எனக்குத் தெரியும்
ஒரு கட்டத்தில்
அதாவது 
யாருமில்லாத இந்த இறுதியில்
நீயும் நானும் மட்டுமே
தனித்து விடப்படுவோம் என்று
இனி
நாம் புனைவுகளை எழுதத் தேவையில்லை
தூரிகைகளைக் கூட உடைத்தெரிந்து விடலாம்
கவிதைக் கிறுக்கிய காகிதங்கள் எல்லாம் 
அடுப்பெரிக்கப் பயன்படட்டும்
மனிதர்கள் என 
நாம் நம்பியவை
அழகு என 
நாம் அள்ளிச் செல்லப் பிரயத்தனப்பட்டவை
எல்லாமும்
இங்கே
இவ்விடம்
இந்த பிலத்தினுள் கறைந்தபின்
மீதமிருப்பது நீயும் நானுமே
ஒரு யின்யாங்கின் 
கருப்பு வெள்ளையாக
இனி நாமிருவரும்
மெதுவாக 
கனவுத் திட்டாக
சொல்லா மொழியாக
விழுங்கும் நீராக
நீல வானில் கறைந்துபோகும்
மேகமாக
யார் தேடியும் காணக் கிடையாத
இந்தப் பெருவெளியில்

Comments

பின் தொடர்பவர்கள்