இது சாலைகளைப் பற்றியது அல்ல

இந்தப் பாதை
இங்குதானிருக்கிறது
பல நூறு வருடங்களாக.
காடு திருத்தி நடந்து போன
முதல் மனிதனின் தடம் தொட்டு
எத்தனையோ கோடி பேர்களின்
வியர்வையையும் காலடிகளையும்
கண்டிருக்கிறது இவ்வழி.
பாண்டியர்களும் சோழர்களும்
பின் வந்த நாயக்கர்களும்
ஆங்காங்கே மண்டபங்களைக் கட்டினர்.
அப்பாவி மனிதர்களோ
சுமைதாங்கிகளை.
டில்லி சுல்தான்கள் எல்லாவற்றுக்கும் பொதுவாய்
ரஸ்தா என்று பெயரிட்டனர்.
(ஆனாலும் பாதைகளுக்கு
தான் பெயரற்று இருப்பதில்
யாதொரு விசனமும் இல்லை.)
இப்போதுள்ள மனிதர்கள்
தானாய் ஓடும் பேருந்துகளை விட்டிருக்கின்றனர்.
ஆடு மாடுகளுக்குத் தான் கொண்டாட்டம்
பிணம் கனம் கனக்கும் மனிதர்களைத் தூக்கிக் கொண்டு
திரிய வேண்டியதில்லை.

சாலையோரம் காவல் நிற்கும்
கருப்பசாமியின் அருவாளை
மக்களுக்கு அச்சுறுத்தலென
காவல்துறை பிடுங்கிக் கொண்டது.
மனிதர்கள், கருப்பசாமியைக் காட்டிலும்
சக்தி வாய்ந்தவர்கள் என நினைப்பு போல.
சாமியின் முன் கட்டியிருந்த மணியைக்
களவாடிப் போனவன்
கைகால் விளங்காமல் போன கதையை
இப்போது சொல்வார் யாருமில்லை.
இல்லை, அருவாளைக் கையாண்ட பாவத்துக்குத்தான்
நாடும் இப்படி கிடக்கிறது போல.

முன்று வருடங்களுக்கு முன்
பார்த்த மனிதர்கள் அத்தனை பேரும்
இப்போது நரை முடியொடு அலைகின்றனர்.
வெட்டவெளியாய் கிடந்த இடம் முழுதும்
இப்போது விண் முட்டும் வீடுகளாய்
விரிந்து கிடக்கிறது.
வழிகள் எல்லாம் சிறுத்தும் விட்டன.
சாலைகள் தெருக்களாய்
தெருக்கள் சந்துகளாய்
சந்துகள் ஒற்றையடிப் பாதைகளாய்.

ஒரே நல்ல விஷயம்,
சின்ன வயசில் வெருண்டு
ஓடிக் கடந்து போன சுடுகாடு
இப்போது இல்லை.
ஏதோ ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்று
அந்த இடத்தில் இப்போது குடியிருக்கிறது.

Comments

பின் தொடர்பவர்கள்