இதுவும் கடந்து போகும்

இன்று உலகின் மிகப்பெரிய தகவல் களஞ்சியமான Wikipediaவில் சுற்றிக்கொண்டிருந்தபோது இந்த தொடரை பார்க்க நேர்ந்தது.

"And, this too, shall pass". "இதுவும் கடந்து போகும்".

இதற்கு analogousஆக சில புறநானூற்றுப் பாடல்களைகூட முன் வைக்கலாம். ஆனால் அவை எந்த எந்த பாடல்கள் என்று எனக்கு அவ்வளவு அறுதியிட்டு கூற முடியாததால் அந்த முயற்சி (இப்போதைக்கு!) கைவிடப்படுகிறது. (எனினும் எங்காவது காணக்கிடைத்தால் நிச்சயம் முன்வைக்கிறேன்)

இதுவும் கடந்து போகும்... எத்தனை சத்தியமான வார்த்தைகள். உலகின் நிலையாமையை மூன்றே வார்த்தைகளில் விளக்க முற்படுகிற ஒரு முயற்சி. இதன் வரலாறும் கொஞ்சம் சுவையாய் இருந்தது.

அரசவையில் இருந்த சாலமன் அரசர், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான அமைச்சரான பினையாவை (Beniah) அழைத்து கேட்டாராம். "பினையாஹ், எனக்கு ஒரு குறிப்பிட்ட மோதிரத்தை நீ கொண்டு வர வேண்டும்.. சுகோத் திருவிழாவிற்கு அதை நான் அணிந்து கொள்ள வேண்டும்" என்றாராம். அதை கேட்ட பினையாஹ் "அப்படி அந்த மோதிரத்தில் என்ன விசேஷம்" என்று கேட்க, அதற்கு மன்னர் "அது ஒரு மாய மோதிரம். யாராவது மிகுந்த சந்தோஷத்தில் இருப்பவன் அதை பார்த்தால் சோகமாகி விடுவான்.. சோகமாய் இருப்பவனையோ அது மகிழ்ச்சிப்படுத்தும்" என்றார். இதைக்கேட்ட பினாயிஹ் அந்த மோதிரத்தை தேடி எல்லா இடங்களிலும் சுற்ற்றுகிறார். கடைசியில் மன்னர் சொன்ன நாளும் வந்தது. ஆனால் மோதிரம் மட்டும் கிடைக்கவில்லை. சாலமனுக்கு அப்படி ஒரு மோதிரம் இந்த உலகத்தில் இல்லை என்று தெரிந்திருந்தாலும் அவர் அமைச்சரிடம் கொஞ்சம் விளையாட நினைத்து இந்த வேலையை கொடுத்திருக்கிறார். இது தெரியாத அமைச்சர் மன்னரின் ஆணையை நிறைவேற்ற காடு மேடு தேடி ஓடுகிறார்..

இவ்வாறாய் தேடிப் போகிற வழியில் ஜெருசலேமிற்கு செல்கிறார் பினையாஹ். அப்போது அங்கு ஒரு ஏழை வியாபாரியின் குடிசையை பார்க்கிறார். அன்றைய பொழுது பாடிற்காக செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த அவரிடம் இந்த பிரச்சினையை சொன்னார் பினையாஹ். அவர் சொல்வதை பொறுமையுடன் கேட்ட அந்த பெரியவர் சிரித்துக் கொண்டே ஒரு மோதிரத்தை எடுத்து நீட்டினார். அதை பார்த்து மகிழ்ந்து பினையாஹ் அதை எடுத்துக் கொண்டு மீண்டும் அரசவைக்கு ஓடினார்.

"என்ன பினையாஹ் கிடைத்ததா? " என்று சிரித்துக் கொண்டே கேட்டாராம் மன்னர். சுற்றி உள்ள அத்தனைப் பேரும் இந்த ஆளுக்கு எங்கிருந்து அப்படி ஒரு மோதிரம் கிடைக்கப் போகிறது என்ற feelஓடு ஏளனமாய்ப் பார்க்க அந்த அமைச்சர் சிரித்துக்கொண்டே மோதிரத்தை எடுத்து மன்னரிடம் நீட்டுகிறார். மோதிரத்தைப்பார்த்த மன்னரின் சிரிப்பு அப்படியே மறைந்தது. . அந்த மாய மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகள் தான் "கிமெல், சயின், யுத்" அதாவது "இதுவும் கடந்து போகும்" (This too shall pass). அந்த நொடி சாலமனுக்கு ஒரு ஞான தெளிவு கிடைக்கிறது. உலகின் இந்த செல்வங்கள் எல்லாம் ஒரு நாள் தூசாகிப் போகிறவை என்ற ஒரு தெளிவு பிறக்கிறது.

"நீர்க்குமிழிக்கு நிகரென்பர் யாக்கை, நில்லாது செல்வம்..." என்று எங்கோ எப்போதோ ஒரு பழைய பாடல் ஒன்றை படித்ததாய் ஞாபகம். இதே அர்த்தத்தை தருகிற வார்த்தைகள். நம் வாழ்க்கையும் அப்படித்தான் போகிறது. என்றோ எப்போதோ கிடைத்த கிடைக்கிற ஒரு நிமிட சந்தோஷத்திற்காக நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். எத்தனைப் பேர், ஒரு நிமிட செலவில் நம் குழந்தையின் உள்ளங்கால்களைப் பார்த்து பூரித்து போய் இருக்கிறோம்? கோவிலுக்கு செல்லும் நமக்கு அங்கு கோபுரங்களில் பறக்கிற புறாக்களை இரசிக்க நேரம் இருக்கிறதா? வார இறுதி நாளின் கொண்டாட்டத்திற்காக ஒரு வாரம் முழுதும் தூங்க நேரமில்லாமல் திரியும் மனிதர்கள் தான் நம்மிடையே அதிகம். நம் தாத்தாவும் பாட்டியும் நமக்காக, நம்முள்ளே விட்டுச்சென்ற கதைகள் யாருக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது? அவர்கள் சொன்ன கதைகளில் ஒரு சதவீத கதைகளையாவது நம் குழந்தைகளுக்காக எடுத்த செல்ல முடியுமா என்றால் அதற்கு முக்கால்வாசி பேரிடம் ஆதங்கம் பொதிந்த, பெருமூச்செறிந்த மௌனம்தான் பதில்.எங்கோ எப்போதோ தொலைந்து போன சுயத்தை இன்று எல்லாரிடமும் தேடிக் கொண்டிருக்கிறது மனது.

வருங்கால நாட்களை நினைத்து நிகழ்கால நொடிகளை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நொடியும் அர்த்தமற்ற மௌனங்களுடன் ஏதோ ஒரு பெயர் தெரியாத கரும்புள்ளியில் கலக்கிறது. இதெல்லாம் எதற்காக? ஏன் இந்த அன்னியப்படுதல்? இவைக்கெல்லாம் விடை எந்த மனிதனால் தர முடியும்?

Comments

Ravishna said…
வினாக்கள் நன்றாக தான் இருக்கிறது. இருப்பினும் வருகின்ற காலங்களில், நம்முள் எத்தனை பேர் நிம்மதியுடன் இருப்பார் என்பது நமக்கே தெரியாது. அதற்க்காக தான் இப்படி இருக்கின்ற காலங்களில், ஓடி ஓடி சம்பாதிகின்றனர்...

நிம்மதிகளை எங்கோ நமக்கு நாமே தொலைத்து விட்டு, நான் நிம்மதியாய் இல்லை என்று நம்மை நாமே திட்டிக்கொள்கிறோம்.

நட்புடன்,
ரவிஷ்னா
Brindha said…
Thoughtful!! Keep posting!!

பின் தொடர்பவர்கள்