Monday, December 6, 2010

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - ஒரு சாமானியனின் பார்வையில்

இந்த விமர்சனத்தை நீண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்து இப்பொழுதுதான் இதற்கு நேரம் வாய்த்திருக்கிறது. நடு நடுவே ஏற்பட்ட வேலைப்பளுவும், உடல் நிலை மாற்றங்கள் என.. சரி விடுங்கள்.. அது இந்த இடத்திற்கு தேவையில்லாத ஒன்று...

தமிழ் வலைப்பூக்களில் கவிதைக்காய் தனக்கென ஒரு தடம் பதித்தவர் நிலாரசிகன். தமிழ் கவிதையுலகில் அழுத்தமான பதிவைக் கொண்டவர் இவர். ஒரு கவிஞராய் இருத்தலே எழுத்தில் இப்படி ஒரு கவித்துவ நடையை கொண்டு வர காரணம் என்பது என் கருத்து. இணைய உலகில் இவருக்காய் இருக்கிற ஆயிரம் ஆயிரம் இரசிகர்களிடையே நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமை!

சிறுகதைகளுக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி நாசுக்கானது. மிக மெல்லியது. அப்படியாய் உள்ள இடைவெளியில் அங்குலம் தவறாது சரியாகப் பயணித்திருக்கிறார் நிலாரசிகன்.

சாமானியர்களை, எந்த ஒரு கதாநாயக குணங்களும் இல்லாத மனிதர்களைக் கொண்டு கதையை நகர்த்த முடியுமா?

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - மெல்லியதான மன உணர்வுகளை மிக அழுத்தமாக பதிகிற ஒரு முயற்சி. இந்த காலகட்டத்தில் வந்திருக்கிற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதிவு.

இந்த தொகுப்பின் ஒவ்வொரு கதையும் நிகழ்காலத்தில், நம் அன்றாடங்களில் தத்தம் முக்கியத்துவத்தை இழந்து விட்ட சின்ன சின்ன விஷயங்களால் நிரம்பியது.

டைரிக்குறிப்புகள் என்றுமே சுவையானதுதான். இன்னொருவரின் அந்தரங்கம், என்றுமே மதிப்பிற்குரியது எனினும் அவற்றைப் படிப்பதற்காய் அலைகிற சாத்தான் குஞ்சு எல்லார் மனதிலுமே உண்டு. அப்படி திருட்டுத்தனமாய் எடுத்துப் படிக்கப்படுகிற ஒரு டைரியில் எழுதப்பட்டதொரு அந்தரங்கம் மிகச் சோகமானதாய், வாழைக்கறைப் போல மனதில் அப்பிக்கொண்டால் எப்படி இருக்கும்? அதுதான் யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகளின் முதற்பாதி. சிறு வயதிலேயே, பாலியல் வன்முறை என்ற சொல்லை அர்த்தப்படுத்திக் கொள்ளத் தெரியாத வயதில் சீரழிக்கப்படுகிறாள் அந்த சிறுமி. ஒரு கட்டத்தில் அவளது தோழி கொல்லப்பட, அதற்கு பின் நின்று போகிறது அந்த டைரிக்குறிப்பு. அந்த இடத்தில் நம் பதைபதைப்பும் கொஞ்சம் ஏறுகிறது. அதற்கு பின் அவர் பயணம் செய்கிற அதே பெட்டியில் பயணப்படுகிற இன்னொரு பெண், தான் எழுதுகிற டைரிகுறிப்பு தவறி விழ அதை எடுத்துப் படிக்கையில் அவள் சிவப்பு விளக்கைச் சேர்ந்தவள் என்றும் மீட்கப்பட்ட வாழ்வை வாழ்பவள் என்றும் தெரியவருகிற போது நமக்கு அப்பாடி என்று ஒரு நிம்மதி. முதல் டைரி எழுதிய பெண்ணும் இந்த பெண்ணும் ஒன்றா? தெரியாது. இருப்பினும் விஷயங்களை தொடர்புபடுத்தி பார்த்தாவது அதற்கு ஒரு விமோசனம் தேட நாம் விழைகிற சமயம், ஒரு எழுத்தாளனாய் வெற்றிப் பெறுகிறார் நிலாரசிகன்.

படிப்பவனை கதைக்குள் ஒரு அங்கமாய் கொண்டு வராத வரையில் எந்த கதையும் வெற்றி பெறுவதில்லை. வாசகனையும் அந்த கதைக்குள் குறைந்தது ஒரு மூன்றாவது மனிதனாகவாவது ஒரு அந்தஸ்து கொடுக்கும் பொழுதுதான் கதை வெற்றிப்பெறுகிறது, கதாசிரியனும் வெல்கிறான்.

நம் ஒவ்வொருவரின் வீட்டிற்கு எதிரிலும் நமக்கு பிடித்த ஒரு பெண் இருக்கிறாள். இன்றைக்கும் நம் கண்களை மூடி பால்யத்தை நினைக்கையில் நம் எதிரில் ஓடி வந்து நிற்பாள் அவள். அவள் நம் கூடவே இருந்துவிட்டால் என்ன என்ற நினைப்பு நம் எல்லோர் மனதிலும் ஒரு கணமேனும் வருவது சகஜம். வந்திருக்கவும் கூடும். அப்படிப்பட்ட நினைவின் நீட்சியே இந்த சங்கமித்திரை என படுகிறது. எனக்கு. இதே போல வால்பாண்டி சரித்திரம், சைக்கிள், பட்டாணி, ஆலம், தூவல், சேமியா ஐஸ் இவையெல்லாம் நிச்சயம் நம் பால்யத்தின் எச்சங்கள். நகர வாழ்க்கையில் சிதைந்து போன மனதில் மிச்சமிருக்கிற கிராமத்து வாசனையை, கான் க்ரீட்கூடுகளும், வயதின் பொறுப்புகளுமாய் சிக்கிக்கொண்ட நம் பால்யங்களின் நினைவுகளை தட்டி எழுப்புவது இது போன்ற கதைகள்தான். இந்தக் கதைகளை படிக்கையில் மீண்டும் குழந்தையாதலின் சாத்தியங்களை தேடத் துணிகிறது மனம்.

இன்னமும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய கதைகள் உண்டு.

ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ஏ பிரிவு முதலில் குறும்புகளுடன் ஆரம்பித்து செல்லமாய் ஊடாடி பின்னர் சிணுங்கி, இறுதியில் நம்மையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு போகிறாள். ஏனோ அடையார் கேன்சர் இன்ஸ்டிட்டியூட் குழந்தைகள் ஞாபகம் வந்தனர் இந்த கதையை படிக்கும் போது. உண்மையிலேயே இந்த நிலைமை எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என்று வேண்டுவதா இல்லை இந்த நிலைமை எந்த பக்கத்துவீட்டுக்காரனுக்கும் வரக்கூடாது என்று வேண்டுவதா என்ற சந்தேகம். இதில் கொஞ்சம் நகைச்சுவையும் கிண்டலும் தொனிக்கலாம். ஆனால் கதையை முழுதும் படித்துப் பார்த்தால் தெரியும் இது எந்த அளவிற்கு உண்மை என்று!
அடுத்ததாய் வேட்கையின் நிறங்கள் - சமூகத்தில் நம்மால் தெரிந்தோ தெரியாமலோ ஒதுக்கப்பட்ட, இன்னமும் சொல்ல போனால் வார்த்தைகளால் ஒடுக்கப்பட்ட இனம். எத்தனை அரசாங்கங்கள் வந்து எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் அவர்களால் நம்மிடம் திருத்த முடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று. அப்படிப்பட்டவர்களின் மனதின் ஆழத்திற்கு சென்று அதைத் தொட்டு கதை எழுதியவர்கள் என யாரும் எனக்குத் தெரிந்து இல்லை. அப்படிப்பட்ட ஒரு விஷயத்தில் கால்பதித்து மிக நுணுக்கமாய் ஆராய்ந்து எழுதியது பாராட்டுதலுக்குரியது. அவரை தொடர்ந்து படிப்பவன் என்கிற உரிமையில் அவரைப் பாராட்டும் உரிமையை எடுத்துக் கொள்கிறேன்.

கதை உத்திக்காக ஒரு கதையை பாராட்ட வேண்டுமென்றால் அது கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் கதையைத்தான் பாராட்டவேண்டும். இப்படி ஒரு உத்தியைக் கையாளுகையில் மிகவும் கவனம் தேவை. ஏனெனில் அது வாசகனை குழப்பி திசைத்திருப்பி கதைத்தடத்தில் இருந்து வேறெங்கிலும் இட்டுச் செல்லும் அபாயம் அதிகம். அந்த வகையில் ஒரு சாமர்த்தியமாக கதையை நகர்த்துகிறார் நிலாரசிகன். சில சமயங்களில் படம் எடுப்பதும் கதை எழுதுவதும் கூட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் இதே உத்தியை படத்தில் செயல்படுத்தினால் அது இன்னமும் கவனமாய் கையாளவேண்டும். ஒரு குறும்படமாய் இந்த கதையை எடுப்பதற்கு எல்லா தகுதியும் உண்டெனப்படுகிறது எனக்கு, தைரியமாய் இதில் இறங்கலாம். அதற்கு நான் உத்தரவாதம்.

வேலியே பயிரை மேய்ந்த கதை - அப்பா சொன்ன நரிக்கதை. கதையை படித்து முடிக்கையில் திக்கென்கிறது. இப்படியும் சிலரா என்று எண்ணும் பொழுதில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று ஆணியறைகிறது நிதர்சனம்.

சம்யுக்தை - அப்படியே ஒரு கவிதை. எழுத்தின் பிம்பங்களில் தொலைந்து போன ஒருவனின் வாழ்க்கை. சம்யுக்தையின் வருகை, அவர்கள் காதல், பின்னர் அவனின் மரணம் என ஒரு புத்தகத்திற்காய் வாழ்ந்த ஒருவனின் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்திருக்கிறார். சம்யுக்தை ஏதோ ஒரு கதையன்று. நம்மருகே வாழ்ந்து பரிமளிக்குமுன் பெண்ணால், கைக்கிளையால் மடிந்து போன நம் சக நண்பனின் கதையாகவும் இருக்கலாம்.

வேலியோர பொம்மை மனம் - தலைப்புதான் கொஞ்சம் நெருடுவதாய் படுகிறது. வேறேனும் ஒரு நல்ல பெயராய் யோசித்திருக்கலாம். எனிலும் கதைக்கு சம்பந்தப்பட்டதாய் இருப்பதால் பரவாயில்லை. தலைப்பைத்தவிர கதை அருமை. போரும், அதன் வன்தாக்கமும் கதையில் மிக அழுத்தமாய் பதியப்படுகிறது. அன்பின் வலிமை எப்பேர்ப்பட்ட முள்வேலிகளையும் தாண்டியது என்பதை அப்பட்டமாய் சொல்கிறது இந்த கதை.

இறுதியாய் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டிய கதை மை லிட்டில் ஏலியன் ஃப்ரெண்ட். நல்லதொரு அறிவியல் புனைகதை முயற்சி. இது ஏதடா கதைப் புத்தகத்திற்குள் ஒரு புத்தக விமர்சனம் என்று நினைக்கையில் இறுதியில் தெரிகிறது இதுவும் ஒரு கதையென்று. சிறுகதைக்கு தலைப்பும் முக்கியம் என உணரவைக்கிற ஒரு கதை :-)

இந்த கதைத் தொகுப்பில் யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள், அப்பா சொன்ன நரிக்கதை, சம்யுக்தை, மை லிட்டில் ஏலியன் ப்ரெண்ட் இந்த கதைகளை மட்டும் இத்தொகுப்பிலிருந்து நீக்கி தனிப்புத்தகமாய் ஆக்கிவிட்டால் இன்னொரு ஆர். கே. நாராயண் நமக்காய் கிடைத்தார் என பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்னொரு மால்குடி டேஸிற்கு உண்டான எல்லா தகுதியும் இருக்கிறதாய் படுகிறது எனக்கு.

இதில் உள்ள ஒவ்வொரு கதையும் நம் வாழ்க்கையில் கடந்து சென்ற, கடந்து போகிற, கடக்கப் போகிற தருணங்கள். இந்த கதையை படிக்கிற தருணத்தில் நம் அருகிலேயே சம்யுக்தையும், ப்ரியாக்குட்டியும் இருக்கலாம். பேருந்தில் நம் அருகே அமர்ந்து சங்கமித்திரை பயணித்துக்கொண்டிருக்கலாம். யாருக்குத்தான் தன் சொந்த வாழ்க்கையை ஒரு புத்தகமாய் படிக்கிற ஆவல் இருக்காது? இதற்காய் ஒரு புவியியல் அந்தஸ்தைத் தேடுவது வேலையற்ற வேலை. இந்த கதைகள் நாம் எல்லோரும் கவனிக்கத்தவறிய நொடிகள்.

படித்துப்பாருங்கள்.

மொத்தத்தில் இந்த தலைமுறை எழுத்துக்களில் குறிப்பிடத்தகுந்த, அழுத்தமான, வரவேற்கப்படவேண்டிய பதிவு யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்.

புத்தகத்தை வாங்க - http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79

1 comment:

electraspider said...

fantastic review....i never read the book mentioned....but the review itself impresses :))

பெரியாழ்வாருக்கு...

ஒரு நிழல் தன்னையுடையேன் உலகளந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்!