அவள்.. அவன்...

மழை அப்பியக் குளிரோடு இந்த காலமும் உறைந்து போனதாகப் பட்டது எனக்கு. என்றைக்கும் போல அன்றும் அதே அதிகாலைதான். வழக்கமாய் எழுந்திருக்கிற அதே நேரம். ஆனல் கொஞ்சம் மாறுதலுடன். இரண்டு நாட்களாய் அவள் இல்லாத இந்த அதிகாலை, இந்த உலகம்..இந்த மாறுதல் இந்த இரண்டு நாட்களில் கொஞ்சம் பழகிவிட்டிருந்தது, இனி அவள் மீண்டு வரவே மாட்டாள் என்ற நிலைக்கு, அப்படி ஒரு இடத்திற்கு அவள் போன பின் இனி இதைப் பற்றி எல்லாம் பேசியோ இல்லை நினைத்தோ நடக்கப் போவது ஒன்றுமில்லை. ஆனால் அழுதக் கண்களின் ஈரமும், புதிதாக வெள்ளையடித்த இந்த வீட்டின் மணமும் சேர்ந்து, இந்த வீட்டிற்கு ஒரு இனம் புரியாத எரிச்சல் அடைய வைக்கிற அமைதியை கொண்டு வந்திருக்கிறது, இத்தனை நாட்கள் கூடி இருந்த இந்த ஜனக்கூட்டம் கலைந்த பின் தான் உண்மையான் தனிமையும், அதன் அர்த்தம் செறிந்த மௌனமும் விளங்குகிறது. உண்மையில் இந்த தருணத்தில் இந்த மௌனமும் இந்த தனிமையும் எனக்குத் தேவைதான்.


உலகம் எப்போதும் சரியாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் போக்கில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. நாம்தான் அதை உணர்ந்துகொள்ள மறுக்கிறோம். மாற்றத்தின் நித்தியம் அதன் சாரம்சங்களை உணரும்போதுதான் தெரிகிறது. வாழ்க்கையின் வெறும் கருப்பும் வெள்ளையுமாய் போன நேரமிது. 4 வயது மகனுக்கு இன்னும் தன் தாய் ஏதோ பெயர் தெரியாத ஊருக்குப் போய் இருப்பதாய் நினைப்பு. அவனும் இரண்டு நாட்களாய் எப்போது வருவாள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறான். எப்போதுமே திரும்பி வரமுடியாத அந்த ஊருக்கு அவன் ஒரு பெயர் வைத்திருக்கிறான். அந்த ஊருக்குத்தான் அவள் போய் இருப்பதாக அனுமானித்துக்கொண்டு சமயங்களில் வாசலைப் பார்த்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும்போது எனக்கும் செத்துவிடத்தோன்றும். ஆனால் முடிவெடுக்கும்போது இருக்கிற தைரியம் என் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற விஷயங்களை செயல்படுத்தும்போது வருவதில்லை. அதற்கு ஒரு சாக்கு சொல்லிக்கொள்வது போல அவனுடைய புன்னகை வேறு. இன்னமும் தன்னை சுற்றி இருக்கிற சூனியம் என்னவென்றுத் தெரியாத பருவம் அவனுக்கு. அவளது உடலை நடுவீட்டில் கிடத்தி அழுது கொண்டிருக்கையில் எல்லாரும் அழுததைப்பார்த்து அவமும் அழுதானே தவிர்த்து விஷயத்தின் ஆழம் புரியவில்லை அவனுக்கு, என் சோகத்தை அவனுக்கு சொல்லி புரியவைக்கவும் முடியாது. சொன்னாலும் இழப்பின் கணத்தை புரிந்து கொள்கிற பக்குவம் அவனுக்கு இல்லை.


நாளை அவனுக்குப் பிறந்த நாள். இது வரை நூறு முறையாவது கேட்டிருப்பான். அவன் அம்மா கையால் செய்த பனியாரம் அவனுக்கு அவ்வளவு இஷ்டம். நகரத்தின் நடுவே நாங்கள் குடியேறிய பிறகு கிராமத்து உணவுகளின் சுவையே அவனுக்கு வெகு தூரமாய்ப் போனது. அதிலும் அவளுக்கு செய்யத்தெரிந்த ஒரே பலகாரம் இந்த பனியாரம் மட்டும் தான். அதையும் என்றைக்காவது ஒரு நாள் தான் செய்வாள் என்ற போதிலும் எங்களை திருப்திப்படுத்த அதுவே போதுமானதாக இருந்தது.


எது எப்படியோ... நாளை அவனுக்குப் பிறந்த நாள். நன்றாய் தூங்கிக்கொண்டிருக்கிறான். மரணத்தின் வலி அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவனுக்குத் தெரிந்த ஒரே திருவிழாவான இந்த பிறந்த நாளும் அவனுக்கு வாய்க்கப் பெறவில்லை எனில் ரொம்பவும் ஏங்கிப் போய்விடுவான். அவளது இறப்பைக்காட்டிலும் என்னை வாட்டி விடும் அது. அதற்காக இப்படி இழவு வீட்டில் பிறந்த நாள் கொண்டாடினால் எல்லாம் என்ன சொல்வார்கள்? என்ன சொன்னால் என்ன? எனக்கு இந்த உலகத்தைப் பற்றிக் கவலை இல்லை. அதைப் பற்றி நான் கவலைப்பட்டாலும் கவலைப்படாவிட்டாலும் அது அதன் வழியில் இயங்கிக் கொண்டுதானிருக்கும். ஆயிரம் ஆயிரம் பேர்களினிடையே என் ஒருத்தனின் இரைச்சல் மட்டும் தனித்துக் கேட்கப் போகிறதா என்ன? போய் சேர்ந்த ஒருத்திக்காக இருக்கும் இவனை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அவன் பிறந்த நாள். அவன் கொண்டாடட்டும். அதில் தலையிடுவதற்கு நான் யார்? அவன் நிம்மதிக்கு இனி நான்தான் பொறுப்பு. அவள் பனியாரம் செய்யக் கற்றுக் கொண்ட அந்த புத்தகம் எங்கே?

Comments

பின் தொடர்பவர்கள்