செங்கால் நாரைகள்
இந்த வெள்ளிக்காகத்தான் இந்த வாரம் முழுவதும் காத்திருந்தேன். வாரத்தின் முதல் நாள் தொட்டு, வேலை ஒரு சிலந்தி வலையைப் போல மேலப்பிக் கிடந்தது. எல்லாநாட்களும் இரண்டாம் சாமத்திற்கு பிறகாய் கண்ணயர்ந்து பின் எழுகையில் அரைத் தூக்கத்து கனவுகளுடன் அதிகாலை ஒவ்வொரு நாளும் மிரட்சியுடன் என் மேல் பாவிற்று. சூரிய ஒளியில் ஒரு மணி நேரம் நிற்க ஒரு வாரமாய் தவம் கிடந்தேன்.
அந்தியம்பொழுதில் அலுவலகம் விட்டு வெளியே வந்தேன். எதிரே ஹட்சன் நதி என் போன்ற எத்தனையோ பேரின் நாட்களைத் தின்று செரித்து யாதொரு சலனமுமற்று ஓடிக்கொண்டிருந்தது. மனிதர்களின் அதீதங்களின் பாற்பட்ட ஏதோ ஒன்று ஹட்சனின் நதிப்போக்கில் இரண்டறக் கலந்து ஆற்றொழுக்கியோடியது. வலது புறத்தின் மருங்கில் துயர சாட்சியாய் நெடிதோங்கி நிறுவப்பட்ட உலக வர்த்தக மையத்தின் மேல் ஆதவன் தன் செம்பொற்கிரணங்களைப் பாய்ச்சிக் கொண்டிருந்தான். அத்த வெற்பிரண்டு இல்லாத குறையை ஹட்சனின் இரு கரைகள் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தன.
அடுத்த ஐந்து நிமிடத்தில் தொடருந்துவண்டியைப் பிடிக்க வேண்டியிருந்த நான் மௌன முனியாய் நதியழகில் இலயித்த படி கிடந்த பூங்காவின் மரத்தடியில் நடந்தேன். காதின் உள் நரம்புகளில் ஏதோ ஒரு பாடல் ஊடாடிக் கிடந்தது. ஆயினும் எதுவும் நித்திரையற்ற மனத்தின் அடியாழத்தில் சென்று தேங்கவில்லை. யாதொரு இலக்குமற்று இது என்ன பயணம்? இல்லை இலக்கு கண்ணுக்கு எதிரே இருப்பினும் இதுதான் என கணிக்கவியலவில்லையா? ஏதிந்த மாயை? சாலையோர்த்தில் படுத்துறங்கும் இங்கு என் அருகிலேயே அமர்ந்திருக்கிற ஏதிலிக்கும் இதே போலத் தோன்றுமா? இல்லை அவன் மகிழ்ச்சியாய்த்தாப் இருக்கிறானா? இரவு என்ன சாப்பிடுவான் அவன்? சரி அவனை விடு. நான் என்ன சாப்பிடுவேன்? இந்நேரம் மழை பெய்தால் என்ன ஆகும்? மேலே மூடிக்கொள்ள எதுவுமே கொண்டுவரவுமில்லை.
எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. நடந்து இரயிலடிக்கு வந்தேன். ஸ்ப்ரிங்க் வேலி லோக்கல் வருவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தது. வெளியே பிரயாணிகளுக்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். அந்த பெரிய வெளியின் வடகிழக்கு மூலையில் இருவர் கையில் கிடாருடன் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தார்கள். எந்த ஒழுங்குமற்ற இசையது. சாஸ்த்ரிய சங்கீதத்தின் எந்த கோட்பாட்டினுள்ளேயும் புகாத ஒரு இசை. தந்திகளை தன் விரல்பாட்டுக்கு மீட்டிக்கொண்டே ஒலிப்பெருக்கியின் சத்தத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்தான் அவன்.
அருகில் அமர்ந்திருந்த பெண்ணொருத்தியின் கைக்குழந்தை திடீரென அழுதது. ஹீனஸ்வரத்தில் முனகும் பூனையொன்றின் குரலையொத்திருந்தது அது. அக்குழந்தையை தன் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள் அவள் தாய். என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டே முகத்தைக் குழந்தையை நோக்கிய் திருப்பிக் கொண்டாள் அவள். குழந்தையின் முகத்தின் வெளிரிய இளஞ்சிவப்பு அவள் முகத்தில் இன்னமும் ஒட்டியிருந்தது. வயதாக வயதாக இழக்கிற வர்ணங்களையெல்லாம் குழந்தைகள்தாம் தம் தாய்களுக்கு மீட்டுத் தருகிறார்கள் போல.
பெருங்குரலெடுத்துப் பாடத் தொடங்கினான் அந்த பாடகன்..
"No more chasing moonbeams or catching falling stars
I know now my pot of gold is anywhere you are
My heart won't miss you my heart goes with you
Loneliness is emptiness but happiness is you"
I know now my pot of gold is anywhere you are
My heart won't miss you my heart goes with you
Loneliness is emptiness but happiness is you"
பாடி முடிக்கும்போது அவனருகில் அவனுடன் கிடார் வாசித்துக் கொண்டிருந்த பெண் அவனையணைத்து அவன் உதட்டில் முத்தமிட்டாள். அவள் கண்கள் துளித்து ஒளிர்ந்தன. கடைவாயின் ஓரத்தில் சிறிது புன்னகையை வழியவிட்டு கண்கள் முழுதும் கனவுகளைத் தேக்கிவைத்துக் கொண்டான் அவன். மெல்ல வேறொரு இசையில் வேறொரு பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினான் அந்த கந்தருவன்.
ஒரு வகையில் நாம் எல்லொருமே அவனைப் போலத்தானே? கண்களின் ஓரத்தில் தினம் தினம் உதிர்க்கும் கண்ணீரின் துளிகளுடன் நம் கனவுகளும் கூட வழிந்து போகின்றன. சிந்திப் போன கனவுகளுடன் மீண்டும் அக்ககனவுகளை சுரக்கத் துடிக்கிறது மனது. ஆனால் ஒரு கட்டத்தில் ஊற்றுக்கண் தூர்ந்து போய் லௌகீகத்துக்கே ஆட்பட்டுப்போகின்றோம்.
ஓடியோடி உழைக்க வேண்டிய வாழ்க்கைதான் ஆயினும் அந்த காந்தருவதத்தையின் காதலின் ஈரம் படிந்த முத்தமும் குழந்தையின் இளஞ்சூடும் எதிர்பாராத இவ்விசையும் அது சொல்லும் கதைகளும் அலுத்துப்போன வாரம் முழுமைக்குமாய் சேர்த்து ஒரே மாலையில் பொழிந்து தீர்க்கும் வெயிலும் காலத்தின் அத்தனைக் கதைகளையும் உள்வாங்கி அயர்வற்று ஓடும் இந்த ஜீவ நதியும்தான் இவ்வாழ்க்கையை அதன் எழிலை அதன் முழுமையை இம்மையின் எல்லா அணுக்களிலும் புகுத்துவதாய் இருக்கிறது. நாளை மற்றுமொரு நாள்தான் எனினும் அதைப் போராடி அடைய இவைதான் தூண்டுதலாகிப் போகின்றன.
நடைபாதைக்குப் போனேன். அசாதாரணக் குளிர். இரயில் நின்று கொண்டிருந்தது. ஏனோ அதன் நீளம் குறைந்திருந்ததாய்ப் பட்டது. உள்ளே ஏறினேன். எல்லோரும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர். எதையாவது பாட வேண்டும்போல இருந்தது!
Comments