Friday, September 28, 2012

சொல்ல சொல்ல இனிக்கும்...


ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்தக வாசிப்பை தொடர விழைகிறேன். எழுத்தின் மீதான வாஞ்சை, அதன் மீதான அளவு கடந்த அபிலாஷை என்ற வார்த்தைகளெல்லாம் லௌகீக பெருங்கடலில் மூழ்கி ஒழிந்து போயின. இதோ இப்பொழுது எதோ ஒரு புள்ளியில் அஸ்தமனமாகி மீண்டும் இன்னொரு புள்ளியில் உதிக்க ஆரம்பித்திருக்கிறது. சூரியனைப்போல. சொல்லப்போனால் ஒவ்வொரு ஆசையும் சூரியன் தான். கிழக்கே முளைத்து மேற்கே பட்டுப்போய் மீண்டும் ஒரு மலையிடுக்கில் மறைந்து ஒளிந்து கொண்டே மெல்லியதாய் அரும்புகிற சூரியன். இல்லை ஒரு விதை. ஏதோ ஒரு மரத்தில் பிறந்து அதன் அருகிலேயே விழுந்து முளைத்து பின் மரம் பட்டுப்போவதையும் பார்த்தப்பின் மழையில்லாமல் வாடி, பின் என்றோ விழுந்த ஒரு மழைத்துளியைக் கொண்டு நம்பிக்கையுடன் எழுகிற பாலவிருட்சம். இது ஒரு புதிய ஆரம்பமா இல்லை விட்டுப்போன ஒன்றின் தொடர்ச்சியா என்று சரிவரத் தெரியாத ஏதோ ஒன்று.
எந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்குவது என்று தெரியவில்லை. ஆனால் எதையாவது வாசிக்க வேண்டும் என்கிற வேகம். வேகம் வேறு, விவேகம் வேறு. விவேகத்துடனாவது எதையாவது எடுத்து வாசித்துத் தொலைக்கவேண்டும். குடிகாரனுக்கு கை நடுங்குவது மாதிரி. பதைபதைக்கிறது மனது.

இந்த இடத்தில், இந்த கான்க்ரீட் காடுகளில் கைகளில் புத்தகத்தை வைத்து படிப்பதென்பது முடியாத ஒரு விஷயமாகிப் போகிறது. அதுவும் இப்பொழுது இருக்கிற வாசஸ்தலத்தில் எங்கு போய் அதை வாங்கி எங்கு வைத்துப் படிப்பது? இந்த எலிவளைக்கு:ள் இருந்து மாயவலையில் தேடுகிறேன். ஏதேதோ புத்தகங்கள் எல்லாம் கிடைக்கின்றன. என்ன இருந்தாலும் அதை கையில் எடுத்து புரட்டிப்பார்த்து வாங்குவதைப்போல சுகம் எங்கும் இல்லை. புதிய புத்தகம் ஒன்றைத் திறந்தால் உள்ளிருந்து ஒரு வாசம் வருமே. அதெல்லாம் இன்றைய குழந்தைகளுக்குத் தெரியுமா என்று கூட தெரியவில்லை. பழைய புத்தகங்களிடையே வெள்ளியாக நெளிகிற புழு, புத்தக வாசம், சிகப்பு, பச்சையென வண்ணமாய் ஊடாடுகிற இழை, அங்கங்கே அடிக்கோடிட்ட வரிகள், ஒட்டிகொண்டு பிரிக்கப் போராடுகிற பக்கங்கள் என புத்தகங்களும் குழந்தைகளுமே ஒரு வகையில் ஒன்றுதான். இரண்டையும் தொடர்பு படுத்திப் பார்க்க, கொஞ்சம் கற்பனா சக்திதான் அபிரிமிதமாய் தேவை.

படிப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். முதல் பத்துப் பக்கங்களை ஓட்டுவது மிகவும் கடினம். கொஞ்சம் முக்கி முனகி பிரம்மப் பிரயத்தனம் செய்து, ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, நெடுத்தீவின் அரக்க வயிற்று கிளிப்பிள்ளையைக் கொன்று விட்டால், பிரபஞ்சப் பேரழகி கிடைக்காமலாப் போவாள்?

-இன்னும்

Monday, May 14, 2012

பாவை


அங்கண் மாஞாலத் தரசர் அபிமான 
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;     
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?     
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,
அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்     
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் 


ஒரு மெலிதான – இரண்டு இலை உரசினால் கேட்குமே அப்படி- ஒரு குரலில் கேட்டு கொண்டிருந்தது ஜனனியின் குரல். வழக்கமாக இப்படித்தான் காலையில் ரக்ஷாவை எழுப்புவாள் அவள். எனக்கு பக்கத்து வீடுதான், இருந்தாலும் அவள் இப்படி பாடுவது எல்லாம் அவ்வளவு சீக்கிரம் கேட்டு விடாது. எப்பொழுதாவது அவர்கள் வீட்டுக்கு காப்பி பொடியோ இல்லை அவர்கள் வீட்டில் காபி சாப்பிடச் சொல்லி அழைப்பு வந்தாலோ இந்த பாட்டை கேட்க வேண்டிவரும். ‘இது என்னடா ஒரு மானங்கெட்ட பொழப்பு’ என்று கேட்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தனிக்கட்டையாக இந்த சென்னையில் குடித்தனம் இருந்தால்தான் தெரியும்... 


எங்கள் தெருவில் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்து வெள்ளச்சாமியைப் போல பல கதாபாத்திரங்கள் உண்டு. ஒவ்வொன்றும், ஒவ்வொரு ரகம். கட்டடங்கள் அடர்ந்த சென்னையில் எங்கள் தெருவில் மட்டும் கொஞ்சம் விதிவிலக்காக ஒரு ஆலமரத்தையும் அதற்கு கீழே ஒரு திண்ணையையும் இந்த காலம் விட்டு வைத்திருந்தது. அதற்கு காரணம் சோமசுந்தரம் தாத்தாவாகக் கூட இருக்கலாம். பிரிட்டிஷ் காலத்தில் ஏதோ ஒரு ஓலைப்பெட்டியை எரித்ததற்காக வெள்ளைக்காரன் அவரை கைது செய்ததும் அதற்குப் பிறகு சுமார் 65 வருடங்களாக அதையே சொல்லிக்கொண்டிருப்பதும் அவரது சாதனைகள். ஏனோ இது போன்ற சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவங்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு பெரியதாக தோன்றவில்லைப் போல.. அதனாலேயோ என்னவோ அவருக்கு தியாகிகள் பென்ஷனும் வரவில்லை. அவரும் ‘போங்கடா ***களா!’ (அவர் பாஷையில்) என்று அதையும் தியாகம் செய்துவிட்டதாகவே சொல்வார். அவரைப் பொறுத்தவரையில் மகாத்மா காந்தியே இந்நேரம் இருந்திருந்தால் கூட அவருக்கு தியாகி பென்ஷன் கிடைத்திருக்காது. சமயங்களில் ஆலமரத்துக்கடியில் படுத்துக்கொண்டு ஏதோ ஒரூ கல்தோன்றி மண்தோன்றா காலத்துப் பாட்டை உரக்கப் பாடிக் கொண்டிருப்பார். அவர்தான் வெள்ளைச்சாமி நம்பர் ஒன்று 


இன்னொருத்தன் என் வீட்டுக்கு பின்வீட்டில் இருப்பவன்,. சென்னைக்கே உண்டான ஏதோ ஒரு வசீகரங்களில் இழுக்கப்பட்டு வேலை தேடி வந்த நவீன யுவராஜாக்கலில ஒருவன். சாதாரணமாய் வாயைத் திறக்காதவன், குளியலறைக்கு உள்ளே போனால் மட்டும் வாயை மூட மாட்டான். ஒரு நாலைந்து பாட்டாவது எடுத்து விடாவிட்டால் அவனுக்கு சரியாக கண் தெரியாது... பீடியை பற்றவைத்தால் தான் சிலருக்கு வரும் என்பார்களே, அது போல இதுவும் ஒரு மேனியா. 

இப்படி ஒரு கூட்டத்துக்கு நடுவே எந்த ஒரு சப்தப்பிரவாகங்களும் இல்லாமல் ரக்ஷாவை எழுப்புவதாலயே அவள் எனக்கு பெரிய மனுஷியாகப்பட்டாள். அதுவுமில்லாமல் இந்த காலத்தில் யார் காலையிலேயே ஓசிகாபி கொடுக்க முன்வருவார்கள்? ராஜுவும் – ஜனனியின் கணவன் – நானும் நல்ல சிநேகம். பக்கத்து வீடு என்பதில் இருந்து கடைக்கு சென்று பலசரக்கு வாங்குவது வரையில். சமயங்களில் சில பல விவாதங்கள். ஞாயிற்றுக்கிழமை மதிய நேர அரட்டைகள் என சந்தோஷமாகவே போகும் இந்த அறை வாசம். 


ஜனனிக்கு ரக்ஷா பிறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. அழகான குழந்தை அவள். மொத்தம் ஐந்து வீடுகள் உள்ள எங்கள் குடியிருப்புக்கே அவள் ஒருத்தி தான் பெண் குழந்தை என்பதால் ஏக செல்லம். எல்லா வீடுகளுக்கும் தூக்கிப்போய் விடுவார்கள். அவளுக்கு அடிக்கடி காய்ச்சல் வரும்.. வந்தால் அந்த குடியிருப்பே அல்லோலப்படும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொன்று... என்ன என்னவோ வந்து குவியும் அவளுக்காக. 


ஜனனி பிறந்தது மதுரையின் பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம். சுத்தமான வைஷ்ணவ குடும்பம். மதுரை கள்ளழகரும் அவர்களும் ஏதோ உறவுக்காரர்கள் போல பேசுவாள் ஜனனி. சிறு வயதிலிருந்தே வைஷ்ணவ கைங்கரியங்கள் அது இதுவென எல்லாவற்றையும் செய்திருந்த்தாள். அவளுக்கு இந்த திருப்பாவை எல்லாம் அத்துப்படி. அதனால்தானோ என்னவோ தினமும் காலையில் முதலில் சொன்ன பத்தியை பாடி ரக்ஷாவை எழுப்புவாள். ரக்ஷாவை எழுப்புவதற்கும் தோதான பாட்டுதான் அது... 


மார்கழி மாதம்... பெண்கள் எல்லோரும் பாவை நோன்பு இருப்பதற்காக பாவை களம புக வேண்டும். ஒவ்வொருவரையும் எழுப்பி கூட்டிக்கொண்டு வருவதற்குள் கோதைக்கு பெரும்பாடாகி விட்டது. புள் சிலம்பி, புள்ளரையன் கோவிலில் வெள்ளைச்சங்கின் விளிக்கின்ற பேச்சரவமும் கேட்டாயிற்று. ஆனால் இருக்கும் எல்லா பெண்களும், கும்பகர்ணன் பெருந்துயில் கொடுத்தது போல மன்னிக கிடந்துறங்குகின்றனர். இவர்களையெல்லாம் என்ன செய்வது? இருந்தாலும் கோதை கொஞ்சம் கூட களைப்படையாமல் ஒவ்வொருவரையாக எழுப்பி பாவைக்களம் புகுகிறாள். வெள்ளி எழுந்து வியாழம் உறங்குகிற அந்த நாள் நேரத்தில், அங்கண்மா ஞாலத்து அரசர் எல்லோரும் கோதையுடன் சென்று இப்பொழுது திருமால் படுத்திருக்கும் அணையின் முன் தலை குனிந்து வணங்கி நிற்கின்றார்கள். கோதை உறங்கிக்கொண்டிருக்கிற கண்ணனைப் பார்த்து கேட்கிறாள் – ‘இப்படி எல்லோரும் வந்து நிற்கிறோமே உனது இந்த சின்னஞ்சிறு கண்கள் எங்களை பார்த்தபடிக்கு விழிக்காதோ? இப்படி சந்திரனும் சூரியனும் ஒரு சேர எழுந்தார்போல உன் கண்களைத் திறந்து நீ எங்களைப் பார்த்தால் அதனால் எங்கள் சாபம் எல்லாம் விமோசனம் பெறாதா?’ கோதை இந்த இடத்தில் தனது மானிட ஒருவத்தையே சாபம் என்கிறாள். ஆனால் கண்ணன் என்னவோ தெய்வம்தான். ரக்ஷாவும் கண்ணனும் ஒன்றாகத்தான் பட்டிருக்க வேண்டும் ஜனனிக்கு, 


காலையில் இப்படி ஒரு பாட்டை பாடி எழுப்பினால் எழுந்திருக்கவா தோன்றும்? ஆனால் அதையும் தாண்டி சிரித்துக் கொண்டே எழுந்திருப்பாள் ரக்ஷா. எழுந்த நொடியில் பல் விளக்க ஓடி பின் வந்த உடன் சூடாக பால். அதிலும் அவளுக்கு பாலை சட்டியுடன் குடிக்க வேண்டும். அதற்காகவே அவளுக்காக பாலை நன்றாக ஆற வைத்து அந்த சட்டியில் வைத்திருப்பார்கள். குடித்து முடித்தவுடன் ஓடிப் போய் தனது பொம்மை கூடையை பார்ப்பாள். தினமும் காலையில் அதில் புதிதாய் ஏதாவது பொம்மை இருக்கவேண்டும் அவளுக்கு. அனால் இல்லாவிட்டாலும் அவளூக்கு அதில் வருத்தமில்லை காலையில் போய் அந்த கூடையை பார்ப்பது அவளது தினப்படி காரியகிரமங்களில் ஒன்று. 


எங்களுக்கு எல்லாம் பொழுதுபோக்கு ரக்ஷாதான். சும்மா இருக்கும்போது அவளை பாடச்சொல்லியோ இல்லை கதை சொல்ல சொல்லியோ கேட்போம். ஜனனி முதல் திருப்பாவையை கற்றுக்கொடுத்திருந்தாள். ஜனனி கூப்பிட்டு சொல்ல சொன்னாலும் உடனே சொல்லிவிட மாட்டாள் ரக்ஷா
‘ரக்ஷா, மார்கழித் திங்கள் சொல்லு பாக்கலாம்...’ 


ஒரு மாதிரி நெளிந்து கொண்டே சிரிப்பாள் அவள், 


‘சொல்லுடிம்மா!! தங்கம் இல்ல?’ 

‘அம்மா எனக்கு அந்த குவி பொம்ம தா..’ 

‘நீ மொதல்ல சொல்லு... நான் தரேன்...’ 

‘என்ன பாட்டும்மா??’ 

‘மார்கழித் திங்கள் சொல்லு...’ 

‘மாகயித் திங்க மதி நினைந்த நன்னாளா 

‘நீராடப் போதுவீ போதுமினோ...’ 


அவளிடம் இதை கேட்டு வாங்குவதற்குள் போதும் என ஆகிவிடும. இவ்வளவு பிரயத்தனங்களுக்குப் பிறகும் கூட அவள் பாடுவது என்னவோ இரண்டு வரியாகத்தான் இருக்கும்... 


ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம்.. இரண்டு மணி இருக்கும், சொந்தமாக நானே சமைத்து விட்டிருந்தேன். அன்றைக்குப் பார்த்து குழம்பும் நன்றாக வந்திருந்தது.. சரியான தீனி.. சாப்பிட்டு முடித்த பிறகு, என்ன செய்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு படத்தை போட்டு விட்டு பார்த்துக் கொண்டே லேசாக கண் அயர்ந்தேன். ஒரு அரை தூக்கம்... லேசாக சொப்பன சஞ்சாரம்.... 


திடீரென என் பேரை சொல்லி அலறுவது போல பிரமை. எழுந்துவிட்டேன். ஆனால் நிஜமாகவே ரக்ஷாதான் அலறிக் கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் சுதாரித்துவிட்டு அவள் வீட்டிற்கு ஓடினேன். ஆனால் சாஷ்டாங்கமாக முன்னாடி ஒரு யானைப் படத்தை பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள். நானும் அவளை மதித்து அவளிடம் போய் கேட்டேன்.. 


‘என்ன ஆச்சு, ரக்ஷா?’ 

'மாமா இங்க வாயேன்' 

கொஞ்சம் நெருங்கிப் போய் ‘என்ன ஆச்சு?’ 

‘இங்க ஒக்கா... (உட்காரு!)’ 

லேசாக முறைத்துக் கொண்டே உட்கார்ந்தேன் 

வேகமாக வந்து மடியில் உட்கார்ந்தாள். 

தொலைக்காட்சியைக் காட்டி ‘அதோ பாரேன் கருப்பு யானை’ என்றாளே பார்க்கலாம்... 


ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்... 
அவள் தன்போக்கில் அமைதியாக படம் பார்த்துக் கொண்டிருந்தாள் இப்போது! 


அவள் கதைகளில் மட்டும் கரடிகள் பேசும். சிங்கமும் மானும ஒரே நேரத்தில் ஒரே மேஜையில் சாப்பிடும். வண்ணங்களும் விளையாட்டுகளும் நிறைந்த உலகம் அவளுடையது. வானத்தின் நிறம் பச்சை. உங்களில் யாருக்காவது தெரியுமா அது? ஆடு சிகப்பு நிறத்தில் இருக்கும், ஹார்லிக்ஸ் செரேலாக் சாப்பிடும். அப்பாவுடன் சேர்ந்து சிங்கம் அலுவலகம் செல்லும். உம்மாச்சியை சரியாக கும்பிடுவாள், எதற்கு கும்பிடவேண்டும் என்று தெரியாவிட்டாலும் கூட. 


சில சமயங்களில் துணைக்கு யாரும் இல்லையென்றாலும் அவளாகவே எதோ சொல்லிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் எதோ ஒரு சினிமாப் பாட்டை முனகிக் கொண்டிருந்தாள் அவள். ராஜுவுக்கு அதை கேட்க வேடிக்கையாக இருந்தது. எங்கள் அன்றைய அரைவைக்கு ஒரு அவல் பொறி சிக்கியது. குழந்தைகள் எப்படி கெட்டுப்போகிறார்கள் என்று ஆரம்பித்து எங்கெங்கோ சென்றது. கடைசியில் ரக்ஷாவிற்கு 10 வயது ஆகும்போது அந்த முட்டாள் பெட்டியை மூட்டைகட்டுவது என ராஜு முடிவு செய்து விட்டு போனான். உண்மையில் ரக்ஷாவை விடவும் அவன் நிறைய கனவுகளை வைத்திருந்தான். தினம் ஒன்று சொல்லிக்கொண்டிருந்தான். 


‘எப்படியாவது அவளை டாக்டர் ஆக்கிடனும்...’ 

‘நல்ல விஷயம்தான். அதுக்கு தக்கபடி இப்ப இருந்தே படிக்க வைக்கணும்ல...’ 

‘ஆமாம்.. ஆனா டாக்டர் ஆனா ஒரு பிரச்சனை இருக்கு’ 

‘என்னப்பா? பணமா?’ 

‘அதில்லப்பா.. கண்ட சீக்காளிங்கள எல்லாம் பாக்கணும், தொடணும்’ 

‘அது சரி... அதெல்லாம் பாத்தா முடியுமா?’ 

‘இல்லப்பா.. பையனா இருந்தா பரவாயில்லைன்னு விட்டுடலாம். பொண்ண போய் இதெல்லாம் பண்ண சொல்ல முடியுமா? நல்லாவா இருக்கும்?’ 

‘அடப்பாவி மனுஷா... இப்படி ஒரு பிற்போக்குத் தனமா இருக்கியே! ‘ 

‘அதுக்கு இல்ல.. என் பொண்ணு டாக்டர் ஆறதுல எனக்கு பெரும தான்... ஆனா இதெல்லாம் நினைக்கும்போது என்னால ஒத்துக்க முடியலப்பா..’ 

‘அப்ப இன்ஜினீயர் ஆக்கிடு...’ 

‘அது கைல அழுக்கு ஓட்டற வேலை.. நீ வேற... ‘ 

‘உன்ன ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. ஏதோ ஒண்ணு... அவள உருப்படியா படிக்க வை...’ 

‘சரி விடு.. இப்பத்தான அவளுக்கு ரெண்டு வயசு... மொதல்ல அவ வளரட்டும்.. பிற்பாடு பாக்காலாம்.. யார் யாருக்கு என்ன என்ன எழுதி வச்சிருக்கோ அதன்படிதான நடக்கும்...’ 

‘அதுவும் சரிதான்... ‘ 


அவளுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே இவ்வளவும் பேசிக்கொண்டிருந்தோம்... அவள் விதியை நாங்கள் தீர்மானிப்பது போல.... 


நாங்கள் தான் இவ்வளவு யோசித்துக் கொண்டிருந்தோமே தவிர ஜனனிக்கு இதைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரமும் இல்லை. அவளுக்கு ரக்ஷாவை பார்த்துக் கொள்வதிலேயே நாள் கழிந்தது. வேறு என்ன வேலை வேண்டும் அவளுக்கு? என்னதான் முற்போக்கு வாதங்கள், பெண்ணடிமை கோஷங்கள் ஆயிரம் ஆயிரம் வந்தாலும் தாய்மை என்ற ஒன்று மரபணுவிலேயே பின்னிப் பிணைந்தது. உண்ணாவிரதமே இருந்தாலும் கூட குழந்தை பசியால் அழும்போது அதை பசியாற்றாமல் எந்த தாயாலும் இருக்க முடியுமா? தாய்மையும் பெண்மையும் அவர்களை அடிமைப்படுத்தும் ஒரு விஷயமல்ல. அது அவர்களை இன்னமும் பெருமைப்படுத்துகிற விசயம் தான். தாய்மையில்தான் இன்னொரு தாய்வழிச் சமூகம் உருவாகும் என்பது நான் கொண்டிருக்கும் நம்பிக்கை. ஆனால் ஜனனிக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரிவதில்லை. அவளுக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை. 


இன்னொரு நாள்... 


முன்பு போலவே ஒரு ஞாயிற்றுக்கிழமை. 


முதன்முறையாக வீட்டில் மீன்குழம்பு பண்ணியிருந்தேன். ஊரில் இருந்து அத்தனை முறை அப்பாவிடமிருந்து செய்முறை கேட்டு மனப்பாடம் செய்து பண்ணியது. ரொம்ப காலத்திற்கு பிறகு மீண்டும் ருசியாக ஒரு சமையல். வழக்கம் போல குட்டித் தூக்கத்திற்கு தயாராகும்போதே ஒரு பட்சி மனசுக்குள்ளே படபடத்தது. இருந்தும் கண்கள் சொருக அப்படியே லேசாக அயர்ந்தேன்.. 


மறுபடியும் ஒரு அலறல்... 


ஆனால் இந்த முறை நான் அழைக்கப்படவில்லை... நானும் ஏதோ ஒரு நினைப்பில் மறுபடியும் அயர்ந்தபோதுதான் எல்லோரும் ஓடும சத்தம் கேட்டது. என்னவோ எதோ என சுதாரித்து எழுந்து வெளியே பார்க்கும்போது ஜனனியும் ராஜுவும் வெளியே ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னாலயே எல்லொரும் ஓட நானும் பின்தொடர்ந்தேன். ஜனனியும் ராஜுவும் நான் பார்ப்பதற்கு முன் அவர்கள் சென்றுவிட்டார்கள். எல்லாரும் கூட்டமாக நிற்க பின்வீட்டுக்க்காரனைக் கேட்டேன்... 


‘தெரியல சார்... எதோ திடீர்னு அலறல் சத்தம்... வெளிய பார்த்தா அந்த கொழந்தைய தூக்கினு ரெண்டு பேரும் ஓடறாங்க...’ 

‘எங்க போறாங்கனு தெரியுமா?’ 

‘பாலாஜி டாக்டர்கிட்ட தான் தூக்கினு போறாங்க சார்... அவன்தான் அம்மாம்பெரிய ஆஸ்பத்திரி கட்டி வச்சிகிறானே’ 


மேலே சென்று வேட்டியை மட்டும் மாற்றிக் கொண்டு அங்கே சென்றேன் 

வெளியே ஜனனியும் ராஜுவும் அழுது கொண்டிருந்தார்கள்... 


‘ஏன்ன ஆச்சுப்பா??’ 

‘தெரியல முரளி... திடீர்னு அலறிட்டே பின்னாடி சாஞ்சிட்டா... ஜனனிதான் பாத்திருக்கா... உடனே தூக்கிட்டு வந்துட்டோம். டாக்டர் உள்ள என்னனு பாத்துட்டு இருக்கார்...’ 


பாலாஜி வெளியே வந்தார்... 


‘கொழந்தையோட அம்மா அப்பா யாரு?’ 


ராஜு முன்னாடி வந்து நின்றான். ஜனனி மூலையில் எதோ ஜெபித்துக் கொண்டிருந்தாள்... 


‘இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியல... வேண்டிலேட்டர்ல வச்சிருக்கோம். கொஞ்ச நேரத்துல சொல்றோம். நீங்க இங்கயே இருங்க... கூப்டறோம்...’ 


உள்ளேயும் வெளியேயும் யாரும் போய் வந்த மாதிரி தெரியவில்லை... எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

கீழே சென்று இருவருக்கும் பால் வாங்கி வந்து கொடுத்தேன்.. ராஜு இரண்டு வாய்... கொஞ்சம் தெம்பாகத் தெரிந்தான்... ஜனனி அதை தொடக்கூட இல்லை... இன்னமும் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.... 

அரை மணி நேரம்... யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாத விபரீத அமைதி. ஏதாவது பேசிக்கொண்டிருந்தாலாவது கொஞ்சம் லேசாகும்... ஆனால் என்ன பேச? 

கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து பாலாஜி வந்தார்... 


‘ராஜு சீக்கிரம் வாங்க...’ 


ஜனனியும் கூட சேர்ந்து ஓடினாள்.. மறுபடியும் ஒரு அலறல். ரக்ஷா கொஞ்சம் விநோதமாக முனகும் சப்தம் கேட்டது... பிறகு மறுபடியும் ஒரு அலறல... பின் நிசப்தம்... 


அழுது கொண்டே வந்தான் ராஜு. ஜனனி அப்படியே வந்தாள். 


ஒரு பொட்டலமாக வெளியே வந்தாள் ரக்ஷா. 


கொஞ்ச நேரத்தில் எல்லாம் படபடத்து முடிந்தது. சிறகடிக்கிற குருவி சட்டென நிற்குமே..அப்படி... மனதிற்கு ஏதோ செய்தது... 


வெளியே பந்தல் போட, சுற்றி ஆட்களும் சேர்ந்து கொண்டார்கள்... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலை... சங்கு சேகண்டி ஆரம்பித்து, வெளியே உட்கார சேர் போடுவது வரை.. அவரவர் பிரித்துக்கொண்டார்கள்.


இத்தனை நாள் தொட்டிலில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தவள் இன்று தரையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தாள். பூமாலை போட்டு, மஞ்சள் பூசி, நெற்றி நிறைய போட்டு வைத்து.... 


இதே பட்டுப்பாவாடையை உடுத்திக் கொண்டுதான் இரண்டு மாதத்திற்கு முன்பு அவள் பிறந்த நாளுக்கு எனக்கு லட்டு கொடுத்து எதோ ஒரு பாட்டையும் பாடிக் காண்பித்துவிட்டுப் போனாள். அன்று இரவு அந்த பாவாடையை கழட்டவே பெரும்பாடாகிப் போனதாக ஜனனி சலித்துக் கொண்டாள். இனி அதை கழட்ட வேண்டிய பாடு அவளுக்கு இல்லை. 


எல்லாம் முடிந்தது.. தூளியில் குழந்தையை இட்டு எடுத்துப் போகவேண்டியதுதான்... ஜனனி அடம்பிடித்தாள்.. அழாமலேயே.. 


அவளை அவள் போக்கிலேயே விட்டனர்.. 


ஒரு முறை வெறித்துப் பார்த்து விட்டு ரக்ஷாவை தூக்கினாள்.. 


‘ஓமணத் திங்கள் கிடாவோ 
நல்ல கோமளத் தாமரப் பூவோ 
பூவில் நிரஞ்ச மதுவோ 
பரி பூர்ணேந்துத் தண்டே நிலாவோ...’ 


பாடிக்கொண்டே அவளை வாரி எடுத்தாள்.. எடுத்து தொட்டிலில் இட்டாள்..
ஏனோ சம்பந்தமே இல்லாமல் எனக்கு ஞாபகம் வந்தது... 


‘பள்ளிக்கூடத்தசையாம் பற்பலத் தொட்டிற்கிடத்தி தள்ளிச்சிறார் கூடி தாலாட்டி –உள்ளிலகு 
மஞ்சற்குளிப்பாட்டி மையிட்டு....’ 


ஜனனியைத் தவிர எல்லாரும் அழுதார்கள்... ராஜு ஒரு கணம் மூர்ச்சையாகி விழுந்தான். 


அவனை தெளியவைத்து எழுப்பி இடுகாட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.... 


திரும்பி வந்து ரக்ஷாவுடனான தருணங்களில் மூழ்கி எப்போது உறங்கினோம் என்றே தெரியாமல் உறங்கிப்போனோம்... உண்மைதான்... இழப்பின் கனம் பெரியது. 


************************************************************************************************* 
மறுநாள் காலை... 


ஒரு மரத்தொட்டில் ஆடும் சப்தத்துடன் மெல்லியதாய் ஜனனியின் குரல் கேட்டது... 


அங்கண் மாஞாலத் தரசர் அபிமான     
 பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
  சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;     
 கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,
  செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?     
 திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,
  அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்     
 எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்... 

Wednesday, April 25, 2012

மரிப்பதற்கு முன்பு...


இப்பிறவியின் எம்
இறுதிக்கவிதை இது

பிணத்தின் வாடையை
நுகர்ந்திருக்கிறீர்களா?

மனம் செத்து
உடலை மட்டும் தூக்கிக்கொண்டு திரிவது
பிணத்தின் வாடையை மடியில் கட்டிக்கொண்டு
திரிவது போல

என் தலைக்குள்ளே
கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள்
இலட்சோப இலட்சம் குரல்களில்
மரண ஓலம் மட்டுமே
நிரம்பியிருக்கின்றது

கடல் நடுவே இருக்கிற
த்வஜஸ்தம்பப் பாறையின் மீது
உலவிக்கொண்டிருக்கிறேன்
தன்னந்தனியாய்
தவறவிட்ட  உன்னதங்களை
ஒரு உடைந்த குழலைக் கொண்டு
வாசித்துக் கொண்டிருக்கிறேன்

நீங்கள் மனிதர்கள்

அதைக் களியாட்டத்திற்கு ஒப்பிட்டு
பொருந்தாமலேயே ஆடுகிறீர்கள்
வளைகிறேன்
நெளிகிறேன்
சோகத்தின் விளிம்வில் நின்று
என்னை நானே கொன்றுவிடத் துணிகிறேன்
நானும் நடமாடுவதாய்
நீங்கள் நினைக்கிறீர்கள்

நிகழ்வுகளின் மாயத்தீயில்
பொசுங்கிப் போன யாழ் மட்டுமே
மீதம் இருக்கிறது
இந்த தேவதச்சனிடம்

குழலை வீசிவிட்டு யாழை எடுக்கிறேன்
நொறுங்கி விடுகிற யாழைக் கொண்டு
என் துயரம் சொல்கிற எச்சக்கவிகளை
ககனவெளியில் உலவ விடுகிறேன்

இன்றோ நாளையோ
நான் மரித்துப் போகலாம்
ஆற்றாமையில்
என் மனமும் என் கூடவே
மரிப்பதாயும் ஆகலாம்
என் உயிர்ச்சூட்டை உணர மறுக்கும்
என் ஆப்த மித்திரர்களே!
என் எழுத்துக்களை மட்டும் எரித்து விடாதேயும்
நான் இருந்ததிற்கும்
முன்னர் இறந்துபட்டதிற்கும்
இன்று
மற்றுமொருமுறை
மரித்துப் போனதிற்கும்
அவை மட்டுமே சாட்சிக்கூறுகள்

Monday, April 9, 2012

மனையாளுக்கு....

மேகங்களுக்கு பாத்தியப்பட்ட
வெண்ணிற இரவுகளில்
கவிழ்த்து வைக்கப்பட்ட மதுக்கோப்பையில் இருந்து
நிரம்பித் தழும்புகிறது
நதியெனும் பெருங்காலப் பிரவாகம்
லட்சம் அறைகளுக்குள்
இரவெனும் மாய வெளியின்
சிறு மனம் அடைக்கப்படுகிறது
கனவெனும் நிஜத்தின் வர்ணத்தில்
நீ தீட்டப்படுகிறாய்
ஒவ்வொரு அறைக்குள்ளும்
வெண்ணிற இரவுகள் அனைத்தும்
இப்போது கருத்துப் போகின்றன
இவ்வேளை
இந்நேரம்
நீ இங்கிருப்பாயானால்
நாம் இருவரும்
நட்சத்திரங்கள் பூக்கும் அடர்வனத்தின் ஊடாய்
பயணித்துக் கொண்டிருக்கலாம்
இல்லை
பூக்களோடு பூக்களாய்
ஜனிப்பதைப் பற்றி
தீர்மானித்துக் கொண்டிருக்கலாம்
இல்லை
வண்டுகளோடு கள் உண்ணக் கிளம்பியிருக்கலாம்
இல்லை
இரவில் உயிர்த்து
பகலில் மறையும்
பனித்துளியாகவும் பிறந்திருக்கலாம்
இல்லை
மோகக் கரைசல்களில்
ஒவ்வொரு துளியாக
நாம் இருவரும்
ஆராய்ந்து கொண்டிருக்கலாம்
இல்லை
கடல் பேசி சிரிக்கிற
நமதேயான இந்த தீவிற்குள்
ஒரு கோப்பைக்குள்ளே
சிறை வைக்கப் பட்டிருக்கலாம்
உன் இருப்பு இங்கில்லை
என்பதைவிடவும்
உன் இருப்பை உணர்த்துவதான
பெருங்களி இங்கில்லை
*****************************************************************************

நிதர்சனங்களில்
முடிந்தோ இல்லை முறிந்தோ போகின்றன
கனவெனும் சாத்தியக் கூறுகள்...

Wednesday, March 28, 2012

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்...

போயின பல யாமங்கள்
நித்திரையற்ற என் சாநித்தியங்கள்
உங்களால்
சில சமயங்களில் பூசித்தும்
சில சமயங்களில் இம்சித்தும்
மடிந்திருக்கின்றன
வளைந்து கிடக்கிற மகரந்தக் காம்புகளை
கசக்கி எறிகிறீர்கள்
வண்டுகளாகிய நீங்கள்
அயர்ந்து கிடக்கிற வீட்டுப்பசுவின்
பால் புளித்துவிட்டதாகச் சொல்லி
என் இரத்ததை உறிஞ்சுகிறீர்கள் நீங்கள்
நிர்வாணத்தின் அழகு
உங்களின் கழுகுப்பார்வைக்குத் தெரிவதில்லை
அங்கம் அங்கமாய் நீங்கள்
வர்ணிக்கையில்
உங்கள் மனத்தில் வரிப்பது
என்னையா?
இல்லை உங்கள் கைமீறிப்போன
ஏதொவொன்றையா?
இயல்புகளை
எல்லாசமயங்களிலும்
நீங்கள் மறந்தே இருக்கிறீர்கள்
உங்கள் நினைவில் இருப்பதெல்லாம்
கைக்கெட்டும் தூரத்தில்
இருக்கிற அமுதம் அல்ல
தொலைவில் இருக்கிற
கொடும் விஷம்
உங்கள் சந்ததிகளை
கொன்று தூக்கியெறிகிற
கடைசி ஆயுதம்
என் கைகளில்தான் இருக்கிறது
என்ற நிதர்சனத்தை நீங்கள்
புறக்கணிக்கிறீர்கள்
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் வேண்டும் போதெல்லாம்
மதுமயக்கம் தருகிற என் கண்கள்
சில சமயங்களில்
எரிதழல்களையும் வீசக்கூடும்

Saturday, March 10, 2012

மரணத்தின் வாசலில் ஜனிக்கிற உண்மை விளக்கத்திற்கான வேனிற்காலத்துக் கவிதை

அனைத்து இரவுகளும் கைவிட்ட
வேனிற் பொழுதொன்றில்
மீளத் தெரிகிறது
முந்தைய இரவின் பிறை
அழுகிய பிணத்தின் விரல் எலும்பை
சுத்தி செய்து
புகை பிடிக்கின்றன
சாம்பல் நிற தேவதைகள்
தெய்வம் இனி தேவையில்லை
மானுட பிலாக்கணங்களை நிராகரிக்கிற
கலங்கிய வெளிக்குள்
கசந்து வீசுகிறது
இரத்தத்தின் மணம்
சாத்தானின் வருகை இன்று
மண்டை ஓடுகளை பொறுக்கி
வரப்போகிற ஏதோ ஒரு இரவின்
போதை தெளிந்த தருணத்தில்
குருதி புசிப்பதற்காக
சேகரிக்கிறேன்
நான்
இருள்
சாத்தான்
மானிடன்
பிணத்தின் கருவறைக்குள்
கூடுகட்டி வாழ்கிறது
ஒரு பிஞ்சு
எத்தனையோ மாதங்கள்
உள்ளிருந்து
அலுத்துப்போய்
இரத்தமும் நிணமுமாய்
வெளிவந்து விழுகிறது
அது
எதற்கும் திரும்பிப் பாருங்கள்
சவுக்குளால் அடிக்கப்பட்டு
இரத்தம் வழிகிற முகத்துடன்
ஆயிரம் ஆயிரம் உண்மைகள்
சாத்தானின் வடிவில்
உங்களுக்கு அருகிலேயே அமர்ந்திருக்ககூடும்

*****************************************************
உடைந்த பேனா முனையைக் கொண்டு
அரையிருளில் எழுதுகிறேன் இதை!

Monday, March 5, 2012

உயிரற்ற எழுத்துக்களைக் கொண்டு...

கவிழ்ந்து கிடக்கிற சர்ப்பத்தின் முதுகாய்
வழவழத்து ஓடுகிறது காலம்
அவிழ்க்கப்படுகிற
மர்ம முடிச்சுகளாய்
எழுதி முடிகின்றன எம் எழுத்துக்கள்
தனித்தனியே புரண்டு விழுந்து
பறந்து திரிகிற எம் எழுத்துக்களை
உங்களாலோ என்னாலோ
விளங்கிக் கொள்ளவியலாது
ஒவ்வொரு வண்ணமாய்
விளங்கி
நெளிந்து
புரண்டு
கலைந்து
பின்
அவை உயிர்த்து எழுந்தபின்
அவற்றை இன்னதென விளங்கிக் கொள்கிறேன்
அவற்றை இன்னொன்றாய் நீங்கள் விளங்கிக் கொள்கிறீர்கள்
தன் விளக்கம் எதுவென அறியாமல்
சுயம் இழந்து
எரிந்து போகின்றன எம் எழுத்துக்கள்
எரிந்த சாம்பலில்
சில அடிமை எழுத்துக்களை உயிரிப்பிக்கிறேன்
அவற்றைக் கொண்டு
எழுதிக்கொள்கிறேன் எனது வெற்றிச் சரிதத்தை
இன்னமொரு வெற்றிச் சரிதத்தை எழுத 
ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு என்னிடம்
ஆனால் உயிரற்ற எழுத்துக்களைக் கொண்டு
என்ன எழுத!

Friday, February 10, 2012

ஆயிற்று பல யுகங்கள்

ஆயிற்று பல யுகங்கள்
கிளர்ந்தெழுந்த இச்சைகளினின்றும்
செல்லரித்துப் போன வாதைகளினின்றும் 
விடுதலையாகி 
போயிற்று பல யுகங்கள்
ஆசையின் பிலாக்கணங்களை
அமிழ்த்து கரைத்த
வரையறைக்குள்
ஆழ்ந்து கிடக்கிறான்
ஆரண்ய கணவன்
புற்றில் கிடக்கும் பாம்பாக அவன்
அமர்ந்திருக்கையில்
ஏறி மிதிக்கின்றன 
விடப் பூச்சிகள்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
அவிழ்ந்து சுருங்கிய கால வெளிக்குள்
மோனச் சுடர் தகிக்க 
அமர்ந்திருக்கிறான் அவன்
அலை அலையாய் 
எழுந்து அடித்து
சிதைந்து பின் கறைந்து போகின்றன
நிச்சலனத்தின் ஓர்மங்கள்
இங்கு ஓய்வில்லை
அயர்வில்லை
அயர்ந்து கொல்லும் வெஞ்சினமில்லை
கணமில்லை 
சனிப்புக்கும் இறப்புக்கும்
இடையில் இறுகிப்போய்
சமைந்து கிடக்கிற மனத்திற்குள்
எவ்வித அவதானிப்பும் 
இல்லவே இல்லை
இப்படித்தான் ஒரு நாள்
யாரோ ஒரு காந்தருவன் 
தன் தத்தையுடன் குலவிக்கொண்டிருந்தான்
மிருகத் தீ தகிக்க 
அவன் முயங்குகையில்
எழுந்து அடங்கின கூடுகள்
இருப்பினும்
இவ்விடத்திலேயே அமர்ந்திருந்தேன்
சலனங்கள் வலிப்பதில்லை
இத்தருணங்களில்.
ஒரே ஒரு முறை
அடங்கிப்போன முனியின் மேல்
கறையான் சென்ற போதில்
வெம்பியது சிறுமதி
அவனுக்கென ஒரு மனம் இருந்தும்
அதை அவன் 
நேர்கொண்டான்
அவனுக்கு கறையானும் தெரிவதில்லை
மனைவியும் தெரிவதில்லை
அல்லது
மனைவியோ கறையானோ
இரண்டும் ஒன்று.
அடர்ந்து படர்ந்த யக்ஷதேவன்
முனியுரு கொண்டு
மேலேகுகையில்
மேனி விதிர்த்திற்று
யக்ஷஸ்பரிசத்திற்கும்
ரிஷி தீண்டலுக்கும் 
பெரிதொன்றும் பேதைமை கண்டிலள் யான்
ஊடாடிக் கிடந்தாலும்
இடங்கொண்ட ஒற்றைப்பாகம் 
விம்மி விதிர்த்தது யாவும்
கோதமன் எண்ணி
கற்பென்பது மனத்தில் என்றால்
கோதமன் மட்டும் என் ஆண்டான்
என்பதை கரிசல் குருவிகூட
கூவிப் பறந்திடும்
கல்லாய் சபித்தனன்
என் கணவன்
கல்லாய் மீண்டும் பிறந்தனள் யான்
கல்லா சிரசிற்குள் கல்லென்றாவது அன்றி
வேறொன்றும் தெரியவில்லை
சபிக்கப்பட்ட நொடியில்


கல்லாய் சமைந்து கிடப்பதும்
சுகமாய்த் தான் இருக்கிறது
கொண்டவன் பக்கத்திலேயே
கோடிவருடம் குடிகொள்வதும்
சுகம்தான்
இருப்பினும்
நினைவில் வந்து தொலைகின்றன
நாகணவாய்புட்களும்
நாம் வாழ்ந்த அந்த நதிக்கரையும்
இதற்காகவேனும்
இன்னும் எத்தனை முறை 
மிதிபடினும் வருத்தமில்லை
வரட்டும் இன்னும் ஆயிரம் இராமன்கள்...

Saturday, January 28, 2012

செங்குருதி படிந்த

போர் மேகங்களின்
ஒவ்வோர் மழைத்துளியாய்
புத்தன்கள்

விதைத்து
பின் முளைத்து
எழுகிற போதி மரங்களின்
விறகுகளில்
எரிக்கப்படுகிறது
மானுடம்


எஞ்சிய விறகுகளில்
இழைக்கப்படுகின்றன
துப்பாக்கிகளின் கைப்பிடிகள்

இன்று
அதிகாலை செய்தித்தாள்
அரை மணி தாமதம்
கடைக்காரன் நாசமாய்போக!