Thursday, August 29, 2013

கிருஷ்ண ஜெயந்தி

இஸ்கான் கோயில்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டதில் பல நன்மைகள் இருந்தாலும் முக்கியமாக இரண்டு. ஒன்று, வகை வகையாக கண்ணனை பலவகை ஓவியங்களாய் மிகத் தத்ரூபமாக வரைந்தது. இன்னொன்று வெள்ளைக்கார அம்மணிகள் எல்லாருக்கும் புடவை கட்டி சனாதன தர்மத்தைப் பரப்பியது. முதன்முதலில் நியு யார்க்கில் விழுந்த விதை இப்போது வேர்பாவி விருட்சமாகி உலகம் பூராவும் பரவியிருக்கிறது. அமெரிக்காவின், நான் வாழ்கிற இந்த கிராமத்திலும் (சைஸ் மட்டும் நம் மதுரை அளவு!) சிரமம் பார்க்காமல் ஒரு கோயிலை அமைத்திருக்கிறார்கள். கட்டியிருக்கிறார்கள் என்பதை விட அமைத்திருக்கிறார்கள் என்பதுதான் சரியான பிரயோகம். இருக்கிற ஸ்டோரேஜ் ஏரியாவை மாற்றியமைத்து கண்ணன் சிலை வைத்திருக்கிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனின் இடம்தானே.

இந்த வருடத்திய கிருஷ்ண ஜெயந்தி இந்த கோயிலில்தான் நடந்தேறியது. கோயிலில் மேலே கூறிய எல்லா அம்சங்களும் இருக்கின்றன. எல்லா பூஜையும் செய்கிறார்கள். கண்ணனும் பலராமனும் சேர்ந்தாற்போல ஆடுகிறார்கள். நம் ஊரைப்போலவே பக்திசிரத்தையுடன் ஒருவர் ஹரே ராம ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுகிறார். என்ன, நம் ஊரில் பாடுபவர் ஆசிரம சிஷ்யக் கோடிகளில் ஒருவராய் இருப்பார். இந்த ஊரில் அவர் பிரசித்தி பெற்ற கம்பெனி ஒன்றின் உபகடவுள்களில் ஒருவராய் இருக்கிறார். சில சமயங்களில் பரிவார தேவதைகளும் பாட்டு பாடுவது உண்டு. உள்ளே வருபவர்களை எல்லாம் ஒருமுறையாவது ஆட வைத்து விடுகிறார்கள். கிருஷ்ண சைதன்ய பாரம்பரியத்தின் மிச்சங்கள் இவையெல்லாம்.

எங்கிருந்தாலும் பழைமையையும் பாரம்பரியத்தையும் மறக்காமல் இருக்க முயற்சிப்பதில் இந்தியர்கள் கைதேர்ந்தவர்கள். வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்கப் போனாலும் கைப்பிடி மண் எடுத்து செல்கிறவர்கள்தானே நாம்.
உள்ளே போக மிகப்பெரிய க்யூ நிற்கிறது. ஊர்ந்து ஊர்ந்து உள்ளே போவதற்குள் குறைந்தபட்சம் பத்து தெரிந்த முகங்களாவது அகப்படுகின்றன. எல்லார் கையிலும் ஒரு DSLR. ஐ.டி. துறை கை நிறைய சம்பளம் தருகிறது என்று ஒரு வெளிப்புற பிம்பத்தை ஏற்படுத்தும் அனாவசியங்கள். ஒரே போட்டோவை எண்பது டாலரிலும் எடுக்கலாம், ஆயிரம் டாலரிலும் எடுக்கலாம்.

வெளியே ஒரு மேடை அமைத்திருந்தார்கள். உள்ளே கோயில் அமைத்திருப்பதைப் போல. கீபோர்ட் வாசித்தன பிள்ளைகள். எந்த இந்திய மொழியும் தெரியாத இந்திய வாரிசுகள். இருந்தாலும் இந்தியும் தமிழும் அவர்கள் பேசிக் கேட்க தேன் வந்து பாய்ந்தது. பிறகு தசாவதார தரிசனம். ஆங்கிலத்தில் தசாவதார மகாத்மியம். நெட்டையான கிருஷ்ணரும் அமெரிக்க கல்கியும். விதி நடந்து மதி முடிந்து வினையின் பயனே உருவாகி, நிலை மறந்து நெறி பிறழ்ந்தவர் உணரும் வண்ணம் இன்னல் ஒழித்து முடி காக்கும் கல்கி, அவதார மகிமையை ஆங்கிலத்தில் சொல்லி பின் கத்தியை கீழே இருந்தவரிடம் கொடுத்துவிட்டு நின்றார்.

பின்னர் ஒரு பரத நாட்டியம். ஸ்வாதித் திரு நாளின் கோபால பாஹிமாம். தாளகதியைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியமில்லாத நிருத்த அமைப்பு. முத்திரைகளை மட்டும் அபினயம் காட்டி அந்த காலத்து நாட்டிய பேரொளியாக ஆடி முடித்தார். இந்திர விழவை புறக்கணித்த சாபத்தால் ஆயர்ப்பாடி அழியவிருந்த அபாயத்தை சுட்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி கண்ணன் காத்த கதையை நாடகமாக்கி இருந்தார்கள். அழகாக நடந்து முடிந்தது.

இதெல்லாம் குறை சொல்வதற்கு அல்ல. எங்கு போனாலும் தப்போ சரியோ இன்னமும் கடைசி நூலிழையை விடாமல் இருக்கமாக பிடித்திருக்கும் மனிதர்களைப் பார்க்க ஆனந்தமாகவே இருக்கிறது.

ஊரில் இருந்தவரை வீட்டின் வாசலில் பெரிய கோலம் போடுவாள் அம்மா. கலர் பொடி தூவி வானவில்லை தரையில் இட்டது போல இருக்கும். வாசலில் இருந்து பூஜை அறை வரை கண்ணன் நடந்து வந்த பிஞ்சுக் காலடித் தடம் இருக்கும். அதிகாலையிலேயே அப்பத்திற்கு ஊரப் போட்டிருப்பாள் அம்மா. பக்கத்து வீட்டிலிருந்து பலகாரம் வரும். அப்பாவும் நானும் போட்டிப் போட்டுக் கொண்டு காலையில் பேப்பர் படிப்போம், அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதற்காகவே. அம்மாவிடமிருந்து சுப்ரபாதம் முடித்து பின் குளித்து சாப்பிட்டவுடன் மதியத்திற்கு மேல் அம்மா அப்பம் சுட ஆரம்பிப்பாள். முதல் அப்பம் சாமிக்கு என்று எடுத்து வைத்தாலும், அதில் பாதி பிய்த்துத் தருவாள். அதில் நானும் அப்பாவும் பாதி பாதி. சாயுங்காலம் எல்லோர் வீட்டுக்கும் அப்ப வினியோகம்.

இந்த ஊரில் தரையில் பாதம் போட முடியாது. கார்ப்பெட் வீணாகும். வாசலில் கோலம் பார்த்ததில்லை. மார்கழியானால் பூசணிப்பூ கிடைக்காது. வீட்டு வாசலில் வெடி வெடிக்க முடியாது. வீட்டில் இஷ்டம் போல தமிழ் படம் பார்க்கலாம். சத்தம் அதிகம் வைத்தால் மட்டும் 'குட் யூ ப்ளீஸ் கீப் இட் டௌன்' என்று சத்தம் கேட்கும். வெளியே எங்கும் தமிழ் கிடையாது. யாராவது நம்மூர்காரர்களைப் பார்த்தால் பாசம் பொங்கும். ஆனால் அவர்களிடத்தும் தமிழை எதிர்ப்பார்க்க முடியாது. சொந்த பிள்ளையானாலும் தமிழில் கொஞ்ச முடியாது. வளர்ந்தபின் 'நான் இந்தியன்' என்ற சொல்லாடலை அவர்களிடத்தில் எதிர்பார்க்கவும் முடியாது. 'மை பாரண்ட்ஸ் ஆர் ஃப்ரம் இந்தியா' என்பார்கள். வருடம் ஒருமுறை ஊரைப் பார்க்க விருப்பபடுவோம். டாலரை லகரங்களில் கணக்கிட்டு பின் அந்த முடிவை ஒத்திப்போடுவோம். இப்பொழுதுதான் எழுந்த மாதிரி இருக்கும். ஆனால் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.

இவ்வளவுதான் வெளிநாட்டு வாழ்க்கை. என்னதான் சுதந்திரம் கிடைத்தாலும் கட்டுப்பெட்டிக்குள் அடங்கிவிடும்போது இருக்கிற நிம்மதி அதில் கிடைப்பதில்லை. மொத்தத்தில் இது எனக்கான இடம் இல்லை என்றுதான் எங்காவது தப்பிக்கத் தோன்றும்.

இவ்வளவையும் வைத்துக் கொண்டு இன்னும் என்ன -----க்காக இருக்கிறாய் என்று கேட்கலாம். அதற்கு பதில் உங்களுக்கே தெரியும்.

Tuesday, August 20, 2013

சவரக்கத்தி

இன்னமும் சரியாக சுயசவரம் செய்து கொள்ளத் தெரியவில்லை. 

முதன்முதலில் பதினொன்றாவது படித்துக் கொண்டிருக்கும்போதுதான் சவரம் செய்து கொண்டேன். கடைக்குப் போய் சவரம் செய்ய வெட்கப்பட்டு எதுவும் செய்யாமல் இருந்த போது அப்பாதான் முதன்முதலில் சவரம் செய்துவிட்டார். அது வரையில் விளையாட்டுக்காக முகத்தில் அப்பிக்கொண்ட அப்பாவின் சவரம் செய்கிற சோப்பு நுரையை நிஜமாகவே முகத்தில் அப்பிக் கொண்டேன். அப்பாவுடைய பழைய ஜில்லட் மெஷினில் பிளேடைப் போட, கீழே திருக வேண்டும். கீழே திருக திருக ப்ளேடின் மேல் இருக்கிற திறப்பு அலிபாபாவின் குகை போல மெதுவாக திறக்கும். மரக்கலரில் இருந்த தாளைப்பிரித்து புது சூப்பர்மாக்ஸ் ப்ளேடை எடுத்து அதில் மாட்டினார். இடையிடையே மெதுவாக சிரித்தும் கொண்டார். மெலிதாய் ஒரு பெருமிதம், இன்னதென்று புரியாத ஒரு சந்தோஷம் அப்பாவின் கண்களில் தெரிந்தது. மகன் பெரியவனாகிவிட்ட சந்தோஷம் அது. 

சவரம், மிகவும் மிருதுவாக இருந்தது. நான் பயந்தது போல இல்லை. வரவரவென்று இருக்கும், இரத்தம் வரும் என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லாமல் ரொம்பவும் எளிதாக முடிந்து விட்டிருந்தது. முடிந்த உடன் அப்பா முகத்தையும் கழுவிவிட்டார். ஒரே நேரத்தில் பெரிய மனிதனாகவும் குழந்தையாகவும் வாய்க்கிற தருணம், மகன்களுக்கு மட்டுமே உரித்தானது. முதன்முதலில் வேலை கிடைத்தபோது இந்த தருணம் வாய்ப்பதாக நாம் நினைப்போம். கொஞ்சம் சூக்சுமமாக யோசித்தால் அதற்கு முன்னேயே அது கிட்டியிருக்கும். மகன்களுக்கு மட்டுமே கிடைக்கிற சந்தோஷம் அது. வளர்ந்த பிறகுதான் தெரிந்தது, ஐந்து நிமிடத்தில் முடிக்கிற விஷயத்திற்கு அப்பா அன்று அரை மணி நேரம் எடுத்த இரகசியம். 

அன்று இரவு எல்லாரிடமும் அதை சொல்லிவிட்டார் அப்பா. 

'பையன் பெரிய ஆளாயிட்டான், தெரியும்ல"

பக்கத்து வீட்டு முரளி அண்ணன், சிரித்துக் கொண்டே -

"என்ன ஆச்சு?"

'தொர இன்னிக்கு ஷேவ் பண்ணியிருக்காரு. அடுத்து ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதாம்" என்றார் அப்பா சிரித்துக் கொண்டே. 

எனக்காய் வெட்கம் பிடுங்கித் தின்றது. நண்பனைப் பார்க்கப் போவதாக சொல்லி ஓடிப் போனேன். 

கல்லூரிக்குப் போன பிறகு மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை வந்தது. முறுக்கு மீசையின் மீது கொள்ளைப் பிரியம். எனக்கும் மீசையும் தாடியும் கொஞ்சம் அடர்த்தியாகத்தான் இருந்தது. கொஞ்சம் மெனக்கெட்டு ஒதுக்கினால் அழகாய் அமைந்துவிடும். கூட படிப்பவர்களில் இன்னமும் பாதி பேருக்கு ஆடு மேய்ந்தது போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் வளர்ந்து இருந்தது. ஒதுக்கிவிட தோதுபடாத வாகு. எனக்கும் கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது.

சாயங்காலம், வீட்டிற்கு வந்து சுயசவரம் செய்து கொண்டிருந்தபோது அப்பா பார்த்தார்.

'அதென்னது அது வெளக்கு வச்சதுக்கு அப்பறம் இதெல்லாம் பண்றது? வீட்டுக்கு ஆகாது தெரிஞ்சிக்கோ"

'இதோ முடிச்சிட்டேன்'. அவசர அவசரமாய் முடித்து விட்டு வீட்டிற்குள் நுழையும் போது பெரிய மீசையுடன் வந்தேன். 

அப்பா ஒரு நிமிஷம் அப்படியே பார்த்தார்.

'போய் மீசைய எடு மொத'

'நல்லா இருக்குப்பா'

'அதெல்லாம் இல்ல.. மொதல்ல போய் எடு. மொளச்சு மூணு எல விடல. அதுக்குள்ள என்னடா மீச வேண்டி கெடக்கு? போய் எடுடா மொதல்ல'. கூடவே அம்மாவும் பஜனையில் சேர்ந்து கொண்டார். வேறு வழியில்லாமல் கலங்கி போய் மீசையை எடுத்தேன். உலமே இருண்டு விட்டதாய் தெரிந்தது. 

அப்பா மீசை வைத்தது இல்லை. சிறு வயதிலிருந்தே அவரும் மீசை வைத்தது இல்லை. மூன்று நாள் தாடியுடன் கூட அப்பாவை நான் பார்த்தது இல்லை. உடனே மழித்து விடுவார். ஏதோ முகத்தில் மூன்றாவது கண் வந்தது மாதிரி அவருக்கு அவ்வளவு தொல்லையாய் இருக்கும் போல. 

வேலைக்கு சேர்ந்த பிறகு மீசை வைக்க முழு சுதந்திரம் கிடைத்தது. அது வரையில் 'டா' போட்டு பேசிக்கொண்டிருந்த அப்பா, வாப்பா, போப்பா என்றார். வினோதமாக இருந்தது. காரணம் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் லேசாக புன்னகைத்து விட்டு சென்றார். அம்மா இறந்ததிலிருந்தே அப்பா அதிகம் சிரிப்பதில்லை. முன்பு போல வாய்விட்டு சிரிப்பதும் இல்லை. நானும் எவ்வளவோ முயன்ற பிறகு ஒரே ஒரு முறை மட்டும் அப்பா வாய் விட்டு சிரிக்க முயன்றார். ஆனால் சத்தம் வரவில்லை. செயற்கையாக இருந்தது. அதன் பிறகு நானும் அப்படி அவரை சிரிக்க வைக்க முயன்றதில்லை. அவருடன் சேர்ந்து அவரது மௌனங்களை அர்த்தப்படுத்திக் கொள்ள பழகினேன். 

எனக்கு ஞாயிற்றுக் கிழமைகளில்தான் பரீட்சை. வேலைப் பார்க்கும்போதே படிக்க வேண்டும் என்ற விளங்காத ஆர்வத்தால் என் விருப்பமின்றியே சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சரஸ்வதி தேவிக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டன. வாரத்தில் ஐந்து நாட்களும் வேலை. மீதம் இரண்டு நாட்கள் படிப்பு என துளியும் நேரமில்லாமல்தான் போய்க் கொண்டிருந்தது. 

ஒரு ஞாயிற்றுக்கிழமை பரீட்சை முடித்து வெளியில் வந்து செல்போனை பார்த்தபிறகுதான் ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் வந்திருந்தது தெரிந்தது. எல்லாமே ஆந்திரா நம்பர்கள். ஏதோ ஒரு நம்பரை அடித்து கேட்டபிறகுதான் தெரியவந்தது விபரீதம். 

அடித்து பிடித்து கிளம்பி ஆஸ்பத்திரிக்கு போனேன். அப்பா ஒரு விபத்தில் சிக்கி அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். எப்படியோ யார் யாரிடமோ எல்லாம் அனுமதி வாங்கி கடைசியில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு சென்று பார்த்தேன். அப்பாவின் முகத்தில் மூன்று நாள் தாடி வளர்ந்த்திருந்தது. என்னால் பார்க்க முடியவில்லை. அந்த நிலைமை ஏதோ ஒரு அமானுஷ்யத்தை காற்றில் பரவ விட்டிருந்தது. அழுகை அழுகையாக வந்தது. அடக்கிக் கொண்டேன். பேச முடியாமல் விக்கிக் கொண்டது. அது வரைக்கும் ஓடியாடி கொண்டிருந்த அப்பா கழுத்துக்கு கீழ் எந்த அசைவுமில்லாமல் படுத்திருந்தார். முதுகெலும்பில் அடிபட்டிருந்தது அவருக்கு. அப்பா மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார். 

'லேசா மதமதன்னு இருக்குப்பா. ஊசி போட்டிருக்காங்கபோல."

எதுவும் பேச முடியாமல் இருந்தேன். அப்பா என்னைப் பார்த்து புன்னகைத்தார். வழக்கமான புன்னகைதான், ஆனால் சிலீரென்றது. அப்பாவின் கண்களில் நீர் அரும்பியிருந்தது. 

'நீ எதுவும் பயப்படாதப்பா. எல்லாம் சரியாயிடும். அப்பா இருக்கேண்டா'.

வெளியில் வந்து ஆளில்லாத அந்த வெராண்டாவில் நின்று அழுதேன். அத்தனைக் கடவுளுக்கும் உயிர் இருப்பதாகப்பட்டது. பார்க்கும் எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டேன். அருகே இருந்த வெங்கடாசலபதி என்னைப் பார்த்து சிரிப்பதாகப்பட்டது. லேசாக தைரியம் வந்தது. அருகிலிருந்த கண்ணாடியைப் பார்த்தேன். முகத்தில் குறுந்தாடி வைத்திருந்தேன். ஒரு வேளை அப்பா அடிபட்டதிற்கு அதுதான் காரணமாக இருக்குமோ? முதல் வேலையாக தாடியை மழித்து விட்டு வந்தேன். 

சரியாக இருபத்தியோரு நாட்களில் அப்பா இறந்தார். 

எனக்கு அழுகை வரவே இல்லை. அம்மா இறந்தபோது அப்பா ஏன் அழவேயில்லை என்பது எனக்கு புரிந்தது. 

எல்லாம் முடிந்து மயானத்திற்கு வந்தோம். எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். சிதை அடுக்கி அப்பாவின் சரீரம் அதில் வைக்கப்பட்டது. வெட்டியான் தெலுங்கில் ஏதோ சொன்னார். கூட இருந்த எல்லோரும் சேர்ந்து அருகிலிருந்த கிணற்றடிக்கு கூட்டி வந்தார்கள். எனக்கு அதுவரைக்கும் கூட அழுகை வரவே இல்லை. ஏதோ கனமாய் இருந்தது. அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால் இங்கிருந்து தப்பி என் வீட்டிற்கு போய்விடத் தோன்றியது.

கிணற்றில் இருந்து நீர் இறைத்து மேலே ஊற்றினார்கள். அதுவரையில் சுடுதண்ணீரிலேயே குளித்து பழகியிருந்தாலும் குளிர் நீர் குத்தவில்லை. என்னவோ மேலே ஒடியது போல இருந்தது. தூரத்தில் அப்பாவின் உடல் விறகுக் கட்டையில் இருந்தது. உண்மையில் அப்பாவிற்குத்தான் இப்போது குளியல் தேவையாகப்பட்டது எனக்கு. சிரித்துக் கொண்டேன். அழுகையும் வந்தது. 

பின்னே இருந்து ஒரு கை தொட்டது. பழகிப்போன ஸ்பரிசமாய் இருந்தது. திரும்பிபார்த்தேன். அப்பா கையில் சவரக் கத்தியுடன் நின்று கொண்டிருந்தார். தலைமுடியை சிரைப்பதற்கு. 

அழுதேன்