கையளவு வாழ்க்கை

மனிதன் பல சமயங்களில் தனது சுயத்தை இழந்து விடுவதும், பின்னர் எங்கோ யாரிடமோ, மீண்டும் அடைய முடியாத தனது சுயத்தைக் கண்டு ஒரு ஆதங்கப் பெருமூச்செறிவதும் சாதாரணமாய் நாம் எங்கும் காண்கிற ஒன்று. ஒவ்வொரு மனிதனின் தேடலும் எதற்காகவோ யாருக்காகவோ முடக்கப்படுகிறது. அல்லது அவனது வழி மாற்றப்படுகிறது. திசைத் திருப்பப்படுகிறான் மனிதன். எங்கோ எதற்காகவோ அதுவும் எந்த ஒரு காரணமும் அறியாமல் தொலைக்கிற இந்த விசயங்களினால் நமது தனிமனித சுதந்திரம் பாதிக்கப்ப்டுகிறது. எதற்காகவும் அல்லாத, ஒரு அர்த்தம் புரியாத, சுய தேடல் மௌனங்களினூடே நிகழ்ந்தாலும், பூஜ்ஜியமே வாழ்க்கையாய் மனமொப்பாத முடிவுக்கு ஒவ்வொரு கணமும் தள்ளப்படுகிறோம்.

ஆனால் இன்னொருவரின் சந்தோஷத்திற்காக தன் சுயத்தை இழப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது. உதாரணத்திற்கு இன்று வந்த ஒரு மின்னஞ்சல். வழக்கமாய் வருகிறது போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாய், கொஞ்சம் உருப்படியாய் ஒரு மின்னஞ்சல்.

ரொம்பவும் நோய்வாய்ப் பட்டிருந்த அந்த நபர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே எழுந்து உட்கார அனுமதிக்கப்பட்டிருந்தார். அதுவும் நுரையீரலில் கோர்த்துப் போயிருந்த நீரை அப்புறப் படுத்துவதற்காக. அதற்கு மேல் உட்கார வைத்தாலும் அவரால் உட்காரமுடியாத நிலை. நோய் உடம்பிலிருந்து மனம் வரை அத்தனையையும் தின்று செரித்திருந்தது.
அதே நிலையில் இன்னொரு மனிதன். ஆனல் எழுந்து கூட உட்கார முடியாத நிலை. படுத்த படுக்கையாகவே இருக்கிற மனிதன். வெறும் மருந்துகளும், மாத்திரைகளுமே உலகம்.

எப்படியோ அந்த இருவரும் நண்பர்களானார்கள். வாழ்க்கை, மதம், வீடு, மனைவி, தொழில் என எல்லாவற்றைப் பற்றியும் பேசினார்கள். வலியும் வேதனையும் அவர்களை இணைத்திருந்தது.

தனக்காக அனுமதிக்கப்பட்ட அந்த ஒரு மணி நேர இடைவேளையில் ஜன்னலொர மனிதன் எழுந்து ஜன்னலின் வெளியே இருந்த உலகத்தை தனது நண்பனுக்காக விவரிக்கத் தொடங்குகிறான். வெளியே தெரிந்த வெளிச்சம், உலகம், மனிதர்கள், என படுத்திருந்த அந்த மனிதனின் கருப்பு வெள்ளை உலகத்திற்கு கொஞ்சம் சாயம் பூசுகிறான். அந்த மனிதனும் தான் உண்மையாகவே வாழுகிற அந்த ஒரு நொடி உலகத்திற்காக தனது நாட்களை எதிர்பார்க்கிறான்.இப்படியே கழிகிறது நாட்கள்.

கொஞ்சம் காலம் கழித்து ஜன்னலோரத்தில் இருந்த மனிதன் இறந்து விடுகிறான். அன்று காலையில் அவனுக்கு வழக்கம் போல் மருந்து கொடுக்க வருகிற செவிலி அவன் இறந்து போயிருக்கக் கண்டு துக்கத்துடன் அவனது உடலை அங்கிருந்த பணியாளர்களை அழைத்து அப்புறப்படுத்த சொன்னாள். அவனது உடல் அப்புறப்படுத்த பின்பு அவனருகில் இருந்த அந்த மனிதன் அந்த செவிலியிடம் அந்த இடத்திற்கு தன்னை மாற்ற முடியுமா என்று கேட்க, அதற்கு ஒப்புக்கொள்கிறாள் அந்த செவிலி. பின்னர் அந்த இடத்திற்கு அவன் மாற்றப்படுகிறான்.

புதிய இடம் ஜன்னலோரத்திருந்தது. தனது நண்பன் தனக்காக வருணித்த அந்த காட்சிகளை காண்பதற்காக மிகவும் முயன்று சிரமப்பட்டு எழுந்தான் அவன். ஆனால் அங்கு அவன் பார்த்ததெல்லாம் வெறும் சுவர் மட்டும் தான்.
இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவன் அங்கிருந்த செவிலியிடம் கேட்டதற்கு பின் தான் தெரிகிறது அந்த ஜன்னலோரத்தில் இருந்த அவனது நண்பனுக்கு பார்வை தெரியாத விஷயம். அவன் சொன்னதெல்லாம் படுத்திருந்த அவனது நண்பனை உற்சாகப்படுத்துவதற்காகவே!

இந்த கதையை பல சமயங்களில் இதற்கு முன் நாம் படித்திருக்கலாம். ஆனால் அந்த நொடி மட்டும் வருந்தி விட்டு மீண்டும் லௌகீக வாழ்க்கையின் கட்டுக்குள் வந்து விட நேர்கிறது. சக மனிதனுக்கு செலுத்த வேண்டிய அன்பு, நாம் அவனுக்கு செய்கிற கைமாறு அல்ல. அது ஒரு வகையான சுகம். வாழ்க்கையின் செறிவுகளில் நாம் சந்திக்கிற மனிதர்கள் ஆயிரம் ஆயிரம். எல்லாரையும் எல்லா இடங்களிலும் திருப்தி படுத்துவது என்பது இயலாத காரியம் தான். ஆனால் நாம் பார்க்கிற சக மனிதர்களுக்கு அந்த ஒரு வினாடி நாம் தருகிற திருப்தி அவர்களுக்கு பெரிதாகத் தெரிகிறதோ இல்லையோ நம்மை ஒரு கணம் நினைத்துப் பார்த்து பூரிக்க வைக்கிறது. இதனால் நம் சுயத்திற்கு இடைஞ்சல், நமது வாழ்க்கையில் இன்னொருவரின் தாக்கம் இவற்றிற்கெல்லாம் வாய்ப்புகள் அதிகம் எனிலும், மற்றவர்களின் சுகத்திற்காக நமது சுயத்தை இழப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த கையளவு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் ஒரு முடிவற்ற மோனத்தைத் தேடியே போகின்றன. நாளுக்கு நாள் வாழ்க்கையின் மீதான ஈர்ப்பும், அதன் வெளிகளில் திரிவதற்கான நேரமும் நம்மிடம் மெல்ல மெல்ல தொலைந்து வருகிறது. இதையெல்லாம் எப்படி மீட்கப் போகிறோம்? வாழ்க்கையின் யதார்த்தத்தை, அதன் உள்ளுறை அர்த்தத்தை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்? காலத்தின் மீது திணிக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் கேள்விகளைப் போல் இந்த மானுடப் பிரபஞ்சத்தை இந்த கேள்விகளும் சுற்றி வரட்டும்....

Comments

பின் தொடர்பவர்கள்