Saturday, December 16, 2017

கிளிஞ்சலுக்கு வெளியே...

ஒரு வழியாக ஆறு வருட வாழ்க்கை மெதுவாக ஒரு முடிவுக்கு வருகிறது.

அஞ்ஞாத வாசம் என்று சொல்லும்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இராஜ வாழ்க்கைதான். வேண்டியதெல்லாம் வாய்த்த வாழ்க்கை. பயணங்களும் அனுபவமும், சந்திதத மக்களும் என ஆறு வருடங்களும் அருமையாகக் கடந்து போனது.

இத்தனையுடன் இப்போது வேறு ஒரு ஊருக்குக் கிளம்ப வேண்டும். எந்த ஊர் என்று இன்னமும் தெரியாது. ஆனால் நிச்சயாம இந்த நாட்டில் இருக்க முடியாது. ஆறு வருடங்களுக்கு மேல் இந்த நாடும் வந்தேறிகளை இருக்க விடுவதில்லை. இந்த நாட்டின் சட்டம் அப்படி.

ஒரு வேளை இந்தியா வருவதாக இருந்தால், எனக்குக் கிடைக்கப் போகிற ஆகச்சிறந்த மகிழ்ச்சிகள் நான்கு

1. என் வீடு
2. வண்டி
3. நண்பர்கள்
4. சோறு

என்ன இருந்தாலும் நம் வீடு நம் வீடுதான். எங்கே எந்த வீட்டில் இருந்தாலும், சொந்த வீட்டைக் காட்டிலும் சொர்க்கம் இருக்கப்போவதில்லை. எலி வளையானாலும் என் வளை. நம் comfort zone என்பதை யாராலும் மாற்றியமைக்க முடியாதுதானே. வீடு என்பது வீடு மட்டுமல்ல. அது நினைவுகள் இரத்தமும் சதையுமாய் சேர்ந்து கட்டிய கூடு. சம்பாதித்த அத்தனை பணத்தையும் சேர்த்து போட்டு வாங்கிய புத்தகங்களோடு, அப்பா அம்மாவின் நினைவுகளுமாய் கூடி நிற்கிற வீட்டில் நண்பர்களுடன் களித்திருத்தல் சாலச்சுகம்.

என் ஈருருளியை வாங்கி இன்னமும் முழுதாக மனதுக்குத் திருப்தியாக நெடும்பயணம் போனதில்லை. கொஞ்சம் கரை ஒதுங்கி ஆசுவாசப்பட்டபின் அதையும் முடிக்க வேண்டும்.

நண்பர்களையும் சோற்றையும் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. நான்மாடக்கூடலில் இவையிரண்டுக்கும் பஞ்சமே இல்லை.

உலகம் வெகு வேகமாக சுழல்கிறது. காலமும். மனிதர்களும் அவரவர் நிலையில் அவரவர் பாட்டுக்கு சுழன்று கொண்டுதான் இருக்கிறார்கள். சுழற்சி நின்று போனால் அவ்வாறான அகால வேளையில் தூக்கி எறியப்படுகிறார்கள் இந்த மனிதர்களும். மஹாகணம் பொருந்திய இப்பூமியில் ஒட்டியிருக்க சுழற்சிதான் காரண கர்த்தா. பௌதீக ரீதியிலும் சரி தர்க்க ரீதியிலும் சரி.

Anyway...

இனிமேலேனும் நிற்காமல் எழுத வேண்டும், எந்த காரண காரியத்திற்கும் நிற்காமல். எழுத்து ஒருகாலத்தில் வடிகாலாய் இருந்தது. எனக்கு மட்டுமன்றி என் உற்றார் உறவினர் என அனைவருக்கும்.  மனிதர்களற்ற வெளியில் வனவிலங்காய், Feral child ஆகத் திரிந்த போதும், பின்னொரு காலத்தில் மனிதர்களே வேண்டாமென ஒதுங்கியிருந்த போதும், பின்  நமக்கென ஒரு மனுஷி, அந்த அத்துவான வெளியில் சஞ்சரிக்கத் தொடங்கிய காலத்தில் எழுத்தெனும் வடிகால் தேவைப்படாமல் போயிற்று. இப்பொழுதும் தேவைப்படுவதில்லைதான். ஆயினும் உள்ளங்கை அரிப்புக்கும் உள்ளத்தின் அரிப்புக்கும் எழுத்தை காட்டிலும் ஒரு நிவாரணி இருந்துவிடப்போவதில்லை.

“எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும்போது சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்”


Tuesday, November 1, 2016

பிறகு...

நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் எழுதுகிறேன். இதுவரைக்கும் எதுவும் எழுதாதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவுமில்லை. ஆயிரம் ஆயிரம் நீர்க்குமிழிகள் உடையும்போது இந்த ஒரு குமிழியை மட்டும் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது?

பிழைப்புக்காக ஊர் ஊராய்த் திரிவது இந்த வாழ்க்கை என்பது இப்பொழுதுதான் கரும்புகையென மேலே கவிய ஆரம்பித்திருக்கிறது. இத்தனை நாளாய் ஒரே இடத்தில் வேரூன்றி இருந்துவிட்டு திடுமென பெயர்த்து எடுத்து இன்னொரு இடத்தில் நடப்படுவது எவ்வளவு வலி? பறக்காத விதை வாழாது என்பது இயற்கையின் நியதி. Survival of the fittest என்பதுதான் நிதர்சனம் போல.