Saturday, November 21, 2009

இலங்கைத்தமிழில் ஒரு கதை...

இதுவரை இலங்கைத் தமிழில் நான் எந்த சிறுகதையும் படித்ததில்லை. படிக்கவும் வாய்ப்பு கிடைத்ததில்லை. மதுரை, கொங்கு, நெல்லை என பரவலாக அறியப்பட்டத் தமிழுள், இலங்கைத் தமிழில் மட்டும் இது வரை எந்தவொரு கதையும் புதினமும் தமிழக வெகுஜனப் பத்திரிக்கைகளில் அடிக்கடி வந்ததாகத் தெரியவில்லை. ஒரு வழியாக இந்த வாரம் விகடனில் வந்த சிறுகதை 'புதுப் பெண்சாதி' படித்தேன். இலங்கையின் மணம் அந்த ஐந்து பக்கம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

கதையின் களம் போராளிகளும், போர்க்குணமும் திணிக்கப்பட்ட மண் என்றாலும் (நான் பிறந்த காலத்தில் இருந்து இலங்கை என்னிடம் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது). கதையின் களம் ஒரு சாதாரண ஈழக் குக்கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. கதையின் நாயகியே முன்னிறுத்தப்பட்டிருக்கிறாள். ரொம்பவும் சீக்கிரமே முடிந்த மாதிரி ஒரு பிரமை. என்னைக் கேட்டால் அப்படித்தான் இருக்க வேண்டும். ரொம்பவும் வர்ணனைகளுடன் வருகிற கதைகள் சீக்கிரமே அலுத்து விடும். கடைசி வரை அலுக்காமல் ஆனால் கதையின் சாரமும் கரையாமல் இருக்கிற கதைகள்தான் இப்போது போணியாகின்றன. ஓடவும் செய்யும்.... ஆனால் ஐந்து பக்கங்களுக்குள்ளாக இலங்கையின் கலாச்சாரமும் வாழ்க்கைமுறையையும் புரிந்து கொள்ள முடிகிறது.

முதல் இரண்டு பக்கங்களில் எங்கேயும் நடக்கிற சாதாரண நிகழ்ச்சிகளுடன் கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. கடைசி ஒரு பக்கத்தில் தான் குறைந்த பத்திகளூடே போரும், அதனால் திசைத்திருப்பப்படுகிற அவ்விடத்து மக்களின் வாழ்க்கையும் ஒரு வகையான மறைபொருளாய் உணரக்கூடிய ஒரு சோகத்துடனே விவரிக்கப்படுகின்றன. மொத்ததில் கதை ஒரு இனம் புரியாத ஆற்றாமையையும் ஒரு வித சோகத்தையும் நம்மை உணரவைக்கிறது. மீட்டெடுக்கிற வலிமை இருந்தும் முடியாமல் போன ஆற்றாமை என பிசைகிறது இந்த கதை.

தமிழர்களின் தேசம், கைவிட்டுப் போனபின் இனி இது போன்ற கதைகளிலும், கட்டுரைகளிலும் தான் அதைப்பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று நினைக்கும்போது பெருமூச்செறிவதையன்றி வேறு வழியில்லை. இனி இது போன்ற முற்காலத்து அழகியலையும், இக்காலத்து ரணங்களையும் வலிகளையும் தாங்கி வருகிற இவைதான் நமக்கு இனி சுவடுகள். கண்ணீரே வாழ்க்கையாகிப் போன இந்த மக்களுக்கு இனிமேலாவது ஏதேனும் ஒரு ஆறுதல் கிடைக்குமா என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம். வெளிச்சம் கிடைக்கட்டும்.....

Monday, November 16, 2009

எழுத்தூடல்

எழுதுவதாய் எத்தனித்து
எடுத்தேன் என்
முதல் எழுத்தை.
விடிவதற்குள் முடிக்கிற அவசரம்.
முதல் எழுத்து
என்னிடம்
எழுதப்படுகிற
விஷயம் கேட்டது.
எழுத்துக்கு
அது தேவையில்லையென
எழுத ஆரம்பித்தேன்.
நானும் தேவையில்லையென
எழுத்தும் போனது.
இன்னமும் அலைகிறேன்.
எழுத முடியா மோனத்திற்கான
எழுத்துக்களைத் தேடி...

Tuesday, September 15, 2009

Evergreen Lovers

To ,
Tintumol
UKG A.

Dear Tintumol, I love you. My dream I see you. Everywhere you. You no, I live no.I come red shirt 2morrow. You love I, you come red frock. I wait downmango tree. You no come, i jump train. Sure come...
yours lovely,
TutumonStd 1 B

-------------------------------------------------------------------------------------------------
Reply....by Tintumol....

Darling, your letter mama see. Papa beat me beat me so many beat me.I cry. i cry. So no come to mango tree. No jump train. I love you.See another day. I no red frock. Only green.

You love me, you love me you green shirt. Give I gift. I see you with pinkumol.Where you go.. NO talk to her. Okay My dream also only you

Lovely
Tintumol...

Wednesday, September 9, 2009

Cartoon


Courtesy: Jophy Joy

Sunday, September 6, 2009

பெயர் தெரியாத பறவை

என்றைக்கும் போல
இன்றும்
வானம் புரண்டு கொண்டிருக்கிறது
குதிரைகளும் யானைகளும்
தறிகெட்டு ஓடுகின்றன
வயல் வெளிகளின் நடுவே
புற்களும்
ஜன்னலின் அனுமதிக்கப்பட்ட
வெளிகளின் வழியே
நானும்
வெண்ணிற வானத்தை
வெறிக்கின்றோம்
திக்குகள் ஏதுமற்ற
வெளியில்
யாருக்கும் தொடர்பில்லா
பெயர் தெரியாத
பறவையொன்று
பறந்து சென்றது
எந்த சலனமுமிலாமல்
மீண்டும்
வெண்ணிற வானத்தை
வெறிக்கின்றோம்
மற்றொரு
பெயர் தெரியாத
பறவையைத் தேடி!

Thursday, September 3, 2009

கையளவு வாழ்க்கை

மனிதன் பல சமயங்களில் தனது சுயத்தை இழந்து விடுவதும், பின்னர் எங்கோ யாரிடமோ, மீண்டும் அடைய முடியாத தனது சுயத்தைக் கண்டு ஒரு ஆதங்கப் பெருமூச்செறிவதும் சாதாரணமாய் நாம் எங்கும் காண்கிற ஒன்று. ஒவ்வொரு மனிதனின் தேடலும் எதற்காகவோ யாருக்காகவோ முடக்கப்படுகிறது. அல்லது அவனது வழி மாற்றப்படுகிறது. திசைத் திருப்பப்படுகிறான் மனிதன். எங்கோ எதற்காகவோ அதுவும் எந்த ஒரு காரணமும் அறியாமல் தொலைக்கிற இந்த விசயங்களினால் நமது தனிமனித சுதந்திரம் பாதிக்கப்ப்டுகிறது. எதற்காகவும் அல்லாத, ஒரு அர்த்தம் புரியாத, சுய தேடல் மௌனங்களினூடே நிகழ்ந்தாலும், பூஜ்ஜியமே வாழ்க்கையாய் மனமொப்பாத முடிவுக்கு ஒவ்வொரு கணமும் தள்ளப்படுகிறோம்.

ஆனால் இன்னொருவரின் சந்தோஷத்திற்காக தன் சுயத்தை இழப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது. உதாரணத்திற்கு இன்று வந்த ஒரு மின்னஞ்சல். வழக்கமாய் வருகிறது போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாய், கொஞ்சம் உருப்படியாய் ஒரு மின்னஞ்சல்.

ரொம்பவும் நோய்வாய்ப் பட்டிருந்த அந்த நபர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே எழுந்து உட்கார அனுமதிக்கப்பட்டிருந்தார். அதுவும் நுரையீரலில் கோர்த்துப் போயிருந்த நீரை அப்புறப் படுத்துவதற்காக. அதற்கு மேல் உட்கார வைத்தாலும் அவரால் உட்காரமுடியாத நிலை. நோய் உடம்பிலிருந்து மனம் வரை அத்தனையையும் தின்று செரித்திருந்தது.
அதே நிலையில் இன்னொரு மனிதன். ஆனல் எழுந்து கூட உட்கார முடியாத நிலை. படுத்த படுக்கையாகவே இருக்கிற மனிதன். வெறும் மருந்துகளும், மாத்திரைகளுமே உலகம்.

எப்படியோ அந்த இருவரும் நண்பர்களானார்கள். வாழ்க்கை, மதம், வீடு, மனைவி, தொழில் என எல்லாவற்றைப் பற்றியும் பேசினார்கள். வலியும் வேதனையும் அவர்களை இணைத்திருந்தது.

தனக்காக அனுமதிக்கப்பட்ட அந்த ஒரு மணி நேர இடைவேளையில் ஜன்னலொர மனிதன் எழுந்து ஜன்னலின் வெளியே இருந்த உலகத்தை தனது நண்பனுக்காக விவரிக்கத் தொடங்குகிறான். வெளியே தெரிந்த வெளிச்சம், உலகம், மனிதர்கள், என படுத்திருந்த அந்த மனிதனின் கருப்பு வெள்ளை உலகத்திற்கு கொஞ்சம் சாயம் பூசுகிறான். அந்த மனிதனும் தான் உண்மையாகவே வாழுகிற அந்த ஒரு நொடி உலகத்திற்காக தனது நாட்களை எதிர்பார்க்கிறான்.இப்படியே கழிகிறது நாட்கள்.

கொஞ்சம் காலம் கழித்து ஜன்னலோரத்தில் இருந்த மனிதன் இறந்து விடுகிறான். அன்று காலையில் அவனுக்கு வழக்கம் போல் மருந்து கொடுக்க வருகிற செவிலி அவன் இறந்து போயிருக்கக் கண்டு துக்கத்துடன் அவனது உடலை அங்கிருந்த பணியாளர்களை அழைத்து அப்புறப்படுத்த சொன்னாள். அவனது உடல் அப்புறப்படுத்த பின்பு அவனருகில் இருந்த அந்த மனிதன் அந்த செவிலியிடம் அந்த இடத்திற்கு தன்னை மாற்ற முடியுமா என்று கேட்க, அதற்கு ஒப்புக்கொள்கிறாள் அந்த செவிலி. பின்னர் அந்த இடத்திற்கு அவன் மாற்றப்படுகிறான்.

புதிய இடம் ஜன்னலோரத்திருந்தது. தனது நண்பன் தனக்காக வருணித்த அந்த காட்சிகளை காண்பதற்காக மிகவும் முயன்று சிரமப்பட்டு எழுந்தான் அவன். ஆனால் அங்கு அவன் பார்த்ததெல்லாம் வெறும் சுவர் மட்டும் தான்.
இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவன் அங்கிருந்த செவிலியிடம் கேட்டதற்கு பின் தான் தெரிகிறது அந்த ஜன்னலோரத்தில் இருந்த அவனது நண்பனுக்கு பார்வை தெரியாத விஷயம். அவன் சொன்னதெல்லாம் படுத்திருந்த அவனது நண்பனை உற்சாகப்படுத்துவதற்காகவே!

இந்த கதையை பல சமயங்களில் இதற்கு முன் நாம் படித்திருக்கலாம். ஆனால் அந்த நொடி மட்டும் வருந்தி விட்டு மீண்டும் லௌகீக வாழ்க்கையின் கட்டுக்குள் வந்து விட நேர்கிறது. சக மனிதனுக்கு செலுத்த வேண்டிய அன்பு, நாம் அவனுக்கு செய்கிற கைமாறு அல்ல. அது ஒரு வகையான சுகம். வாழ்க்கையின் செறிவுகளில் நாம் சந்திக்கிற மனிதர்கள் ஆயிரம் ஆயிரம். எல்லாரையும் எல்லா இடங்களிலும் திருப்தி படுத்துவது என்பது இயலாத காரியம் தான். ஆனால் நாம் பார்க்கிற சக மனிதர்களுக்கு அந்த ஒரு வினாடி நாம் தருகிற திருப்தி அவர்களுக்கு பெரிதாகத் தெரிகிறதோ இல்லையோ நம்மை ஒரு கணம் நினைத்துப் பார்த்து பூரிக்க வைக்கிறது. இதனால் நம் சுயத்திற்கு இடைஞ்சல், நமது வாழ்க்கையில் இன்னொருவரின் தாக்கம் இவற்றிற்கெல்லாம் வாய்ப்புகள் அதிகம் எனிலும், மற்றவர்களின் சுகத்திற்காக நமது சுயத்தை இழப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த கையளவு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் ஒரு முடிவற்ற மோனத்தைத் தேடியே போகின்றன. நாளுக்கு நாள் வாழ்க்கையின் மீதான ஈர்ப்பும், அதன் வெளிகளில் திரிவதற்கான நேரமும் நம்மிடம் மெல்ல மெல்ல தொலைந்து வருகிறது. இதையெல்லாம் எப்படி மீட்கப் போகிறோம்? வாழ்க்கையின் யதார்த்தத்தை, அதன் உள்ளுறை அர்த்தத்தை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்? காலத்தின் மீது திணிக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் கேள்விகளைப் போல் இந்த மானுடப் பிரபஞ்சத்தை இந்த கேள்விகளும் சுற்றி வரட்டும்....

Thursday, August 27, 2009

இதுவும் கடந்து போகும்

இன்று உலகின் மிகப்பெரிய தகவல் களஞ்சியமான Wikipediaவில் சுற்றிக்கொண்டிருந்தபோது இந்த தொடரை பார்க்க நேர்ந்தது.

"And, this too, shall pass". "இதுவும் கடந்து போகும்".

இதற்கு analogousஆக சில புறநானூற்றுப் பாடல்களைகூட முன் வைக்கலாம். ஆனால் அவை எந்த எந்த பாடல்கள் என்று எனக்கு அவ்வளவு அறுதியிட்டு கூற முடியாததால் அந்த முயற்சி (இப்போதைக்கு!) கைவிடப்படுகிறது. (எனினும் எங்காவது காணக்கிடைத்தால் நிச்சயம் முன்வைக்கிறேன்)

இதுவும் கடந்து போகும்... எத்தனை சத்தியமான வார்த்தைகள். உலகின் நிலையாமையை மூன்றே வார்த்தைகளில் விளக்க முற்படுகிற ஒரு முயற்சி. இதன் வரலாறும் கொஞ்சம் சுவையாய் இருந்தது.

அரசவையில் இருந்த சாலமன் அரசர், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான அமைச்சரான பினையாவை (Beniah) அழைத்து கேட்டாராம். "பினையாஹ், எனக்கு ஒரு குறிப்பிட்ட மோதிரத்தை நீ கொண்டு வர வேண்டும்.. சுகோத் திருவிழாவிற்கு அதை நான் அணிந்து கொள்ள வேண்டும்" என்றாராம். அதை கேட்ட பினையாஹ் "அப்படி அந்த மோதிரத்தில் என்ன விசேஷம்" என்று கேட்க, அதற்கு மன்னர் "அது ஒரு மாய மோதிரம். யாராவது மிகுந்த சந்தோஷத்தில் இருப்பவன் அதை பார்த்தால் சோகமாகி விடுவான்.. சோகமாய் இருப்பவனையோ அது மகிழ்ச்சிப்படுத்தும்" என்றார். இதைக்கேட்ட பினாயிஹ் அந்த மோதிரத்தை தேடி எல்லா இடங்களிலும் சுற்ற்றுகிறார். கடைசியில் மன்னர் சொன்ன நாளும் வந்தது. ஆனால் மோதிரம் மட்டும் கிடைக்கவில்லை. சாலமனுக்கு அப்படி ஒரு மோதிரம் இந்த உலகத்தில் இல்லை என்று தெரிந்திருந்தாலும் அவர் அமைச்சரிடம் கொஞ்சம் விளையாட நினைத்து இந்த வேலையை கொடுத்திருக்கிறார். இது தெரியாத அமைச்சர் மன்னரின் ஆணையை நிறைவேற்ற காடு மேடு தேடி ஓடுகிறார்..

இவ்வாறாய் தேடிப் போகிற வழியில் ஜெருசலேமிற்கு செல்கிறார் பினையாஹ். அப்போது அங்கு ஒரு ஏழை வியாபாரியின் குடிசையை பார்க்கிறார். அன்றைய பொழுது பாடிற்காக செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த அவரிடம் இந்த பிரச்சினையை சொன்னார் பினையாஹ். அவர் சொல்வதை பொறுமையுடன் கேட்ட அந்த பெரியவர் சிரித்துக் கொண்டே ஒரு மோதிரத்தை எடுத்து நீட்டினார். அதை பார்த்து மகிழ்ந்து பினையாஹ் அதை எடுத்துக் கொண்டு மீண்டும் அரசவைக்கு ஓடினார்.

"என்ன பினையாஹ் கிடைத்ததா? " என்று சிரித்துக் கொண்டே கேட்டாராம் மன்னர். சுற்றி உள்ள அத்தனைப் பேரும் இந்த ஆளுக்கு எங்கிருந்து அப்படி ஒரு மோதிரம் கிடைக்கப் போகிறது என்ற feelஓடு ஏளனமாய்ப் பார்க்க அந்த அமைச்சர் சிரித்துக்கொண்டே மோதிரத்தை எடுத்து மன்னரிடம் நீட்டுகிறார். மோதிரத்தைப்பார்த்த மன்னரின் சிரிப்பு அப்படியே மறைந்தது. . அந்த மாய மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகள் தான் "கிமெல், சயின், யுத்" அதாவது "இதுவும் கடந்து போகும்" (This too shall pass). அந்த நொடி சாலமனுக்கு ஒரு ஞான தெளிவு கிடைக்கிறது. உலகின் இந்த செல்வங்கள் எல்லாம் ஒரு நாள் தூசாகிப் போகிறவை என்ற ஒரு தெளிவு பிறக்கிறது.

"நீர்க்குமிழிக்கு நிகரென்பர் யாக்கை, நில்லாது செல்வம்..." என்று எங்கோ எப்போதோ ஒரு பழைய பாடல் ஒன்றை படித்ததாய் ஞாபகம். இதே அர்த்தத்தை தருகிற வார்த்தைகள். நம் வாழ்க்கையும் அப்படித்தான் போகிறது. என்றோ எப்போதோ கிடைத்த கிடைக்கிற ஒரு நிமிட சந்தோஷத்திற்காக நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். எத்தனைப் பேர், ஒரு நிமிட செலவில் நம் குழந்தையின் உள்ளங்கால்களைப் பார்த்து பூரித்து போய் இருக்கிறோம்? கோவிலுக்கு செல்லும் நமக்கு அங்கு கோபுரங்களில் பறக்கிற புறாக்களை இரசிக்க நேரம் இருக்கிறதா? வார இறுதி நாளின் கொண்டாட்டத்திற்காக ஒரு வாரம் முழுதும் தூங்க நேரமில்லாமல் திரியும் மனிதர்கள் தான் நம்மிடையே அதிகம். நம் தாத்தாவும் பாட்டியும் நமக்காக, நம்முள்ளே விட்டுச்சென்ற கதைகள் யாருக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது? அவர்கள் சொன்ன கதைகளில் ஒரு சதவீத கதைகளையாவது நம் குழந்தைகளுக்காக எடுத்த செல்ல முடியுமா என்றால் அதற்கு முக்கால்வாசி பேரிடம் ஆதங்கம் பொதிந்த, பெருமூச்செறிந்த மௌனம்தான் பதில்.எங்கோ எப்போதோ தொலைந்து போன சுயத்தை இன்று எல்லாரிடமும் தேடிக் கொண்டிருக்கிறது மனது.

வருங்கால நாட்களை நினைத்து நிகழ்கால நொடிகளை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நொடியும் அர்த்தமற்ற மௌனங்களுடன் ஏதோ ஒரு பெயர் தெரியாத கரும்புள்ளியில் கலக்கிறது. இதெல்லாம் எதற்காக? ஏன் இந்த அன்னியப்படுதல்? இவைக்கெல்லாம் விடை எந்த மனிதனால் தர முடியும்?

Friday, August 14, 2009

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் போது உடைமை.
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை

இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!!

Wednesday, August 5, 2009

நடிப்புச் சுதேசிகள் - பாரதி


இந்த பாடல் பாரதியுடையது. எழுதிய காலம் சுமார் 80 வருடங்களுக்கு முன் என்றாலும் இக்காலத்துக்கும் ஒத்து வருவது தான் இந்த பாடலின் சிறப்பு..
இதை இந்த இடத்தில் இந்த நேரத்தில் எடுத்துக்காட்ட எந்தவொரு காரணமும் இல்லை. ஏதோ திடீரென்று தோன்றியது.. அதை அப்படியே ஒரு பதிவார் இங்கே முன்வைக்கிறேன்...


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றிவஞ்சனை சொல்வாரடீ - கிளியேவாய்ச் சொல்லில் வீரரடீ. (1)
கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றிநாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியேநாளில் மறப்பா ரடீ. (2)
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்புகளும்அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியேஅலிகளுக் கின்ப முண்டோ? (3)
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்றபெண்களின் கூட்டமடீ - கிளியேபேசிப் பயனென் னடீ. (4)
யந்திர சாலையென்பர் எங்கள் துணிகளென்பார்மந்திரத்தாலே யெங்கும் - கிளியேமாங்கனி வீழ்வ துண்டோ? (5)
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்செப்பித் திரிவா ரடீ - கிளியேசெய்வ தறியா ரடீ. (6)
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்திஎன்றும்நாவினாற் சொல்வ தல்லால் - கிளியேநம்புத லற்றா ரடீ. (7)
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர்செய்யப்பேதைகள் போலுயிரைக் - கிளியேபேணி யிருந்தா ரடீ. (8)
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்யஆவி பெரிதென்றெண்ணிக் - கிளியேஅஞ்சிக் கிடந்தா ரடீ. (9)
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியேஊமைச் சனங்க ளடீ. (10)
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லாமாக்களுக்கோர் கணமும் - கிளியேவாழத் தகுதி யுண்டோ? (11)
மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்ஈனர்க் குலகந் தனில் - கிளியேஇருக்க நிலைமை யுண்டோ? (12)
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்வந்தே மாதர மென்பார் - கிளியேமனதி லதனைக் கொள்ளார். (13)
பழமை பழமையென்று பாவனை பேசலன்றிபழமை இருந்த நிலை - கிளியேபாமர ரேதறிவார்! (14)
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத்தேட்டில் விருப்புங் கொண்டே - கிளியேசிறுமை யடைவா ரடீ.! (15)
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்சிந்தை இரங்கா ரடீ - கிளியேசெம்மை மறந்தா ரடீ. (16)
பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள்போல்துஞ்சத்தம் கண்ணாற் கண்டும் - கிளியேசோம்பிக் கிடப்பா ரடீ. (17)
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்வாயைத் திறந்து சும்மா – கிளியே!வந்தே மாதர மென்பார். (18)

Monday, August 3, 2009

இந்த கொண்டாட்டங்கள் தேவையா?நேற்று அதிகாலை ஆறு நாற்பதிற்கு துவங்கியது அந்த கூத்து. ஓயாமல் செல்() ஃபோனை துடிக்க வைத்துக்கொண்டிருந்தனர் எனது நண்பர்கள் அனைவரும். மற்ற நாட்களில் வெறும் குறுந்தகவலுடன் நிறுத்திக் கொள்ளும் பயபுள்ளைக எல்லாம் நேற்று அதிசயமாய் கால் பண்ணி பாசத்தை பொழிந்தவுடன் அப்படியே நெகிழ்ந்து போனேன். அதிகாலை(!) கண்விழிப்பும், இவர்கள் பாசமும் சேர்ந்து என் கண்களில் நீரை வரவழைக்க, அத்தோடு ஒருத்தனை போனில் பிடித்து கேட்டபின் தான் விஷயம் தெரிந்தது.. நேற்று நண்பர்கள் தினமாம்.
அடுத்த காலில் இருந்து என்னை அழைத்தவர்கள் எல்லாம் வாங்கிக் கட்டி கொண்டார்கள். எல்லாரிடமும் ஒரே கேள்வியே கேட்கப்பட்டது.
"நேத்து வரைக்கும் நல்லாதானடா இருந்தீங்க? இத்தன வருஷமும் இல்லாம இப்ப மட்டும் எங்க இருந்துடா வந்தது இந்த நண்பர்கள் தினம்?"
இதெல்லாம் விட என் நண்பனுக்கு வந்த கோபம் தான் என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. (கருமம்டா சாமி!)
அவனுக்கு அதிகாலை வந்த ஒரு குறுந்தகவல் கிட்டத்தட்ட பின்வருமாறு இருந்தது. (கவனிக்கவும் 'கிட்டத்தட்ட'!) "தாயின் பாசத்தை உனது நட்பில் காண்கிறேன்". இந்த செய்தியை பார்த்து கொந்தளிந்தானோ இல்லை அதிகாலையிலேயே எழுப்பியதால் கொந்தளித்தானோ தெரியவில்லை. ஆனால் அடுத்த நிமிடம் அந்த தகவலை அனுப்பிய அந்த நண்பருக்கு கால் போட்டு, கொந்தளித்தான். "ஏண்டா நீயும் நானும் பார்த்தே 2 நாள் தான் இருக்கும். இதுல நான் உனக்கு தாய் பாசத்த காட்டுனேனா? ஏண்டா கேவல படுத்தறீங்க" என்று அந்த நண்பனை படுத்தி எடுத்து விட்டான்.
இது ஒரு அதிகாலை துயிலெழுதலால் விளைந்த எரிச்சலில் வெளிவந்த சொற்கள் என்றாலும் இதில் சில பொது நல சந்தேகங்களும் கலந்து இருக்கின்றன. இந்த ஆணிகளையெல்லாம் பிடுங்குவதிலேயே நேற்று முழுவதும் கழிந்தது என்னவோ வேறு விஷயம். சில ஆணிகளை பிடுங்கினாலும் என்னால் பிடுங்க முடியாமல் சுவற்றிலேயே தூர்த்துப் போன சில ஆணிகள் கிடக்கின்றன. அவற்றை தான் ஈண்டு அவ்வையார் போல இல்லாட்டினாலும் என்னளவிற்கு வரிசைப் படுத்தி இருக்கிறேன்.
ஆணி நம்பர் 1. இத்தனை நாள் எங்கு போயிருந்தது இந்த கொண்டாட்டமெல்லாம்? இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்பொழுது மட்டும் எதற்கு இந்த கொண்டாட்டங்கள் எல்லாம்?
ஆணி நம்பர் 2. இருக்கிற தினங்களை வைத்துக் கொண்டே இன்னும் எதுவும் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் எதுவும் இல்லை எனும்போது இப்போது புதிதாய் எதற்கு இந்த கொண்டாட்டங்கள்? (இதை இப்படியும் வைத்து கொள்ளலாம். இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் தேவையா?)
ஆணி நம்பர் 3. அப்படி ஒரு வேளை அப்படி ஒரு தினம் நமக்கு தேவையாய் இருந்து அதையும் நாம் கொண்டாட வேண்டி இருந்தால் அதற்கு அரசாங்க விடுமுறை தேவைப்படுமா? (இந்த புண்ணியத்துல ஊருக்கு போயிட்டு வரலாமேனு தான்.. :) )
ஆணி நம்பர் 4. இதற்கு ராம் சேனா அமைப்பினரின் reaction எப்படி இருக்கும்?
ஆணி நம்பர் 5. ஒரு வேளை அவர்கள் reaction வேறு மாதிரி இருந்தால் யார் யார் எல்லாம் பாதிக்கப் படும் வளையத்திற்குள் வருபவர்கள்? (ஏதோ கொஞ்சம் நாட்டுக்கு உபயோகமா பேசுவோமேனு தான்!)
ஆணி நம்பர் 6. இந்த american hype, american hype என்கிறார்களே ஒரு வேளை இது அதுவாக இருக்குமோ? (இந்த கேள்வி America ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கோஷம் இடுகிற அனைவருக்கும். ஆனால் எனக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் இந்த வார்த்தைகளின் நிழல் கூட படாத, இன்னமும் அமெரிக்க கர்சீப், சிங்கப்பூர் செண்ட் என்றால் வாயைப் பிளக்கிற சராசரி இந்தியர்களுள் நானும் ஒருவன்)
என்னைப் பொறுத்த வரையில் இந்த கொண்டாட்டங்கள் மனித குலத்திற்கு ஒரு வகையான stree busters என்றாலும் அந்த விழாக்களின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டியதாகிறது. For Example, உலக சுற்றுப்புற சூழல் நாள் என்று ஒன்று இருப்பதாகக் கேள்வி. ஆனாலும் இன்னமும் இந்த உலகம் Global Warming பற்றி கூவிக் கொண்டுதானே இருக்கிறது? இன்னமும் பொது இடங்களில் ரயில் வண்டி விடுகிற இம்சை அரசர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? எல்லாரும் கூவும் போது நாமும் கூவி விட்டு பின்னர் அவனவன் வேலையை பார்க்கப் போவது அசல் பிரியாணிப் பொட்டலத்திற்காக கோஷம் இடுகிற உண்மை(!) அரசியல் தொண்டர்களை போல் தான் இருக்கிறது.
இந்த பத்திகளினால் நான் பதிவு செய்ய விரும்புவது இந்த கொண்டாட்டங்களுக்கு எதிரான எனது எதிர்ப்பையல்ல. ஆனால் அந்தந்த தினங்களின் மகத்துவங்கள் அந்த ஒரே நாளுடன் மறந்து போவதற்கு எதிரான எனது எதிர்ப்பையே.. சொல்லப் போனால் உண்மையான நண்பர்களுக்கு என்றென்றும் திருவிழாதான் (கொஞ்சம் பழைய dialogueதான். ஆனாலும் இந்த இடத்தில் எடுத்தாளவேண்டியது அவசியமாகிறது.)


Friday, July 31, 2009

முன்பு ஒரு காலத்தில் இதே இடத்தில் வைக்கப்பட்டிருந்த அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்களேன் என்ற பதிவு யாரும் அர்த்தம் சொல்ல முன் வராத காரணத்தினால் இந்த இடத்திலிருந்து நீக்கப்பட்டது. எனினும் அர்த்தத்தை நானே கண்டுபிடித்து விட்டேன். முயன்றவர்களுக்கு நன்றி!!

Monday, July 20, 2009

நான் வளர்ந்து விட்டேனா??

இது நான் எப்ப செய்த புண்ணியத்தின் விளைவோ தெரியல! நமக்கு நண்பர்களா மாட்டுகிறவர்களின் வயது வரம்பு எல்லாம் ஒன்னு ஒன்றிலிருந்து பத்து வரை. இல்லாட்டி அறுபதிலிருந்து தொண்ணூறு வரை.. (நான் பாத்த அதிக பட்ச வயதே தொண்ணூறு தான். ஏன்னா இவங்க தான் நம்மள நம்பறாங்க.. மத்த எல்லாருமே கொஞ்சம் வெவரமாத்தான் இருக்காங்க...)ஆனாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டாத சினேகம் இதெல்லாம். இந்த குழந்தைகளுக்குள் தான் எத்தனை எத்தனைக் கதைகள்... எத்தனை சின்ன சின்ன உலகங்கள்.... இவங்க உலகத்துக்குள்ள நாமும் பிரவேசிக்கும்போது இவங்க கதைகளோட மட்டும் இல்ல..நம்மோட பால்ய காலத்துக்கு போயிடறோம். H.G. Wellsஒட டைம் மெசின் இவங்க தான் போல...

எங்க வீட்டோட குழந்தை நான் தான்.. வயது, வெறும் 20.. ( சரி.. சரி.. காதுல புகை வரது தெரியுது!! ) கி.பி. 2006 வரைக்கும்.. அதுக்கு அப்பறம் தான் எங்க வீட்டுக்கு ஹரிணி வந்து சேர்ந்தா.. அதாவது எங்க வீட்டுக்கு புதுசா குடி வந்தாங்க ஹரிணியோட அம்மாவும் அப்பாவும்.. இன்னும் சொல்லப் போனா அவ பொறந்தது எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான். அவ வளர வளர என்னோட குழந்தைங்கற இமேஜ் (!) போய் அந்த எடத்துக்கு ஹரிணி வந்துட்டா!... எப்படியோ! இப்ப வரைக்கும் எங்க வீட்டுல அவ தான் குழந்தையா இருக்கா!

நான் சொல்லப் போற விஷயம் நடந்து சுமார் 1 வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்.. நான் கம்பேனியில் சேர்ந்த புதிது(சத்தியமா 'மன்னார் & கம்பேனி' இல்ல). நல்லா பந்தாவா வந்து ஊர்ல இறங்கி இருந்த்தேன்.. இங்கே நாம கிழிச்ச கிழிப்புக்கு ஊர்ல கறி சோறு வேறு.. நல்லா கொட்டிகிட்ட பின்னாடி என்ன பண்றதுன்னு தெரியாம சானல திருப்பிகிட்டு இருந்தேன்...(டிவி யில் தான்.. நம்ம பண்ண பாவத்தோட விகிதாச்சாரங்களின் அடிப்படையில் வச்சு பாத்தா எதிர் வீட்டுல பாட்டி இருக்கறதே பெருசு.. இதுல பார்ட்டி எங்க இருந்து இருக்கும்..) எதுக்கும் உதவாத அதே படங்கள், சில பல மொக்கை ஜோக்குகள்னு வழக்கம் போல பொழுதுகள் வீணாக கழிக்கப்பட்டன..

ஆனால் ஒன்னு.....படிப்பு எங்க படிச்சாலும் வேலை மட்டும் வெளியூர்ல பாக்கனும். ஊரத் தேடி என்னைக்காவது நாம ஓடி வரும் போது அன்றைக்கு அந்த ஊரே நம்மை உபசரிக்கும் பாருங்க.. அந்த சொகத்துக்காகவாவது வெளியூர்கள்ல வேலை பார்க்கனும். ஆனா அதுலயும் ஒரு சூட்சமம் இருக்கு.. பெங்களூர் இல்லாட்டி வடக்கு பக்கம் எங்கயாவதுதான் வேலைக்கு போகணும்.. இங்கனயே சென்னைல வேலை பார்த்தோம்னு வச்சிக்கோங்களேன்.. நம்மள எவனும் மதிக்க மாட்டேங்கறான். இதே வேலையை பெங்களூரிலோ இல்லை வடக்கு பக்கமாக வேறு ஏதோ ஒர் கண் காணாத, பெயர் வாயில் நுழையாத ஊரில் வேலை பார்த்தால் நம்மை ஏதோ வெளி நாட்டு பிரஜை போல பார்க்கின்றனர் இந்த மக்கள். எப்படியோ.. ஒரு பெரிய ஜனக்கூட்டத்தினூடே தனித்து அடையாளம் காட்டப் படுவது எல்லாருக்கும் பிடித்தமான போதை தானே!!

சரி வியாக்கியானத்த விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்.
அன்றைக்கு சானல திருப்பிக் கொண்டு இருந்தவன், திடீர்னு என்ன நினைச்சேனோ தெரியல பக்கத்துல எங்க அப்பா அடுக்கி வச்சிருந்த புத்தகங்கள்ல ஒன்ன எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்... (வேற எதுக்கு? தூங்கறதுக்குத்தான்.. நீங்களா நான் படிப்பாளினு நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.. :)) அது கொஞ்சம் நல்ல புத்தகம்னு நினைக்கிறேன்.. எடுத்த ஐந்தே நிமிடங்கள் தான் அந்த மாற்றம் என்னுள்ளே நிகழ்வதற்கு.. வேற ஒன்னுமில்ல, தூங்க ஆரம்பிச்சிட்டேன்...

அதுவும் இந்த புத்தகத்தை படிச்சிட்டே தூங்கற அந்த சுகம் இருக்கே! அதற்கு ஈடு இணையே இல்லை.. அப்படி ஒரு தூக்கம்.. அதுவும் அந்த 'அரை தூக்கம்' தான் உண்மையிலேயே தூக்கம் எனும் அந்த மாய பிரபஞ்சத்துள் ஒரு உன்னதமான கட்டம். கனவுகள் எல்லாம் நம் இஷ்டப் படி நடக்கிற ஒரு நேரம். அப்போது தான் எனக்குப் பிடித்த ஏதோ ஒரு இடத்தில் உலாவ ஆரம்பித்திருந்தேன்.. கிளிகளும் , பூக்களும் பூத்துக் குலுங்குகிற அந்த நந்தவனத்தில் எங்கோ மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருந்தேன்..
அப்ப தான் தூரத்தில இருந்து ஒரு அழுகுரல். எங்கோ கேட்டது மாதிரி இருந்தாலும் இது போன்ற தோற்ற மாயைகள் நமது கனவுப் பிரதேசங்களில் சகஜம் தானே.. ஆனாலும் இந்த மானுடப் பிறவிகளுக்கே உண்டான ஒரு curiosity. யார் அந்த நிலவு என்று திரும்பிப் பார்க்க உத்தேசித்த போது... 'அண்ணா' என்று மீண்டும் அதே குரல் அழைக்க...

கண்ண தொறந்து பார்த்தா ஹரிணிதான் அவ வீட்டுல இருந்து என்னை சத்தம் போட்டு கூவி கூவி ஏலம் விட்டுட்டு இருந்தா... என்னடானு பதறி அடிச்சு போய் "என்ன ஹரிணி பாப்பா " என்று கேட்டேன்..

அவள் "இங்க வா.. உக்கா' (உட்காரு என்பதின் ஹரிணி version)..
நானும் என்ன பண்ண போகிறாள் என்று யோசித்தபடியே அவளருகில் உட்கார்ந்து "என்ன பாப்பா" என்று கேட்க..

டிவியைப் பார்த்து கையை காட்டி 'அதோ பார் யானை" என்றாளே பார்க்கலாம்...

லிட்டர் கணக்காய் மூஞ்சியில் அசடு வழிய.. யாரும் பார்க்கிறார்களா என்று திரும்பி பார்த்தேன்..

தூரத்தில் ஹரிணியின் அம்மா சிரித்துக் கொண்டே சொன்னார்..

"சின்ன கொழந்தை கூட ஒன்ன பெரிய பையனா மதிக்க மாட்டேங்கறாடா!!!"

என்ன கொடுமை சார் இது!!!

Thursday, July 9, 2009

அவசர அறிவிப்பு!!!!

மதுரைக்கு போன கதை எனக்கே மொக்கையாகத் தோன்றியதால் முதல் episodeஇலேயே அது தொடர்வது தடுத்து நிறத்தப்பட்டது. அதற்காக "அடுத்து வரும் பதிவுகள் எல்லாம் படிக்கிற மாதிரி இருக்குமா கைப்புள்ள?" என்று கேட்கக்கூடாது... ஏனென்றால் அது எனக்கே தெரியாது.. அதனால் தான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் 'இது வரைக்கும் படித்ததையே தாங்க முடியாதவர்களுக்கு, அடுத்த தொடரின் திருப்திக்கு நான் கியாரண்டி தரப் போவதில்லை.. எதற்கும் முடிந்தால் படித்து பாருங்கள்'.

Monday, July 6, 2009

மதுரைக்கு போன கதை

ஊருக்கு போவதற்கு என்று காரணம் ஒன்றும் இல்லை. ஊருக்கு போய் ரொம்ப நாளாகி விட்டதாலும், நம் இருப்பை உற்றாருக்கும் உறவினருக்கும் உறுதி செய்ய வேண்டிய கடமைக்காகவும் போக வேண்டியதாய் இருந்தது. அங்கு ஒரு வேலையும் இல்லை என்றாலும் வழக்கம் போல பலத்த பிரிவுபசாரங்களுக்கு பிறகு கிளம்பி வந்தேன்..

என்னவோ போன வியாழக்கிழமை, திடீரென்று ஊர் ஞாபகம் வந்தது. ஏன் என்றும் தெரியவில்லை. உடனே லீவ் apply செய்து விட்டு கிளம்பிவிட்டேன். ஏதோ இப்போதைக்கு வேலை இல்லாமல் வெட்டியாக இருப்பதால் இதெல்லாம் சாத்தியமாயிற்று.. இல்லாவிட்டால் இன்னேரம் ஏதோ projectஅயே நம்மதான் நட்டமா தூக்கி நிப்பாட்டப் போற மாதிரி சத்தம் போட்டு ஊர கூட்டி இருப்பாங்க... இத்தனைக்கும் நாம பாக்கறது என்னவோ excel sheet, இல்லாட்டி word document proof reading மாதிரியான வேலையாத்தான் இருக்கும். அதுக்கே இப்படி... என்ன கொடுமை சார் இது!

இந்த கலி காலத்தில் தான் off-season, season என்ற பாகுபாடே கிடையாதே.. அதனால் வியாழக்கிழமை அதுவுமா மதுரைக்கு ஏதாவது பஸ் கிடைக்குமா என்று பயந்து பயந்து கோயெம்பேடு என்ற ரத நிறுத்ததிற்க்கு (அதாங்க bus stand) சென்றேன். போவதற்கு ஆட்டோவில் 150 ரூபாய் வேறு. (பிற்பாடு இதையே வீட்டில் பெருமையாக பேசி அப்பாவிடம் வாங்கிக் கட்டி கொண்டது என்னவோ வேறு விஷயம். பின்ன.. மதுரைக்கே unreserved compartmentல் வெறும் 120 ரூபாய் தான்.. ) எப்படியும் இந்த பிறவியிலும் சரி முற்பிறவியிலும் சரி.. நான் புண்ணியத்தைத் தேடியதற்கு வாய்ப்பே இல்லாத காரணத்தினால் எனது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் யாரோ மண் தரையில் நடந்து சென்ற ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்த புண்ணியம் எனக்கு ஒரு ஏசி பஸ் ஒன்று கிடைத்தது. (கடைசி வரை பக்கத்து சீட்டில் யாரும் வராமல் அந்த இரண்டு சீட்டையும் நானே ஆக்ரமித்து வந்தது அந்த புண்ணியத்தின் பக்கவிளைவுகளில் ஒன்று)

வழக்கமாய் பேருந்தை 13-15 மணி நேரம் உருட்டி எங்கள் சாபங்களுக்கு ஆளாகும் ஓட்டுநர்களுக்கு மத்தியில் எங்கள் ஓட்டுநர் ஒரு exceptional case. இரவு 10 மணிக்கு எடுத்த வண்டியை சரியாக காலை 7.30 க்கு கொண்டு போய் சேர்த்தார். அவர் பிள்ளைக் குட்டிகளெல்லாம் நல்லா இருக்குஞ்சாமி.. (இரவு 9 மணிக்கு கிளம்பி மறு நாள் மதியம் 3 மணிக்கு போய் சேர்ந்த வரலாறு எல்லாம் நமக்கு உண்டு என்பதால் ஓட்டுநருக்கு இந்த வாழ்த்துக்கள் அவசியமாகிறது..)


இரண்டு மாத இடைவெளி விட்டு போனதினாலோ என்னவோ மதுரை எனக்கு ஒரு வித்தியாசமாய் பட்டது. வழக்கமாய் ஒத்தக்கடையிலிருந்தே கூடவே வரும் மைக் செட்களும் சரி, பந்தல், கட் அவுட்களும் சரி இந்த தடவை ஏதோ வழக்கத்தை விட எண்ணிக்கையில் குறைந்ததாய் ஒரு illusion. ஒரு வேளை அது உண்மையாய் இருந்தால் அரசியல்வாதிகளுக்கு மிக்க நன்றி. (ம்துரையை சுத்த படுத்த முயல்வதற்காக...) ஆனால் ரொம்பவும் மாறி போகவில்லை மதுரை. அதே மண் வாசனை. அதே மாடு முட்டும் கலரில் சட்டை அனிந்த இளைஞர்கள். பெண்கள் மட்டுமே கொஞ்சம் நாகரிகத்திற்கான மாற்றங்களில் அடியெடுத்து வைக்கிறார்கள். I was able to sense the transition of this big village to a metropolitan. நாகரிக மாற்றங்களை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது மதுரை. Anyways.. I pray Her Holiness Meenakshi to save Madurai from losing its cultural back bone amidst these changes. இந்த மாற்றங்களும் ஏதோ ஒரு நல்லதுக்குத்தான்.. அப்புறம் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று வரிந்துக் கட்டிக் கொண்டு புறப்பட்டிருக்கும் என்னைப் போன்ற அற்ப மானிடப் பதர்கள் மெல்லுவதற்கு வேறு விஷயம் இல்லாமல் போய் விடுமே...


என்னதான் இங்கே சென்னையில் மாச கடைசியில் பிச்சை எடுத்தாலும் சொந்த ஊருக்குப் போகும்போது மட்டும் பந்தாவிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. இறங்கியவுடனேயே ஆட்டோவை பேரம் பேசி வீட்டிற்க்கு சென்றேன். இதில் ஆட்டோ காரன் காமெடி தான் தனி. நம் கையில் ஒரு பெட்டியையும் laptopஐயும் பார்த்த வுடனேயே அவன் ரேட்டை தீர்மானித்துவிடுகிறான். (ஆட்டோ ரேட்டுகள் பெட்டிகளால் தீர்மானிக்கப்படுகின்றன... எப்பூடி.. நாங்களும் கவிதை எழுதுவோம்ல..) சாதாரணமாய் 30 ரூபாயில் போக வேண்டிய முருகன் தேட்டருக்கு அவன் கிட்டத்தட்ட சொத்தையே எழுதி கேக்க... வடிவேலு ரேஞ்சுக்கு ஒரு ரீயாக்சனைப் போட்டு விட்டு நகர்ந்தேன். பிறகு கொஞ்ச நேரத்தில் இன்னொரு ஆட்டோகாரர் (கவனிக்கவும்.. 'ர்') வர அவர் என் சம்பளத்தை மட்டுமே எழுதி கேட்ட காரணத்தினால் இக்கரைக்கு அக்கரை பச்சை என அதில் ஏறி வீட்டுக்கு போனேன்.

--தொடரும்...(இது வரைக்கும் படித்ததையே தாங்க முடியாதவர்களுக்கு, அடுத்த தொடரின் திருப்திக்கு நான் கியாரண்டி தரப் போவதில்லை.. எதற்கும் முடிந்தால் படித்து பாருங்கள்)

Friday, June 26, 2009

முதல் பதிவு

இந்த வலைப்பூவில் எனது முதல் பதிவு.. என்ன எழுதுவது எதைப்பற்றி எழுதுவது என்று தெரியவில்லை.. அதுவும் computerஇல் கொஞ்சம் நோண்டத் தெரிந்த யாரும் இந்த பதிவுகளில் எழுதலாம் என்ற ஒரே ஒரு காரணத்தினால் நானும் இங்கே கொஞ்சம் கிறுக்கிவிட்டுப் போகிறேன் அவ்வளவுதான்..