Monday, December 26, 2011

உயிர்க்குமிழிக்கு வெளியே...

ஒரு குளிர் இரவின்
மௌன மென் புஷ்பமாய்
சினேகித்துத் தழுவுகிறது
மரணம்

ஆயிரம் அண்டத்து
சப்தப் பிரவாகத்தில் ஆழ்த்தி
மோனக் கரைசலில்
அமிழ்த்துக் கரைக்கிறது
அது

காலத்தின் மண்பிண்டங்கள் நாம்

ஒவ்வொரு கணமும்
ஏதோ ஓர் மாந்திரீகனால்
கும்ப நீர் தெளித்து
உயிர்த்தெழுப்பபடுகிறோம்

சடப்பிரக்ஞை
அற்றுப்போனதான நொடியொன்றில்
சேர்ந்தே அறுந்து விழுந்திற்று
தேவப்பிரசன்னமும்

மூன்றாகும் உலகம்
என்று
விசித்து அழுகின்றது
காற்று
மூன்றாம் உலகின்
மகத்துவம் உணர்த்தாமல்

நானும் நீயும்
உயிர்ப்பந்து எறிந்து விளையாடும்
கடவுளின்
சுயகற்பிதங்கள்

Tuesday, December 6, 2011

பெயரிலாப் பெருமர விருட்சத்தின் கண்ணீர்

நெடுமரத்தின் வாதைகள்
கிளிகளுக்குத் தெரிவதில்லை
ஆழ்ந்து வளர்ந்து
பின் அழிந்து போன
விருட்சத்தின் வேர்களில்
அமர்ந்து
அவை கொத்துகையில்
சிதறி ஓடும்
விருட்சத்தின் கண்ணீரும் செந்நீரும்
நெடுநிலம் பரந்து
நிழல் தந்த விருட்சம் விதிர்த்துச் சொல்லும்
தன் பட்டுப் போன கதையை
இது வரை எந்த கிளிகளும்
அதை உணர்ந்து கொள்ள
எந்தனித்ததில்லை
இருப்பினும்
காற்றின் அளாவலில்
கலைந்து எழுந்து
எதிர்நோக்கும் விருட்சம்
தன் கதை உணரும்
காதல் கிளியை

Sunday, October 23, 2011

உன் திரு நினைந்த பொழுதொன்றில்...

இருணம் படர்த்திக் கிடக்கிறது
எம் இரவெல்லாம்

சில சமயம்
யாக்கை விதிர்த்து
ஏக்கப் பெருமூச்செறிந்து
எழும்புகிறேன்

மேகத்தாளில்
மழைத்துளி கொண்டு
உன் மதிவதனக் கவிதையை
எழுதித் தொலைகிறேன்
மிளிர் ஸ்வர்ணத் தாரைகளில்
கரைந்து வழிகிறது
என் சோகம் வடித்த
கண்ணீர்

நிசப்தப் பிரவாகங்களை
ஒவ்வொரு நொடியும்
உன் கொற்றப் புன்னகை
கிழிப்பதாய்
கனாக் காண்கிறேன்

காணி நிலத்திடையே ஒரு வீடு
பச்சை கசிகிற
மூலையில் அமர்ந்து
மழை ஓவியம் வரைகையில்
தூரத்தே நீ
பன்னீர் புஷ்பத் தூறலில்
கொடி முல்லைக்கு
நீர் ஊற்றிக்கொண்டிருந்தாய்

மற்றை நாள்
மேலைச் சூரியன்
வெட்கச் சிவப்பில்
செம்மழை ஆடிக்கொண்டே
சித்திர வீணையொன்றில்
வர்ணங்களை சிதற விட்டுக் கொண்டிருந்தாய்

மேகங்களை கொண்டு
சிலை வடித்துக் கொண்டிருந்தேன்
நிற்சலனப் பெருவெளியில்
நீ மோனப்புன்னகை
உதிர்த்துக் கொண்டிருந்தாய்
மேகங்கள் உயிர்பெற்றன

கொற்கை முத்துக்கள் பதித்த
கோயில் ஒன்றில்
நீ புகுத போது
கன்னிச் சிப்பிக்குள்
மழை புகுதபோல் தோன்றிற்று

ஆடை களைந்து
நிர்வாணமாய் நிற்கிறது
எம் ஆன்மா
நின் உயிரெனும் ஒளி படரும் நொடி தேடி!

Wednesday, August 10, 2011

எனக்கும் எனக்குமான உயிர்மொழி

அடர் வானின் விளிம்பினின்று
நிரம்பி கசிகின்றன
உயிரின் வர்ணங்கள்
எழுத்துருவில்லாத் தனிமொழியொன்றில்
சிறையெடுக்கப்பட்டிருந்தது
மழையின் மொழி
அமிழ்ந்து மேலெழும்
உயிரின் ஒலியில்
பீடிக்கப்பட்டு
படமெடுத்தாடுகின்றன
இரவின் சர்பங்கள்
மனது இலயிக்கும் பொருள்தேடி
அலைகையில்
மறைந்தே போகிறது
யாக்கையின் விதிர்ப்பு
எழுத்தும் ஓசையும் வற்றிப் போனதான
சந்தியில்
நீள்கின்றன காத்திருப்பின் தருணங்கள்
மழைப்பீலியின் ஸ்பரிசம் கண்ட இரவொன்றில்
எனக்கும் எனக்குமான உயிர்மொழி

Friday, March 25, 2011

வாழ்வெளி போதையில்...

சுற்றிச் சுழலும்
பெரு நதி வாழ்க்கையில்

கரை தேடி மிதக்கிறது
நாதியற்ற படகொன்று
மூள்தலுமின்றி
மீள்தலின் சுகமுமன்றி
தரைத் தொடத் தவிக்கையில்
பற்றி இழுத்தல்
ஏதுவாகிறது
சொர்ணப் பட்சிகளுக்கு
கொச்சக் கயிற்றால்
இழுபடினும்
விடிவதாயில்லை படகிற்கு
சேரத் தவிர்ப்பது
படகா இல்லை
நதியா?

Monday, March 21, 2011

தூஉம் மழை!

நிலா மழை
மழை நிலா
இரண்டுமே அழகு
ஒவ்வொரு மழைத்துளியும்
தாங்கிச் செல்கிறது
ஒரு நிலவை
விண் சிதறி மண் வீழ்கையில்
முளைத்தெழும்
அமானுஷ்யங்கள்
ஆற்றங்கரைப் புற்களால்
கழுவப்படுகின்றன
மழை நிலா
நிலா மழை
இரண்டுமே அழகு!

Monday, March 14, 2011

ஏழாம் அறிவு

                                   சாதிபூதாதிதைவம் மாம் சாதியக்ஞம் ச யே விதூஹ்
                                   ப்ரயாணகாலேபி ச மாம் தே விதுர் யுக்தசேத ஸாஹ்


மெல்லிய அதிர்வுடன் தலை சிலிர்த்தபடி உட்கார்ந்திருந்தான் அவன்.

" 'சிங்களவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. வெளியே செல்லும்போது கொத்துச்சாவியுடன் செல்வார்களாம். அது வெளியே இருக்கிற தீய சக்திகளிடமிருந்து தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது.'

இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வரிகளுக்கும் கணிப்பொறியியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றாலும், அதில் செல்கிற செய்திகளுக்கும் இந்த வரிகளுக்கும் சம்பந்தம் உண்டு. Cryptography என்று அழைக்கப்படுகிற இது ஒரு கலை. உள்ளே இடப்படுகிற செய்திகளையும் சங்கேதங்களாக மாற்றி வெளியுலகம் தெரியாதபடிக்காய் இரகசியமாக அனுப்புவதே Cryptography. இதைப் பற்றிய படிப்பு cryptology. இந்த வருடத்தின் மிக முக்கியப் பாடங்களுள் இதுவும் ஒன்று. கவனம். "

அவனுக்கு எதுவும் புரிந்தது மாதிரி தெரியவில்லை. இன்னமும் தலையைத் தட்டியபடிக்கே உட்கார்ந்திருந்தான்.

'அப்புறம் இன்னொன்று. தீயசக்தி, பேய், ஆவி, பில்லி, சூனியம் ஏவல் எல்லாம் பொய் என்று நிரூபித்துவிட்டார்கள் நம் விஞ்ஞானிகள். கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் இவையெல்லாம் கட்டுக்கதைகள் என்று உங்களுக்கே புரிய வரும். மனித அனுமானங்களின் விபரீதப் பரிமாணங்களே இவையெல்லாம்.'

மௌனம்......

'தெளிவாய் சொல்கிறேன். ஆதியில் மனிதன் கூட்டம் கூட்டமாய் வாழ்ந்தான். பிறகு உணவுக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, இன்னும் சொல்லப்போனால் கண்டம் விட்டு கண்டம் ஒரு நீண்ட பயணம் செல்ல ஆரம்பித்தான். நடந்தான்.. நடந்தான்... தலைமுறை தலமுறையாக நடந்தான். அவனுக்கு வேண்டியது கிடைத்த இடத்திலெல்லாம் தங்கினான். அந்த இடத்து வளம் போன பிறகு மீண்டும் நடந்தான். மொத்தத்தில் இலக்கற்ற நாடோடியாக இருந்தான் அவன். Homo habilis --> Homo erectus --> Homo sapiens. நடுவில் நியாண்டர்தால், க்ரோமாக்னான் எனக் குழுக்கள்... இவையெல்லாம் பரிணாமவியல். ஆதியில் இயற்கையைக் கண்டு காரணமில்லாமல் பயந்த பழக்கம் அப்படியே ஆழ்மனதில் ஒட்டியது. பிற்காலத்தில் காரணமில்லாமல் ஆரம்பித்த இந்த பயம் பேய்களுக்கும் தீயசக்திகளுக்குமாய் ஒட்டிக் கொண்டது.  இந்த பயங்களும் பரிணாம மாற்றங்களும் இந்த பயங்களைத்தாண்டி இன்னொன்றையும் விதைத்தது. உணருகிற அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் அர்த்தப்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொடுத்தது. இரவில் கரிய இருளில் வெள்ளையாய் செல்கிற புகை மூட்டத்தை அர்த்தப் படுத்திக் கொள்ள முயலுகையில் அதில் ஏதோ ஒரு நெருங்கியவனை அடையாளப்படித்திக்கொண்டு அதை ஆவி எனவும் பேய் எனவும் முடிவுக் கட்டிக்கொண்டது.

முரளி... நீ சொல்லிக்கொண்டிருந்த Quantum Entanglement, energy theory, Theory of Immortality, Omega point theory, Resurrection இவையெல்லாமும் இந்த அமானுஷ்யங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லையென்றும் இவையெல்லாமும் சுத்த humbug எனவுமே உறுதி செய்துவிட்டார்கள்.'

மெல்லிய புன்னகையுடன் மீசையை நீவி விட்டுக்கொண்டார் இராமன்.

முரளி தலையை சொரிந்து விட்டு மறுபடியும் Saganஇல் மூழ்கிக்கொண்டான்.

அவனும் மெல்லியதாய் சிரித்துக் கொண்டான்.

'இன்னொரு விஷயம். அதை சொன்னால் உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் தூக்கிவாரித்தான் போடும். இன்னமும் சொல்லப்போனால் சிலர் என்னை எதிரியாகவோ, இல்லை ஒரு விஷ ஜந்துவைப்போலவோ கூட பார்க்கலாம்.'

எல்லார் கண்களிலும் குழப்பம்.

'கடவுள் என்ற ஒன்றே இருப்பதும் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறிதான். என்னைப் பொறுத்தவரையில் இதுவும் கூட பேய் பிசாசு போன்ற அமானுஷ்யங்களின் இடையே செருக வேண்டிய ஒரு சாதாரண விஷயம்தான்.'

இவ்வளவுதானா என்று ஒரு அலட்சியம்... காலம் காலமாக கண்முன்னே வராத கடவுளை பார்க்கப் பிடிக்காத அலட்சியம்.

'கடவுள் என்பதே ஒரு மாயை. ஏதோ ஒரு விபரீதத்தை கொண்டு வரப் போவதாய் ஆதி மனிதன் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து தப்பிக்க ஒரு அற்ப வடிகால் தேவையாகவிருந்தது. அதற்காகப் படைக்கப்பட்ட ஒரு வஸ்துவே கடவுள். பின்னர் தேவைக்கேற்ப மத குருமார்களும், போலி சாமிகளும் உருவாக உருவாக கடவுள் எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போனான். பின்னர்.. அவனை வேறுபடுத்திக்காட்டி வெவ்வேறு தத்துவங்களை உருவாக்கி மதம் என்ற த்த்வார்த்தங்களை செய்தான். மொத்தத்தில் இந்த மதங்களும் கடவுளர்களும் மனிதனின் சுய நலத்தினின்று உருவானவையே!'

'அப்படியானால் தீர்க்கதரிசனங்கள், தீர்க்கதரிசிகள், Nostradamus, Edgar Caycer, Rasputin?'

'கடவுளே பொய் என்கிற போது தீர்க்கதரிசனங்கள் மட்டும் எப்படி உண்மையாகும்? அதுவும் சுத்த பொய்தான். தத்வமஸி ஒரு வகையான போதை நிலைதான். இப்போது இருக்கும் முதல் தர போதை மருந்துகள் கொடுக்கும் இந்த நிலையை... எவனாவது ஒரு குடிகாரனை நம்புவானா? எதிரே தெரிகிறவனது மன நிலையை எளிதில் புரிந்து கொண்டு அதன் படி சொல்கிற மலிவான மன ஆலோசனை முறைதான் இதுவும். இதோ இதே இடத்தில் நானும் சொல்வேன் இன்று பூகம்பம் வராது... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'

சிரிப்பு.....

தலையை சிலிர்த்துக் கொண்டே எழுந்தான் அவன்.

'வரும்'

'என்னது?'

'பூகம்பம் வரும்'

சொல்லிக்கொண்டிருக்கும்போதே பூமி புரண்டுகொண்டிருந்தது...

அவனும் உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தான், தலையை சிலிர்த்தபடி சொல்லிக் கொண்டே....


பின் குறிப்பு: கதையைத் தொடர, மீண்டும் முதலில் இருந்து படியுங்கள்...

Friday, February 25, 2011

அடர்சாந்துப் பொழுதுகளில்....

அடர்சாந்துப் பொழுதுகளில்
விக்கித்துச் செல்கிறது
சிறகற்றப் பறவையொன்று
கேள்விகளின் அனுமானித்தலில்
கிளர்ந்து எழுகின்றன
சில பச்சையங்கள்
வெப்ப உமிழ்தல்களும்
சூரிய ஸ்தம்பங்களில் மறைகையில்
நிவந்திக்கப்படுகின்றன
சில விடைகள்
காற்றிற்கும் சரி காதலுக்கும் சரி
வீசுவதற்கு
நேரமும் இல்லை!
காலமும் இல்லை!

Monday, January 31, 2011

அடர்கானகத்து புள்ளிமான்

இரவின் கனவு
மிகுகிறது
வாழ்வு மீண்டபின்
சுகித்துக் கிடக்கிற ஆவிகணின்றும்
சுருண்டு படுக்கிற
பிசாசுகளினின்றும்
தப்பியோட முயல்கிறது
ஒளிக் கிரணத்து புள்ளி சூழ்ந்த
மானொன்று
அடர் கானகத்தின்
பச்சையங்களூடாய்
அது ஓடி ஒளிகையில்
ஒவ்வொன்றாய்
காற்றில் கரைந்து போகின்றன
ஒளிர் புள்ளிகள்
முடிவிலா பச்சை நிறத்து
அடர் இருட்டுக்குள்
பயணிக்கும்
நீங்களும் காணலாம்
புள்ளிகள் தேடி அலையும் மானை!
அல்லது
மான் தேடி அலையும் புள்ளிகளை!

Thursday, January 27, 2011

கனவுகளை சுமந்தபடி!

முதல் சொல்
முதல் முத்தம்
முதல் அணைப்பு
மறக்க முடியாததாகவே இருக்கிறது
இன்று வரையில்.
வேட்கை தணிந்த இரவொன்றில்
ஆசை களைந்து எழுகையில்
நீ முன்னிலும்
அழகாகியிருந்தாய்
ஒரு மலர்ந்த தாமரையைப்போல.
பின்னொரு மழையிரவில்
கதைகள் பேசிக் கிடக்கையில்
ஒளிக்கும் இருளுக்கும்
இடையே
ஓர் ஆளரவமற்ற
மாயப்பிரபஞ்சம் காட்டினாய்.
காதல் என்றதொரு சொல்கூட
தோலில்லா தேகக்கூடாய்
விளங்கிற்று
நம் வார்த்தைகளற்ற வெளியில்.
உனக்கும் எனக்குமான
இடைவெளி
குறைந்து வந்ததை
புதைவாழ்வில் அமிழ்ந்திருந்த
நீயோ நானோ
அன்று
அறிந்திருக்கவில்லை
நிலவுதிரும் ஒரு நாளில்
பெயர் தெரியா பறவையொன்று
தொடுவானில் கரைவதைப் போல
நீ கரைந்து போனாய்
உன் தடம் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.
என்னுள் இருந்து
நீ கண்சிமிட்டிக் கொண்டிருந்தாய்.
இன்னமும் அழகாய்த்தான் இருக்கிறது
நீயற்ற வாழ்வெளியில்
நிழலற்ற மனிதனாய்
நின் கனவுகளை சுமந்தபடிக்கு வாழ்வது!

Thursday, January 20, 2011

உன்னிலும் அழகாய்! .

அதிகாலையில்
நீ இட்ட கோலத்தினின்று
உயிர்த்து ஓடின
அன்னபட்சிகள்
சில

மேகச் சாரல்களில்
மூழ்கி எழுந்து
தலை சிலிர்த்தாய்
வானம் சிலிர்த்துப் பொழிந்தது
வைர மழை

உணவென சமைத்து வைத்தாய்
ஒவ்வொரு அரிசியும் அமிழ்தமானது

எதற்காக வெளியே நின்று
தொழுகிறாய்
உள்ளே செல்
நாங்கள் உன்னைத் தொழுகிறோம்!
பேசும் தெய்வத்தைப் பார்க்க
எங்களுக்கும் ஆசைதான்!

மரங்களும் கொடிகளும்
நடனமாடுகின்றன
நீ
நடந்து வரும் தாளத்திற்கேற்ப!

என்ன என்னவோ
ஏதேதோ செய்கிறாய்
நீயே அறியாதபடிக்கு
அவை
உன்னிலும்
அழகாகின்றன!

Sunday, January 16, 2011

பெற்ற பட்சிகளுக்காய்!

சில பல சமயங்களின் வெப்பம்
என் மீதத்தின் மீதாய்
கவிகிறது
தருண வாழ்க்கையின் சகடைகள்
எப்படி உருட்டப்பட்டாலும்
தாயத்தையே காண்பித்திருந்தன
இந்த கருவெளிக்கு அப்பாலான
பிரதேசத்தில்
நினைவுகளின் மடிப்பில்
அமிழ்ந்து
அழிந்து போன
கீற்றுகள் மீள் பிரவாகம் கொண்டு
பொங்குகையில்
நானாகிய நீயும்
நீயாகிய நானும்
இரு பிம்பங்களாய் பிரிந்து விட்டிருந்தோம்
எத்தனையோ பிறவிகளாய்
அமிழ்ந்து விட்ட மயக்கத்தில்
நீயின்னும் இருக்கையில்
சில பல சமயங்களின் வெப்பம்
என் மீதத்தின் மீதாய்
கவிகிறது
நாம் பிரிந்த தருணத்திலிருந்து
எல்லாமே என்னை
எதற்குள்ளோ
அமிழ்த்துப் போகின்றன
ஒவ்வொரு தருணமும் நான்
எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே
என் துயரம் சொல்கின்ற
எச்சக்கவிகளை
இன்றேனும்
என் உடைந்து போன முனை
எழுதித் தொலைக்க வேண்டும்!

Friday, January 14, 2011

கனவுகளைப் பரிசளிப்பவன்

இந்திர நீலத்து
கல் ஒன்றை
கரைத்துக் குடிப்பதாய் கனவொன்று
நான்
விஷம் குடிப்பதற்கு முதல் நாளில்
குடித்த பிறகு
கரைந்து கொண்டிருக்கும் மணிகளிலெல்லாம்
வெள்ளை புறா பறப்பதாய்
கனவு
ஒவ்வொரு கணமாய்
ஒவ்வொரு செல்லாய்
அழுகிக் கொண்டிருக்கையில்
மகிழம்பூ சிதறிப்போன
மண்தரையில் புரண்டுகொண்டிருப்பதாய் ஓர் கனவு
எல்லாம் முடிந்து
மேலெழும்பிக்கொண்டிருக்கையில்
ககனக் கனவுகளை குத்தீட்டியில் சொருகி
புன்னகையுடன் எய்வதற்காய்
காத்துக்கொண்டிருந்தான்
கனவுகளைப் பரிசளிப்பவன்!

Saturday, January 8, 2011

முதன்முதலாய்!

இங்கே நடமாடி கொஞ்ச நாட்கள் ஆகி விட்டன. கொஞ்சம் என்ன கொஞ்சம். ரொம்ப நாளாகிறது. முகப்புத்தகத்தில் கொஞ்சம் சுறுசுறுப்பாய் இயங்குவதும் இதற்கு ஒரு காரணம் என்றாலும் அதையும் மீறிய ஒரு சோம்பேறித்தனம்தான் காரணம் என்று பட்டவர்த்தனமாய் சொல்ல மனசாட்சியையும் கொஞ்சம் தொட வேண்டும். வேலைப்பளு என்ற ஒரு சமாதானம் எல்லாவிடங்களுக்கும் மிக கச்சிதமாய் பொருந்துகிறது. அதையே இந்த இடத்திற்கும் பொருத்திப்பார்க்கிறேன். நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். ஒரு நாளைக்கும் இருபத்தி நான்கு மணி நேரமும் இங்கு பற்ற மாட்டேனெங்கிறது என்பதிலும் கொஞ்சம் உண்மையின் சாயல் கலந்திருக்கத்தான் செய்கிறது. சத்தியமாய் ஒரு கோப்பை தேனீராவது கிடைக்கும் அளவிற்கு பார்த்து பார்த்து பொய் சொல்லவேண்டியிருக்கிறது.


இது, இந்த வருடத்தில் நான் எழுதுகிற முதல் பதிவு. 2010 பல வகைகளில் புதிய நண்பர்களை பெற்றுத்தந்திருக்கிறது. பல புதிய தளத்திற்கு என்னை கொண்டு சென்றிருக்கிறது. போக வேண்டிய, போகக்கூடாத பல இறுதிகளையும் தொட்டு வந்திருக்கிறேன். மொத்தத்தில் கடந்த ஆண்டும், கழிந்த தருணங்களும் நல்லதோ தீதோ புது புது அனுபவங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. சில சோகங்களும் சில சந்தோசங்களும் இருந்தாலும் இவற்றையெல்லாம் நான் மறுபடியும் நினைத்துப் பார்ப்பதில் ஏனோ மகிழ்ச்சிக் கொள்கிறேன்.

பல புதிய நண்பர்கள் 2010இல் இணைந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் இந்த பதிவுலகம். எனது பதிவுகள், எனது எழுத்துக்கள் எத்தனைப்பேரைச் சென்றடைகின்றன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நானாக கொஞ்சம் பெரிய மனித தோரணைக்காட்டி மூக்கை நுழைத்துக் கொண்ட வட்டங்கள் சில. எனது பார்வையை அவையும் அவற்றின் பங்கிற்கு விசாலாமாக்கின. விசாலப்பார்வையில் விழுங்கும் அளவிற்கு இன்னமும் வளரவில்லையென்றாலும் குறுகலாய் இருந்த நினைவுப்பாதை இப்பொழுது விரிவுபட்டிருக்கிறது. இன்னமும் கொஞ்சம் தெளிவாய் சிந்திக்க முடிகிறது. பல தரப்பட்ட மக்களிடமும் சாதாரணமாய் பேச கற்றுத் தந்திருக்கிறது. சரியோ தவறோ பேசி முடித்த பின்னால் யோசிக்கிற பழக்கத்தைதான் கொஞ்சம் மாற்ற வேண்டியிருக்கிறது, இதுவரை இதனால் எந்த பிரச்சினையும் இல்லையென்றாலும் இனிமேலும் வராமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே!

நிறைய புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. படிக்கிறோமா இல்லையா என்பது இரண்டாவது விஷயம்.ஆனால் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட படித்து முடிக்கும் தறுவாயில் இருக்கிறேன். ஆனால் படிக்கப்படாமல் இருக்கிறது வாழ்வின் மிச்சப் பக்கங்கள். இன்னமும் எத்தனை காலம், எத்தனை வாழ்க்கை தேவைப்படும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுவரை படித்திருக்கிற பக்கங்கள் எல்லாம் சுவாரஸ்யம் மிக்கவையாகவே இருந்திருக்கின்றன. வாழ்வின் ஹாஸ்யம் ஒவ்வொரு எழுத்திலுமே தெரிகிறது. இன்னமும் ஆயிரம் ஜென்மங்கள் எடுக்க வேண்டும். கர்மப்பலன் இன்றி!

கொஞ்ச நாட்களாய்(வருடங்களாய்!) என்னிடமிருந்து விட்டுப் போயிருந்த மரபுக்கவிதைப் பழக்கத்தை மறுபடியும் கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் தூர்த்துப் போயிருந்த கவிதைக்கண்களை தூர்வாரும்வரை தடுமாறத்தான் செய்கிறது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் சரளப்படுகிறது. இன்னமும் உழைக்கவேண்டும். என்ன இருந்தாலும் புதுக்கவிதையைவிட மரபுக்கவிதைகளின் சுகமே தனி. என்னதான் காதலியின் அரவணைப்பு கிடைத்தாலும் அம்மா மடியின் சுகமே தனி தானே!

என்னயிருந்தாலும் 2010 அதன் வேலையை செவ்வனே ஆற்றிவிட்டு போயிருக்கிறது. என் வேலையை சரியாக செய்திருக்கிறேனா என்பது என்னால் கணிக்க இயலாது. அது இன்னமும் பரிசீலனைக்கு உட்பட்ட்தாகவே இருக்கிறது. 2011உம் அதன் வேலையை சரியாக செய்யும். இன்னமும் பொதுவாக சொல்லப்போனால் காலம் அதன் வேலையை சரியாகவே செய்கிறது. நாம் செய்து கொண்டிருக்கிறோமா?