Thursday, May 27, 2010

என் தேவதை

ஒவ்வொரு இரவிலும்
பிறந்து
காலையில் மரிக்கிறாள்
என் தேவதை.

கருப்பு அங்கியில்
ஒற்றை குடுவையுடன்
அவள் அங்கும் இங்கும்
ஓடி
உயிர்ப்பை
உணர்த்துகிறாள்

எனக்கும் அவளுக்குமான
காலம்
ஒலியில்லாமலேயே
கரைகிறது.

சூரியன்
உதிக்கிற தருணத்தில்
மின்னல் மறைகிற
பிரபஞ்சத்தினூடே
தானும்
ஒரு புள்ளியாய்
முற்றிலும் கரைகிறாள்
என் தேவதை
எனக்கான காலத்தையும்
கைக்கொண்டு..

Monday, May 24, 2010

:)

Saturday, May 22, 2010

பெயரில்லாக் கவிதை

பகல் விழுங்கிய
இரவின் கண்
நம்மை
மறந்து விட்டிருக்கிறது

உலகம் முழுதும்
உறங்கும்போது
நாம் இருவர் மட்டும்
காரணமில்லாதத்
தேடல் ஒன்றில்
மூழ்கிக் கிடக்கிறோம்

சிந்திக் கிடக்கிற
மதுவிலும்
கவிழ்ந்துக் கிடக்கிற
கோப்பைகளிலும்
வழிந்து கொண்டிருக்கிறது
நம் காதலும்
உன் கண்ணீரும்...

Friday, May 21, 2010

வாழ்வும் வீழ்வும்

கரிய திரையில்
எங்கோ தோன்றி
எங்கோ மறைகிறது
ஒரு மின்மினி
கால் படாத தரையில்
சுவடு பதிய
நடந்து
பாசி மண்டிய குளத்துள்
அது
அமிழ்கிறது
அரை நாழிகையின்
கணத்தில்
முற்றிலுமாய் விளங்கிற்று
என்
வாழ்வும் வீழ்வும்..

Thursday, May 20, 2010

சுயமதிப்பீடு

கடல் கொண்ட ஆழத்தில் நான் மீனாய் மிதக்கிறேன்
மணல் கொண்ட கரையினில் நான் நண்டாய் ஊர்கிறேன்.
அவனிருக்கும் அவைதனிலே நான் சிட்டாய்த் திரிகிறேன்
உலகிருக்கும் வெளிதனிலே நான் மீனாய் பறக்கிறேன்..

நானன்றி ஏதுமில்லை என்றே சிரிக்கிறேன்
நானாக நானில்லை என்றும் அறிகிறேன்
வாணாளின் வனப்பில் நான் என்னைத் தொலைக்கிறேன் - இங்கே
வந்துபோகும் வாழ்க்கை அலையின் வேரை தேடினேன்

Tuesday, May 18, 2010

இது நம் பொறுப்புநான் தனியாக சொல்ல ஒன்றும் இல்லை. இந்த படம் சொல்லும் நாம் செய்ய வேண்டியவற்றை...

Wednesday, May 12, 2010

எனக்கும் அவனுக்குமான பந்தயம்

எனக்கும் இறைவனுக்குமான
பந்தயம்
நிற்காமலே
தொடர்கிறது

ஒவ்வொரு முறையும்
என்னை
வெல்லவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறான் அவன்

வென்றதாய் நினைத்து
எக்காளமிடும்போது
புரட்டிப்போட்டு
சிரிக்கிறான்

மீண்டும் மீண்டும்
எனக்கும் இறைவனுக்குமான
பந்தயம்
நிற்காமலே
தொடர்கிறது.

Monday, May 10, 2010

50 வது பதிவு

இது எனது 50 வது பதிவு... இந்த பதிவுலகில் 50 என்பது அளவில் சிறியதுதான் என்றாலும் என்னளவில் இது மிகப்பெரிய சாதனை.


என்றைக்கோ பேனாவைப் பிடித்து எழுத ஆரம்பித்தது. நடுவில் எதுவுமே எழுதாமல் விட்டு தூர்த்துப் போயிருந்த நினைவின் ஊற்றுக்கண்ணை சுத்தப்படுத்தி மீண்டும் தோண்டி எடுத்து ஊறச் செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. ஆயினும் இத்தனை பிரயத்தனத்திற்குப் பிறகும் ஓரளவிற்கு படிக்கும்படியான எழுத்துக்கள் என்னிடமிருந்து வந்திருக்கின்றனவா என்றால் கேள்வி மட்டுமே மிச்சம்.


ஜனரஞ்சகமான எழுத்துக்கள் அவ்வளவு சீக்கிரம் உற்பத்தியாவதில்லை. அதற்கு சாதாரணத்தை விட ஒரு படி மேலேயும் அதீதத்தைவிட ஒரு படி கீழேயும் சர்வ ஜாக்கிரதையாய் முயல வேண்டியிருக்கிறது. சிறியதும் பெரியதுமானப் பத்திகளைக் கொண்டு ஐம்பது என்ற கணக்கைக் கொண்டு வரலாமேயொழிய அதற்கான மதிப்பைக் கொண்டு வருவது எழுதுபவனின் விஷயானுபவமும் அவை எழுத்துக்களில் பிரதிபலிக்கிற பாங்கும்தான். அவையே ஒரு மதிப்புமிக்க வாசக வட்டாரத்தில் ஒரு எழுத்துக்காரனை அறிமுகப் படுத்தி வளர்த்துவிடுகிறது. அந்த வகையில் நானே கொஞ்சம் பெரிய மனுஷத் தோரணைக்காட்டி மூக்கை நுழைத்து சேர்ந்து கொண்ட வட்டங்கள் சில. கொஞ்சம் மரியாதையான, அதே சமயத்தில் நான் எழுதுவதையும் மதித்து கேலிக்கூத்தாக்காத வட்டம் இது.


எழுதுகிறேன் பேர்வழி என கைக்கு வந்ததையெல்லாம் கிறுக்கி புத்தக இடுக்குகளிலும் பழைய புத்தகங்கினூடேயும் ஒளித்து வைத்திருந்ததெல்லாம் ஒரு காலம். பின்னாளில் என் எழுத்துக்களையும் ஏதோ ஒரு ஊடகத்தில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற அவா லேசாக தட்ட ஆரம்பித்தது. தன் பிள்ளையை அழகு படுத்தி ஒரு சிம்மாசனத்தில் வைத்துப் பார்க்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அதே ஆசைதான் எனக்கும். ஆனால் நான் எழுதுவதையெல்லாம் நிராகரிக்காமல் எல்லாவற்றையும் பிரசுரிக்கிற சஞ்சிகையோ இல்லை ஒலி/ஒளி ஊடகமோ எங்குள்ளது? அப்படி கொஞ்சம் சிந்திக்கையில் எங்கோ பொறிதட்டி எனக்கு கிடைத்துதான் இந்த பதிவு எழுதும் உத்தி. முதலில் ஒரு பரீட்சார்த்தமாய் ஆரம்பித்த இந்த முயற்சி பிற்பாடு ஒரு வெறி போல விடாமல் இதற்கெனவே சிந்திக்க வைத்தது தனி கதை. ஒவ்வொரு விஷயத்தையும் உற்று கவனிக்க வைத்தது இந்த பழக்கம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்து இன்று தட்டுதடுமாறி கிறுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னையும் நம்பி பின் தொடர்கிற பதினாறு பேர். இப்படியாகப் போகிறது எனது இந்த பதிவுலக வாழ்க்கை.


பதிவுலகம் எனக்கு ஒரு பரவலான வாசிப்பனுபவத்தை தந்திருக்கிறது. Biasedஆகவே இருந்த எனது வாசிப்புக் களம், இன்று பல முனைகளுக்கும் விரிகிறது. எல்லாவற்றையும் தூக்கம் வராமல் வாசிப்பதற்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. பதிவெழுதுகிற பழக்கம் எனக்கு வந்திராவிடில் இவையெல்லாம் எனக்கு கைவந்திருக்குமா என்பது சந்தேகம் தான். எழுதுவதற்கு சோம்பியிருந்த காலங்களில் என்னைத் தொடர்ச்சியாக எழுத வைத்தது இந்த ஆர்வம் தான். அதுவுமல்லாமல் இந்த வெளியில் எனக்கு கிடைக்கிற சுதந்திரம் வேறு எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் எழுதுவதை ஒரு கணிணித்திரையில் உலகமெங்கும் பார்க்கும் வகையறியும் போது ஒரு பெருமிதம் பொங்குகிறது. சிறு குழந்தை செய்வனவற்றை பாராட்டும்போது அதற்கு தோன்றுகிற உணர்ச்சி போல எனக்கும் தோன்றுகிறது. இந்த உணர்ச்சி மேலும் மேலும் என்னை ஓட வைக்கிறது. கைகளை கால்களை ஆட்டி ஆட வைக்கிறது. நன்றி நண்பர்களே!


நான் இனியும் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த ஆர்வமும் இதே மகிழ்ச்சியும் தான். மற்றபடி ஒரு குழந்தைக்கு, ஒரு beginnerக்கு கிடைக்கிற அங்கீகாரமும் ஊக்கமும் கிடைத்தாலே போதும். என் வண்டி ஓடிக் கொண்டிருக்க...

:)இனம் புரியாத ஒரு உணர்வுடன்,

நாளைப்போவான்...

Friday, May 7, 2010

ஔரொபொரொஸ்

பெயர் தெரியாத
மரத்தின் கிளையில்
எதையோ நினைத்துக்
கரைகிறது
ஓர் காக்கை

இரவின் கரியதிரை
கரைதலில்
இரண்டாய் கிழிகிறது

கரைதல்
நிற்கின்ற நொடியில்
அனைத்தையும் விழுங்குகிறது
சலனம் மறைத்த
இன்னொரு இரவு

Thursday, May 6, 2010

பெயரில்லாக் கவிதை

காலை நேரத்து
தெருப்புழுதிகளை
இறைத்துவிட்டு செல்கிறது
காற்று

போகிற சிறுவர்கள்
கல்லெறிந்து பார்க்கிறார்கள்
சிலர்
கிளைபிடித்து
தொங்கிச் செல்கின்றனர்.

பனிரெண்டு மணி நேரத்துடன்
தன் சேவையை
முடித்துக் கொள்கிறது
சூரியன்.

இத்தனை யுகங்களும்
ஒரேவிதமாய்
பூக்கள் உதிர்க்கிறது
இந்த மரம்
நட்டுவிட்டு சென்ற
அசோகருக்கும்...
நடந்து செல்கின்ற
மனிதர்களுக்கும்...

Wednesday, May 5, 2010

நசையறு மதி கேட்டேன்... - குப்பைமேடு 2

நசையறு மதி கிடைத்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்.

பாதி பிரச்சினைகள் இருக்காது, நசையறு மதி கிடைத்தால். உலகமெல்லாம் புத்தர்களாய் ஒரு மெகா சாமியார் மடமாய் மாறிப்போகும். எங்கு பார்த்தாலும் எந்த ஒரு சலனமும் காட்டாத மனிதர்கள், எதற்குமே ஆசைப்படாத ஒரு மரமாய் நடந்துகொண்டிருப்பார்கள். சண்டை கிடையாது சச்சரவு கிடையாது, எதற்கும் தர்க்கம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. இயேசுவிற்கும் அல்லாவிற்கும் இந்துக்கடவுள்களுக்கும் இன்ன பிற கடவுள்களுக்கும் எந்த ஒரு கோரிக்கையும் வராது. அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சௌகரியமாக இருப்பர். இன்னும் ஏதேனும் பாக்கியிருப்பின் அதை கேட்க மனமும்  வராது கடவுள்களுக்கு.

வெள்ளிக்கிழமை அம்மனுக்கு படையல் தேவையில்லை. ஏனெனில் மனிதனுக்கு எதுவும் தேவையில்லாத போது கடவுளுக்கும் எதுவும் தேவைப்படுவதில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான பாகுபாடு சுத்தமாய் மறைந்து கடவுளும் மனிதனும் கிட்டத்தட்ட ஒன்றாய்ப் போன நிலைக்கு செல்வோம்.(தத்வமஸி!?) பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்ப்பட்ட மனநிலை பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நிலையிலேயே நமக்கு கிட்டிவிடும். அத்தனையும் துறந்த துறவு நிலை, இன்னும் சொல்லப் போனால் சமாதி நிலை என மனிதன் தானறியா பரிமாணங்களைக் கடந்து போய்க் கொண்டிருப்பான்.

இன்னொரு பக்கம், கொஞ்சம் practicalஆய் யோசித்துப் பார்த்தால், ஆசையில்லாத மனிதன் பிணம். எதற்கு ஆசை என்ற ஓரு மன நிலை, உயிர் வாழ்வதையே வீண் என்று கருத வைத்து விடும். ஆசையில்லாத மனிதன் முழு மனிதனே அல்ல. பசி வயிற்றின் ஆசை, ஏக்கம் மனதின் ஆசை, காமம் உடலின் ஆசை, பார்வை கண்களின் ஆசை. இப்படி உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் தனக்கென ஒரு ஆசையோடு இயங்கும்போது இவை அனைத்தின் கூடாய் இயங்குகிற மனிதன் மட்டும் எப்படி ஆசையின்றி இருக்க முடியும்? ஆசைப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதே ஆசைதானே! இப்படி ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலிலும் தனக்குரிய ஆசையினை வெளிப்படுத்துகிற அணுக்கள் கட்டிய உலகில் நசையறு மதி சாத்தியமா?