யாவர்க்குமாம் ஓர் நதி...


உனக்கு நினைவிருக்கிறதா?
நாம் ககனமாடிய அப்பொழுதுகளை
காற்றுப் பாலம் கடந்த நொடிகளை
வண்ணத்துப்பூச்சியுடன் தேனுண்ட இதழ்களை

யாதுமற்றதாய் போன நீல வெளிகளில்
யாவ்ர்க்குமான அந்தியில்
மோனக் கரைசல்களில்
அலையடித்துச் செல்லும் சாதகப் பறவை
நினைவின் திரைகளை
வருடிச் செல்லும்

யாழ் மீட்டுகிறான் ஒருவன்

ஏகாந்தக் களங்களை 
மெல்லியதாய் வருடிச் செல்கிறது அது

நர்மதையின் தீரத்தில்
இக்கணம் இப்போழ்து
இருணம் களைகிறது
எழும்பி அடர்ந்து பின்
இழைகிற அலைகளில்
மானுட விதி

இன்னமும் அலைந்து கொண்டுதான் இருக்கிறது
யாவர்க்குமாம் ஓர் நதி...

Comments

பின் தொடர்பவர்கள்