இசை
மழைக் குளிர் பாவிய இவ்விரவு, சூஃபி இசையுடனும் கபீருடனும் கழிகிறது.
இசையை ஏதொரு வகையிலாவது வார்த்தைகளில் எழுதி விட முடியுமா? பார்களில் கோடுகளாய் புள்ளிகளாய் என்னவேண்டுமானாலும் எழுதிட முடியும்தான். ஆனால், அது தரும் கிளர்ச்சியை? அது கொண்டு சென்று சேர்க்கும் அந்தத்தை? இல்லை, முடிவிலியாக தொடர்ந்து செல்லும் அதன் பாங்கை? எதை எழுதிவிட முடியும் இந்த மனிதர்களால்?
பீத்தோவனின் மூன்லைட் சொனாட்டா? கழுத்தைக் கட்டியிறுக்கி மனதை இளக்கி கண்களின் வழியாக இரு சொட்டுக் கண்ணீராய் வெளியே பிடுங்கி எறியும்தானே? அதே போலத்தான் ஷிண்ட்லர்ஸ் லிஸ்டின் பிண்ணனி வயலினும். அந்த இசைத் துணுக்கை வாசித்து முடிக்கவியலாமல் திணறி, முடித்து எழுகையில் விக்கி விக்கி அழுத வயலின் கலைஞரைப் பார்த்திருக்கிறேன். இசை, மனிதனை, அவன் மனதை, எப்படியெல்லாம் புரட்டி எறிந்துவிடுகிறது?
இசை எத்தனை படைப்புகளை சிருஷ்டித்திருக்கிறது? எங்கேயோ தூரத்தில் ஒலிக்கிற இசையைக் கேட்டபடியோ, இல்லை காதின் அருகில் அலறவிட்டு எழுதும்போதோ, வரையும்போதோ இல்லை வேறென்ன வகைமைகளிலெல்லாம் உருவாக்க முடியுமோ அத்தனை வகைகளில் நம் கை வரிசைகளைக் காட்டும்போது, அங்கே படைப்பது நாமா இல்லை இசையா? இசையே கேள்வி. இசையே விடை. இசையே கிரியாவூக்கி.
ஒரு நாடோடியின் இசையை எவ்வாறு எழுதி விட முடியும்? ஒவ்வொரு முறையும் மனதுக்குப் பிடித்த இசையொன்றை வார்த்தைகளில் வடிக்க நினைத்து எல்லா முறையும் தோற்றேப் போகிறேன். ஓரிடத்தில் தங்காது, புற உலகைத் தன் கால் தூசியின் கால் பங்காய்க் கூட மதிக்காத அவன் அக உலகு எவ்வளவு அழகானதாய் இருக்க வேண்டும்? வங்காளத்தில் அஜய் ஆற்றின் தீரத்தில் கஞ்சா குடிக்கும் சாமியார்களுக்கு மத்தியின் நடுங்கும் குளிரில் பவுல் இசைக்காகத் தேடித் திரிந்த நாட்களெல்லாம் எவ்வளவு அழகானவை?. விடிந்த காலையில் உள்ளங்கைகளெல்லாம் குளிரில் விரைத்து அந்த கனத்த பொழுதில் மனது மட்டும் இசையின் இதமான சூட்டில் மயங்கிக் கிடந்தது எல்லாம் நினைவில் வந்து போகிறது. மீண்டும் அங்கே போக வேணும். எல்லையற்றப் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கேட்கிற பவுல் இசையின் முடிவில் புலர்கிற வான் திகிரியை அஜய் ஆற்றின் கிழக்குக் கரையில் காண வேண்டும்.
"அவன் அருகில் இருக்கையில், நாபிக்கமலத்தில் இராமனின் இருப்பை உணருகையில், மனதிற்குள் ஒரு இரத்தினம் உருண்டோடும்", என்பார் கபீர்தாஸ்.
இசையால் இராமனா இல்லை இராமனால் இசையா?
உறக்கம் இல்லாது நீளும் இந்த இரவில் கபீரும் யாரோ ஒரு பெயர் தெரியாத பவுல் இசைக் கலைஞனும்தான் என் பிடாரன்கள்
Comments