Wednesday, March 17, 2010

சுயதேடல்

இது
சத்தம் அறுந்த
மானுடனின் கூவல்
உலகம் முழுதும்
புறக்கணித்த
கடைசி உயிரினத்தின்
தேடல்
கறுத்த உடலுக்குள்
கடைசி சொட்டு இரத்தத்தை
கண்டறிகிற
முயற்சி
ஒவ்வொரு முறை
இதை தேடியலைந்து
தோற்கும்போதும்
விளங்குகிறது
காலம் காலமாய்
தேடிக் களைத்துப் போன
காத்திருப்பின் வலி!

Monday, March 15, 2010

தொடர்கவிதை

இது எத்தனையாவது முறை என்பது தெரியவில்லை. ஆனால் எழுதத்தொடங்கி முடிக்காமல் விடுவது எனக்கு இது முதன்முறையில்லை.

எழுதவதற்கு என்று ஒரு கரு அவ்வளவு சாதாரணமாய் கிடைத்துவிடுவதில்லை. அதற்கு நிரம்பவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. ஏதேதோ எண்ணங்கள், ஏதேதோ உணர்ச்சிகள் என்று எல்லாவற்றையும் கட்டுக்கடங்காமல் அலைய விட வேண்டியிருக்கிறது. அப்படி அலைகிறபோது கிடைக்கிற ஏதோ ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிற ஒரு வியாசமோ இல்லை கவிதைகளோ அதே மன நிலையில் எழுதும் போது மிகச் சரியாக முற்றுப் பெறுகிறது. சில சமயங்களில் பாதி எழுதும் போதே ஏதோ ஒரு திடீரென்று முளைக்கிற ஒரு சோம்பேறித் தனத்தால் பாதியிலேயே நின்று விடுகிறது.

இன்று இப்படி ஒரு கவிதையை ஆரம்பித்து பாதியிலேயே விட வேண்டியிருந்தது...

"இது
சொற்களின் அடர்வனம்.... "

அப்படியே ஆரம்பித்து கொஞ்சம் முடித்து வையுங்களேன்... கவிதைக்கு எந்த வரைமுறையும் கிடையாது... எவ்வளவு வரிகள், எதைப்பற்றி என்ற நிபந்தனைகளும் இல்லை...
காட்டுங்கள் உங்கள் திறமையை....

Friday, March 12, 2010

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்

(இது விமர்சனம் அல்ல. விமர்சிக்கும் அளவிற்கு நான் பெரிய எழுத்துக்காரனும் இல்லை. இவை இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பொதுப்படையான பார்வை மட்டுமே.)

ஒரு வழியாக நேற்று தான் கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் படித்து முடித்தேன். நிதர்சனக் கதைகள் என்ற பெயரில் அவரது வலைப்பூவில் எழுதி வந்த கதைகள். ஏற்கெனவே படித்திருந்தாலும் அலுத்துப் போகாத கதைசொல்லியாக இருக்கிறார் இவர்.

இதிலிருந்த கதைகளில் ஒன்று ஏற்கெனவே ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தது. அந்த நேரத்தில் அதை எழுதியவரைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவல் இருந்தாலும் அதற்குரிய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. பின்னர் இந்த புத்தகத்தில் அதே கதையைப் படித்தபோதுதான் தெரிந்தது அதை எழுதியது இவர்தான் என்று. மொத்தத்தில் நமக்கும் ஒரு பெருமை.

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும். புத்தகம் முழுக்க காமமும் காமம் சார்ந்த கதைகளுமே.

மனித உறவுகள் என்றைக்குமே சிக்கலானதுதான். அதை ஆராய முற்பட்டாலும் சரி, இல்லை அதிலேயே இருந்து உழன்றாலும் சரி. இறுதியில் சிக்கலே மிஞ்சுகிறது. அதிலும் மிகச் சிக்கலான ஒரு பகுதி இந்த காதலும் காமமும். இவையிரண்டையும் வெளிப்படையாக பேசவே பயந்த காலம் எல்லாம் உண்டு. இப்போது இதை இவ்வளவு வெளிப்படையாக ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலிருந்து அலச ஆரம்பித்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

அப்படிப்பட்ட ஒரு தலைப்பை முன்னிறுத்தி தனது அத்தனைக் கதைகளையும் நகர்த்தியிருக்கிறார். வாழ்க்கையில் நடக்கிற சின்ன சின்ன விஷயங்களையும் கிரகித்து, ஒவ்வொரு கதைகளும் நகர்ந்திருக்கின்றன. அவரிடம் பேசிய போது சில கதைகள் தன் சொந்த வாழ்க்கையிலேயே நடந்திருப்பதாக சொன்னார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆயிரம் ஆயிரம் கதைகள். அத்தனையையும் உணர்ச்சி மாறாமல் எடுத்துச் சொல்ல ஒரு தனி திறனும் தைரியமும் வேண்டும். ஏனெனில் சில சமயங்கள் எழுத்தின் வேகம் நம்மை கொஞ்சம் பயமுறுத்திவிடும். சில தயக்கங்களுக்கு ஆளாக்கும். அந்த சமயத்தில் எழுத ஆரம்பித்ததை பாதியில் விடக் கூட தோன்றும். அப்படி அது போன்ற எந்த ஒரு இடையூறும் இல்லாமல் கதைகள் சரளமாக நகர்ந்திருக்கின்றன. சொல்ல வந்ததை சரியாக, ஆணித்தரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் worth-read புத்தகம். மனச் சிக்கல்களை நன்றாக அலசியிருக்கிறார் கேபிள். வாழ்த்துக்கள்!!

Tuesday, March 9, 2010

நான் செங்கதிர்

என் முகம்
முழுதும்
சிவந்திருக்கிறது
என்
அத்தனைக் கண்களும்
சிகப்பை
உமிழ்கின்றன.
நான்
அஸ்தமனச் சூரியன்

யுகம் யுகமாய்
பொற்கிரணம் பாய்ச்சிய
என் கண்கள்,
இன்று இரத்தம் பாய்ச்சுகின்றன.
இழுத்து வந்த குதிரைகள்
கால் முறிந்து கிடக்கின்றன.
என் உடைந்து போன சாட்டைகளும்
உருவமற்ற குதிரைகளும்
இன்னுமொரு சாரதியைத் தேடி
காத்துக் கிடக்கின்றன.

வெற்றியை
கொக்கரிக்கிற புள்ளிகளே
நீங்கள்
நட்சத்திரங்களாகவே
இருந்துவிட்டு செல்லுங்கள்.
இன்னொரு சாரதி வரட்டும்
உங்கள்
ஒளியை மழுங்கடிக்க.
என் குதிரைகள் எழுந்து நிற்கட்டும்
உங்கள்
முதுகெலும்புகள் உடைய.

அன்றும் நான்
சிகப்பை உதிர்ப்பேன்
அன்று
நானும் வீறுகொண்டு உமிழ்வேன்
நான்
உதிக்கின்ற செங்கதிர்.

Monday, March 8, 2010

தனிமை

முகம் தொலைந்த
மனிதர்களின் மத்தியில்
ஜன்னலோர இடுக்கின்
வெளிச்சக் கீற்றுகளின் சாரலில்
தெரிகிறது
சிரித்துக் கொண்டிருக்கிற
தாத்தாவின் புகைப்படம்.

Saturday, March 6, 2010

காலசர்ப்பமும் தவளையும்

ஒரு
தவளையின் வாழ்க்கை
நம்முடையது
ஒவ்வொரு கணமும்
பிரபஞ்சப் புற்றுக்குள்
ஒளிகிற
கால சர்ப்பத்தால்
அது
விழுங்கப்படுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாய்
விலகி ஓடி
தாவிக் குதித்து
தப்பிக்க முயற்சிக்கிறது
தவளை.
ஒவ்வொரு கணமும்
புதிதாய் பிறக்கிற
மற்றொரு சர்ப்பம்
அதை
விழுங்கிக்கொண்டிருக்கிறது..

Monday, March 1, 2010

இளவேனிற்காலத்துக் கவிதைகள் - 2ஒரு நரை முதிர்ந்த
மரத்தின் கீழ்
நம் ஜாகை.

புரியாத கதைகள் பேசி
மானுடப்பெருக்கத்தின்
புதிர் கதைகளை
பரிமாறிக்கொண்டோம்
அவை தவறென்று
கருதப்படப் போகிற
சூட்சுமம் புரியாமல்.

உடல் உரசுதல்
அநாகரிகமாய்
உணரப்படுகிற
தருணங்கள் நம்மிடையே
அவ்வேளை கண்டதில்லை.

ஒருவருக்கொருவர்
ஞான போதகனாய்
இருந்த காலத்தில்
இந்த மரம்
மௌனசாட்சியாய்
நின்று
இரசித்துக் கொண்டிருந்தது
தானும்
களங்கப்படப் போகிற
விதியறியாமல்...

மொழியில்லாக் கவிதைகள்

என் கவிதைகளுக்கு
மொழியில்லை
பார்வையற்ற கண்களும்
வெளிறிய முகமுமாக
இருண்ட தடத்தில்
அவை
கால் பதிக்கின்றன.
வெளிச்ச கீற்றுகள்
எப்பக்கத்திலிருந்தும்
தாக்கினாலும்
தாக்காவிட்டாலும்
பாதகமில்லை.
வர்ணம் கலையாத
ஒளிக்கற்றைகளின்
தடங்கள் மட்டும் போதும்
என்
மொழியில்லாக்
கவிதைகள்
முன்னேறிச் செல்ல