மீண்டும் ஒரு பயணம்..


சென்னையில் இருப்பதினால் இருக்கிற ஒரு முக்கியமான பாதிப்பு எந்த இடத்திற்கும் அவ்வளவு லேசில் போக முடிவதில்லை. இந்த ரிசர்வேசன் என்ற ஒரு கோட்பாடை வைத்துக் கொண்டு இவர்கள் அடிக்கும் கொட்டம். (நான் சொல்வது train, cinema ticket போன்ற reservationகளை. வேறு வகையாக யோசித்து தவறாக எடுத்துக்கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல!)

Reservation என்ற உடன் நமக்கு முதலில் தோன்றுவது இந்த புகைவண்டி என்று நாமகரணம் சூட்டப்பட்ட இரயில் வண்டிதான். (புகைவண்டி என்ற சொல் தம் அடிப்பவர்களையும் குறிப்பதனால் இங்கே இதை விளக்க வேண்டி வருகிறது. ) ஒரு நல்ல நாள் என்றால் போதும்.. மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே computerஇன் முன் கண்களை கசக்கிக்கொண்டு உட்கார வேண்டியிருக்கிறது. இதனாலேயே ஊருக்குப் போவதற்குண்டான ஆசையே விட்டுப்போகிறது. சரி ஒரு பந்தாவாக A/C இல் போய் இறங்கலாம் என்று பார்த்தால் நம்மைப் போலத்தான் நாட்டில் எல்லாரும் இருப்பார்கள் போல. விட்டால் ரயில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு போகிற அளவுக்கு அங்கே waiting list வேறு. இத்தனை இக்கட்டுகளையும் தாண்டி ஊருக்கு ticket கிடைப்பது நம் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் செய்த ஒரு பெரும் புண்ணியம். (ஒரு காலத்தில் ticket கிடைத்ததை கொண்டாடும் வகையில் வேலை பார்க்கும் தளம் முழுக்க treat வைத்த கதையெல்லாம் உண்டு.)

சில சமயங்களில் ஊருக்கு போகிறபோது இவை எதிலும் இடம் கிடைக்காமல் கடைசி நேரத்தில் பேருந்தில் book செய்து போவதும் உண்டு. இங்கே அதுதான் கொடுமை. ஒரு சமயம் அப்படி இடம் கிடைக்காமல் ஏதோ ஒரு பேருந்தை பிடித்து ஊருக்கு போகலாம் என்று நினைத்து எழும்பூருக்குச் சென்றேன். அங்கு ஊரே திரண்டு வந்த மாதிரி ஒரு கூட்டம். சென்னையே காலி செய்துகொண்டு கிளம்பிய மாதிரி ஒரு தோற்ற மாயை. இருக்கிற எல்லாரும் ஆளுக்கு ஒரு மடிக்கணிணியை தோளில் தூக்கிகொண்டு நின்று கொண்டிருந்தார்கள், குழாயடி சண்டைக்கு பெண்கள் வரிந்துக்கட்டிக் கொண்டு நிற்பது போல. அந்த கூட்டத்திலேயே நான் ஒருத்தன் தான் எதுவுமே செய்யாமல் அங்கு வந்து நின்று கொண்டிருக்கிற அபலைப் பையன் என்பது எனக்கு கொஞ்ச நேரம் கழித்துதான் தெரிந்தது. அத்தனை பேர் கையிலும் ஒரு ticket. என் பி.பியை எகிற வைக்க இது போதும். சரி இனி எங்கே டிக்கெட் கிடைக்கப்போகிறது என்று கிளம்புகிற சமயத்தில் ஒருத்தர் முன்னாடி வந்து நின்றார். நல்ல சாராய நெடி. அப்போதே கொஞ்சம் பல்பு எரிந்திருக்கவேண்டும் எனக்கு. அந்நேரத்தில் fuse புடிங்கியது போல் எதுவுமே தோணாமல் அவருடன் சென்றேன். போகிற வழியெல்லாம் 'நல்ல வண்டி சார். push back seat.. தூங்க ஆரம்பிச்சீங்கன்னா அலுப்பே தெரியாது. விடிஞ்சா ஊருக்குப் போயிரலாம்' என்றே சொல்லிக்கொண்டு போனார் அவர், மண்சட்டிக்குள் கல்லைப் போட்ட மாதிரி. அப்போதாவது கொஞ்சம் உஷாராகியிருக்க வேண்டும். . அதுவும் இல்லை. கடைசியில் கடைக்குப் போன போது ஒரே ஒரு பேருந்து. 700 ரூபாய் என கறாராக் சொன்னார் அந்த கடையில் இருந்தவர். வேறு வழியில்லாமல் கொடுத்து தொலைத்தேன். சரியாக ஒரு முக்கால் மணி நேரம் கழித்து (அரை மணி நேரத்துக்குள்ளாக வந்திருக்க வேண்டிய வண்டி அது) வந்தது அது. பேருந்தா,  இல்லை vanஆ என்று தெரியாத அளவிற்கு ஒரு வினோதமான ஒரு வஸ்து உருண்டு வந்து நின்றது. ஊருக்குப் போக வேண்டிய ஒரு காரணத்தினால் அந்த கடைக்காரனையும் பகைத்துக்கொள்ளாமல் செல்லவேண்டியிருந்தது... 


ஏறி உட்கார்ந்த உடனேயே பக்கவாட்டில் ஒரு கம்பி இருந்ததைக்கண்டு கடைசியில் push backஆவது கிடைத்த சந்தோசத்தில் அதை கொஞ்சமாய் இழுத்தேன். பின்னாடி இருந்த ஒரு பெண்மணி அதை விசுக்கென்ற அவர் பக்க இழுத்தபின் தான் தெரிந்தது அது ஒரு துடைப்பம் என்று. ஆனால் அப்படி மதுரையில் கிடைக்காத தென்னமாறும், ஈச்சமாறும் என்ன இங்கே சென்னையில் கிடைத்து விட்டது என்பது எனக்கு இன்று வரை தெரியாத வெளிச்சம்..

எப்படியோ இடித்துக்கொண்டே வந்து ஒரு வழியாக கண்ணயர்ந்த நேரம். நறுக்கென்று என்னவோ கடிக்க எழுந்து பார்த்தால் மூட்டைப் பூச்சி. கொடுமை. மூட்டைப்பூச்சி கடிக்கும் என்பதை விட அது இருக்கிறது என்ற ஒரு எரிச்சல் தான் பாதி தூக்கத்தை கலைக்கிறது. அப்படி கலைந்ததுதான் என் தூக்கமும். அப்படியே முழித்துக்கொண்டே கிடந்தேன்.

பொழுது விடிந்தது. சரி ஊருக்கு கிட்டத்துல வந்துட்டோம் போல என்று வெளியே பார்த்தால் அது என்ன ஊர் என்றே தெரியவில்லை. ஏதோ ஒரு குளமும் அதில் நாலு எருமை மாடுகளும் குளித்துக்கொண்டிருந்தன. கொஞ்ச தூரம் போனபின் தான் தெரிந்தது திருச்சியைக்கூட நாங்கள் நெருங்கவில்லை என்பது. அதற்கு பிறகு அந்த வண்டியே கூச்சலிட்டபின் தான் அடுத்த விஷயமும் எங்களுக்குத் தெரிய வந்தது. அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவனுக்கு முதலில் மதுரைக்குப் போக வழியே தெரியாதாம். தலையில் அடித்துக்கொள்வதையும் அவன் கூடவே போவதையும் தவிர வேறு வழி தெரியாமல் நாங்களும் அவன் வழியிலேயே போனோம். ஆனால் இன்னமும் அந்த பின் சீட்டுப் பெண்மணிக்கு என் மேல் என்ன கோபம் என்றே தெரியவில்லை. கடைசி வரை கோவில்பட்டி வீரலட்சுமி போல முறைத்துக்கொண்டே வந்தாள். ஒரு விளக்குமாறை இழுத்தது அவ்வளவு பெரிய குற்றமா??

சரியாக 14 மணி நேரம் ஓட்டி ஊருக்கு கொண்டு வந்து இறக்கிவிட்டான் அந்த வண்டியை உருட்டிக்கொண்டு வந்தவன். இறங்கியவுடன் வழக்கம் போல ஆட்டோக்காரனிடம் பிச்சையெடுத்து (அதாவது பேரம் பேசி...) வீட்டிற்கு போய் பந்தாவாக இறங்கினேன். வாசலில் நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டு அக்காக்களின் நலம் விசாரிப்பு. (ஆனால் அவர்களாவது அப்போதே சொல்லி இருக்கலாம்.) அதையெல்லாம் தாண்டி வீட்டிற்கு போனேன். போன உடனே சட்டென்று குளித்து முடித்து தூங்கவேண்டும் என்ற எண்ணத்தோடே வீட்டிற்கு போய் பார்த்தால்..

வாசலில் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது!!!

Comments

Anonymous said…
Fantastic goods from you, man. I've take into account your stuff prior to and you're simply
extremely magnificent. I really like what you've got right here, certainly like what you are stating and the
way in which you assert it. You make it enjoyable and you still take care of to keep it wise.
I can't wait to learn far more from you. That is actually a tremendous website.

Popular Posts

பின் தொடர்பவர்கள்