முதன்முதலாய்!

இங்கே நடமாடி கொஞ்ச நாட்கள் ஆகி விட்டன. கொஞ்சம் என்ன கொஞ்சம். ரொம்ப நாளாகிறது. முகப்புத்தகத்தில் கொஞ்சம் சுறுசுறுப்பாய் இயங்குவதும் இதற்கு ஒரு காரணம் என்றாலும் அதையும் மீறிய ஒரு சோம்பேறித்தனம்தான் காரணம் என்று பட்டவர்த்தனமாய் சொல்ல மனசாட்சியையும் கொஞ்சம் தொட வேண்டும். வேலைப்பளு என்ற ஒரு சமாதானம் எல்லாவிடங்களுக்கும் மிக கச்சிதமாய் பொருந்துகிறது. அதையே இந்த இடத்திற்கும் பொருத்திப்பார்க்கிறேன். நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். ஒரு நாளைக்கும் இருபத்தி நான்கு மணி நேரமும் இங்கு பற்ற மாட்டேனெங்கிறது என்பதிலும் கொஞ்சம் உண்மையின் சாயல் கலந்திருக்கத்தான் செய்கிறது. சத்தியமாய் ஒரு கோப்பை தேனீராவது கிடைக்கும் அளவிற்கு பார்த்து பார்த்து பொய் சொல்லவேண்டியிருக்கிறது.


இது, இந்த வருடத்தில் நான் எழுதுகிற முதல் பதிவு. 2010 பல வகைகளில் புதிய நண்பர்களை பெற்றுத்தந்திருக்கிறது. பல புதிய தளத்திற்கு என்னை கொண்டு சென்றிருக்கிறது. போக வேண்டிய, போகக்கூடாத பல இறுதிகளையும் தொட்டு வந்திருக்கிறேன். மொத்தத்தில் கடந்த ஆண்டும், கழிந்த தருணங்களும் நல்லதோ தீதோ புது புது அனுபவங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. சில சோகங்களும் சில சந்தோசங்களும் இருந்தாலும் இவற்றையெல்லாம் நான் மறுபடியும் நினைத்துப் பார்ப்பதில் ஏனோ மகிழ்ச்சிக் கொள்கிறேன்.

பல புதிய நண்பர்கள் 2010இல் இணைந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் இந்த பதிவுலகம். எனது பதிவுகள், எனது எழுத்துக்கள் எத்தனைப்பேரைச் சென்றடைகின்றன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நானாக கொஞ்சம் பெரிய மனித தோரணைக்காட்டி மூக்கை நுழைத்துக் கொண்ட வட்டங்கள் சில. எனது பார்வையை அவையும் அவற்றின் பங்கிற்கு விசாலாமாக்கின. விசாலப்பார்வையில் விழுங்கும் அளவிற்கு இன்னமும் வளரவில்லையென்றாலும் குறுகலாய் இருந்த நினைவுப்பாதை இப்பொழுது விரிவுபட்டிருக்கிறது. இன்னமும் கொஞ்சம் தெளிவாய் சிந்திக்க முடிகிறது. பல தரப்பட்ட மக்களிடமும் சாதாரணமாய் பேச கற்றுத் தந்திருக்கிறது. சரியோ தவறோ பேசி முடித்த பின்னால் யோசிக்கிற பழக்கத்தைதான் கொஞ்சம் மாற்ற வேண்டியிருக்கிறது, இதுவரை இதனால் எந்த பிரச்சினையும் இல்லையென்றாலும் இனிமேலும் வராமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே!

நிறைய புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. படிக்கிறோமா இல்லையா என்பது இரண்டாவது விஷயம்.ஆனால் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட படித்து முடிக்கும் தறுவாயில் இருக்கிறேன். ஆனால் படிக்கப்படாமல் இருக்கிறது வாழ்வின் மிச்சப் பக்கங்கள். இன்னமும் எத்தனை காலம், எத்தனை வாழ்க்கை தேவைப்படும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுவரை படித்திருக்கிற பக்கங்கள் எல்லாம் சுவாரஸ்யம் மிக்கவையாகவே இருந்திருக்கின்றன. வாழ்வின் ஹாஸ்யம் ஒவ்வொரு எழுத்திலுமே தெரிகிறது. இன்னமும் ஆயிரம் ஜென்மங்கள் எடுக்க வேண்டும். கர்மப்பலன் இன்றி!

கொஞ்ச நாட்களாய்(வருடங்களாய்!) என்னிடமிருந்து விட்டுப் போயிருந்த மரபுக்கவிதைப் பழக்கத்தை மறுபடியும் கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் தூர்த்துப் போயிருந்த கவிதைக்கண்களை தூர்வாரும்வரை தடுமாறத்தான் செய்கிறது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் சரளப்படுகிறது. இன்னமும் உழைக்கவேண்டும். என்ன இருந்தாலும் புதுக்கவிதையைவிட மரபுக்கவிதைகளின் சுகமே தனி. என்னதான் காதலியின் அரவணைப்பு கிடைத்தாலும் அம்மா மடியின் சுகமே தனி தானே!

என்னயிருந்தாலும் 2010 அதன் வேலையை செவ்வனே ஆற்றிவிட்டு போயிருக்கிறது. என் வேலையை சரியாக செய்திருக்கிறேனா என்பது என்னால் கணிக்க இயலாது. அது இன்னமும் பரிசீலனைக்கு உட்பட்ட்தாகவே இருக்கிறது. 2011உம் அதன் வேலையை சரியாக செய்யும். இன்னமும் பொதுவாக சொல்லப்போனால் காலம் அதன் வேலையை சரியாகவே செய்கிறது. நாம் செய்து கொண்டிருக்கிறோமா?

Comments

electraspider said…
##
கொஞ்ச நாட்களாய்(வருடங்களாய்!) என்னிடமிருந்து விட்டுப் போயிருந்த மரபுக்கவிதைப் பழக்கத்தை மறுபடியும் கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் தூர்த்துப் போயிருந்த கவிதைக்கண்களை தூர்வாரும்வரை தடுமாறத்தான் செய்கிறது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் சரளப்படுகிறது. இன்னமும் உழைக்கவேண்டும். என்ன இருந்தாலும் புதுக்கவிதையைவிட மரபுக்கவிதைகளின் சுகமே தனி. என்னதான் காதலியின் அரவணைப்பு கிடைத்தாலும் அம்மா மடியின் சுகமே தனி தானே!##
electraspider said…
##. பல தரப்பட்ட மக்களிடமும் சாதாரணமாய் பேச கற்றுத் தந்திருக்கிறது. சரியோ தவறோ பேசி முடித்த பின்னால் யோசிக்கிற பழக்கத்தைதான் கொஞ்சம் மாற்ற வேண்டியிருக்கிறது, இதுவரை இதனால் எந்த பிரச்சினையும் இல்லையென்றாலும் இனிமேலும் வராமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே!
##

Popular Posts

பின் தொடர்பவர்கள்