாபங்களுக்கு ஆளாகும் ஓட்டுநர்களுக்கு மத்தியில் எங்கள் ஓட்டுநர் ஒரு exceptional case. இரவு 10 மணிக்கு எடுத்த வண்டியை சரியாக காலை 7.30 க்கு கொண்டு போய் சேர்த்தார். அவர் பிள்ளைக் குட்டிகளெல்லாம் நல்லா இருக்குஞ்சாமி.. (இரவு 9 மணிக்கு கிளம்பி மறு நாள் மதியம் 3 மணிக்கு போய் சேர்ந்த வரலாறு எல்லாம் நமக்கு உண்டு என்பதால் ஓட்டுநருக்கு இந்த வாழ்த்துக்கள் அவசியமாகிறது..)


இரண்டு மாத இடைவெளி விட்டு போனதினாலோ என்னவோ மதுரை எனக்கு ஒரு வித்தியாசமாய் பட்டது. வழக்கமாய் ஒத்தக்கடையிலிருந்தே கூடவே வரும் மைக் செட்களும் சரி, பந்தல், கட் அவுட்களும் சரி இந்த தடவை ஏதோ வழக்கத்தை விட எண்ணிக்கையில் குறைந்ததாய் ஒரு illusion. ஒரு வேளை அது உண்மையாய் இருந்தால் அரசியல்வாதிகளுக்கு மிக்க நன்றி. (ம்துரையை சுத்த படுத்த முயல்வதற்காக...) ஆனால் ரொம்பவும் மாறி போகவில்லை மதுரை. அதே மண் வாசனை. அதே மாடு முட்டும் கலரில் சட்டை அனிந்த இளைஞர்கள். பெண்கள் மட்டுமே கொஞ்சம் நாகரிகத்திற்கான மாற்றங்களில் அடியெடுத்து வைக்கிறார்கள். I was able to sense the transition of this big village to a metropolitan. நாகரிக மாற்றங்களை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது மதுரை. Anyways.. I pray Her Holiness Meenakshi to save Madurai from losing its cultural back bone amidst these changes. இந்த மாற்றங்களும் ஏதோ ஒரு நல்லதுக்குத்தான்.. அப்புறம் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று வரிந்துக் கட்டிக் கொண்டு புறப்பட்டிருக்கும் என்னைப் போன்ற அற்ப மானிடப் பதர்கள் மெல்லுவதற்கு வேறு விஷயம் இல்லாமல் போய் விடுமே...


என்னதான் இங்கே சென்னையில் மாச கடைசியில் பிச்சை எடுத்தாலும் சொந்த ஊருக்குப் போகும்போது மட்டும் பந்தாவிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. இறங்கியவுடனேயே ஆட்டோவை பேரம் பேசி வீட்டிற்க்கு சென்றேன். இதில் ஆட்டோ காரன் காமெடி தான் தனி. நம் கையில் ஒரு பெட்டியையும் laptopஐயும் பார்த்த வுடனேயே அவன் ரேட்டை தீர்மானித்துவிடுகிறான். (ஆட்டோ ரேட்டுகள் பெட்டிகளால் தீர்மானிக்கப்படுகின்றன... எப்பூடி.. நாங்களும் கவிதை எழுதுவோம்ல..) சாதாரணமாய் 30 ரூபாயில் போக வேண்டிய முருகன் தேட்டருக்கு அவன் கிட்டத்தட்ட சொத்தையே எழுதி கேக்க... வடிவேலு ரேஞ்சுக்கு ஒரு ரீயாக்சனைப் போட்டு விட்டு நகர்ந்தேன். பிறகு கொஞ்ச நேரத்தில் இன்னொரு ஆட்டோகாரர் (கவனிக்கவும்.. 'ர்') வர அவர் என் சம்பளத்தை மட்டுமே எழுதி கேட்ட காரணத்தினால் இக்கரைக்கு அக்கரை பச்சை என அதில் ஏறி வீட்டுக்கு போனேன்.

--தொடரும்...(இது வரைக்கும் படித்ததையே தாங்க முடியாதவர்களுக்கு, அடுத்த தொடரின் திருப்திக்கு நான் கியாரண்டி தரப் போவதில்லை.. எதற்கும் முடிந்தால் படித்து பாருங்கள்)