வார்த்தைகள் - குப்பைமேடு

வார்த்தைகளே கடவுள். இந்த பிரபஞ்சத்தின் நிகழ்வுகளுக்கெல்லாம் வார்த்தைகளே சூத்திரதாரி. வாழ்க்கையின் வெளி முழுதும் வார்த்தைகளின் வித்துக்களே தூவப்பட்டிருக்கின்றன. இங்கு நடக்கின்ற ஒவ்வொன்றும் அவற்றாலேயே தொடங்குகின்றன, அவற்றாலேயே முடிகின்றன. தன்னை ஒரு மனிதனால் சிருஷ்டிக்க வைத்து அவனை பிரம்மாவாக்குகிற இன்னொரு பிரம்மா இந்த வார்த்தைகள்தாம். தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொண்டு, வெளியே வர மறுக்கிற வார்த்தைகளும், மனதிற்குள் சூல் கொண்டு பின்னர் கைக்கு வர மறுக்கிற வார்த்தைகளை, குழந்தைகளுடன் சமனப்படுத்தலாம். செல்லமாய் ஊடாடி, சில நேரங்களில் குலவு மொழி பேசி கொஞ்சுகிற வார்த்தைகள் அனுபவித்துப் பார்த்தால் அவ்வளவு அழகு.


சத்தம் மறந்து போன வார்த்தைகள் மோனம். ஒலிப் பிரயோகம் நிராகரிக்கப்பட்டு அவை காகிதத்தில் படரும் போது அவை எழுத்து. நிதர்சனம் மறந்த வார்த்தைகள் கனவு. உணர்வுக்குள் கலந்து வெளிவராத வார்த்தைகள் நெகிழ்ச்சி. இப்படியாகவே வார்த்தைகள், வாழ்க்கையின் வேருடன் பின்னியிருக்கின்றன.

சொல்ல முடியாத காதலைப்போலவே, சொல்ல முடியாத வார்த்தைகளுக்கும் கணம் அதிகம். உணர்வுகளை வார்த்தைகளாய் வடித்த மனிதர்கள் கிராமங்களில்தான் அதிகம். ஏட்டில் வடிக்காத, இன்றைய உலகம், நாகரிகம் என்ற அளவுகோலின்படி நிராகரித்த வார்த்தைகள் அவை. உலகமே கான்க்ரீட் காடுகளாய் மாறிப்போன பிறகு, காலச்சுவடுக்குள் அமிழ்ந்து கரைந்து போன ஆயிரம் ஆயிரம் உயிரிகளைப் போல இவர்களும் ஜூரணிக்கப்பட்டுவிட்டார்கள்.

வார்த்தையற்ற உலகம் எப்படி இருக்கும்? வார்த்தையற்ற மௌனம் பூண்ட மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? உலகமே மௌனிகளின் தீவாய்ப் போனால் எப்படியிருக்கும்? மனிதர்கள் எல்லாரும் நடைபிணமாய் திரிகிற நிலையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? உணர்ச்சியற்றுத் திரிகிற காட்டு விலங்குகளைப் போல எந்த உணர்ச்சியும் காட்டாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்போம். நீர்க்குமிழி யாக்கைக்குள்ளிருந்து மொழி வெளிவராவிடில், மொத்த உடம்பும் பாழ்.


நம் மூளை முழுதும் வார்த்தைகளே வியாபித்திருக்கின்றன. மூளையின் ஒவ்வொரு திசுவிலும், திசுவின் ஒவ்வொரு நரம்பிலும், நரம்பின் ஒவ்வொரு முடிச்சிலும், முடிச்சின் வழி செல்கிற ஒவ்வொரு செய்தியிலும் வார்த்தைகளே அடங்கியிருக்கின்றன. பிறவியிலேயே பேச முடியாத மனிதன் கூட வார்த்தைகளை வெளிப்படுத்த சைகைகளைப் பயன்படுத்துகிறான். பிரபஞ்சப் பரப்பின் ஒவ்வொரு புள்ளியையும் வார்த்தைகளின் கண்கள் உற்றுப் பார்த்தபடியே இருக்கின்றன. உணர்வுகளற்ற முகத்துடன் காலம் தனக்கான வார்த்தைக்கண்களை ஒவ்வொரு அசைவிலும் தேடிக்கொண்டே இருக்கிறது...

Comments

பின் தொடர்பவர்கள்