ஒரு தெளிந்த நதி 
கலங்கிக் கொண்டிருப்பதாய இருக்கிறது
உன்னைக் கொண்டு
யான் 
எழுதத் துணியும் கவிகள்
நின்னை யாத்தல்
எளிதன்று
நின்னை எடுத்து 
எழுதத் துணிகையில்
நின்னை எண்ணுகிறேன்
நீரிலே பிறந்து காற்றை உறிந்து
வட்டக் குமிழி உயிர்ப்பதைப் போல்
உன்னிலே பிறந்த என்னை
நீ
உறிந்து கொள்கிறாய்
உன்
ஒற்றைச் சொல் கேட்க
தவமிருக்கிறேன்
காத்திருத்தல் ஆனந்தம்
தவமிருத்தல் பேரானந்தம்.
ஒலி உமிழ வேண்டிய
நின் நா
ஒளிக்கீற்றாய் தெரிகிறது
உனக்கான வார்த்தைகளை
தேடித் திரிகையில்
பறவைகளூடே தொலைகிற
நிலவைப் போல
தொலைந்து போகிறேன்
உடல் பொருள் ஆவியென
அனைத்தும் கரைந்து போய்
உன்னுள்ளே ஒடுங்குகையில்
ஒற்றைச் சிரிப்புடன்
நீ
உயிர்த்தெழ வைக்கிறாய்
ஒளிக்கீற்றாய் தெரிகிற
நீ
உடற்கூறாய் தெரியப்போகும்
நாளை எண்ணி
ஏங்குகிறது என்
சாத்தான் குஞ்சு
எனினும்
உன்னை ஒளியாய் பார்க்கவே
விழைகிறது
என் தேவப் புறா
நான் சாத்தானா
இல்லை
தேவனா?

Comments

பின் தொடர்பவர்கள்