கலைஞர்கள் கலைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!
கலைஞர்கள் கலைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!
ஒரு வகையில் கலைஞன் என்பவனும் சாதாரண மனிதன் தான். அவன் எந்த வகையிலும் இன்னொரு மனிதனை விட உயர்ந்தவனும் இல்லை. எப்படி ஒரோர் மனிதனும் அவன் அவன் வரையில் வெளிப்புற வினைகளுக்கு தன் பிரதிவினை ஒன்றை வெளிப்படுத்தும் ஒரு முறைமையை கொண்டிருக்கிறானோ அது போல கலைஞன் தன் கலையை ஒரு முறைமையாக வைத்திருக்கிறான்! அந்தக் கலை இன்னொரு மனிதனின் அடி மனதை கொஞ்சமாய் அசைக்கும்போது அவன் சற்று அசைந்து கொடுக்கிறானே தவிர அதற்கு மேல் வேறொன்றுமில்லை. இதற்காக கலைஞனை தெய்வமென்று கொண்டாட வேண்டிய எந்த ஒரு அவசியமும் மற்றவர்களுக்கு இல்லை.
எழுத்தும் எழுதுகோலும்தான் தெய்வமே தவிர, எழுதுபவன் தெய்வமல்ல. எழுத்து எழுதுபவனைக் கொண்டு தன்னை எழுதிக் கொள்கிறது, அவ்வளவே!
கலைஞனின் வாக்கென்பது தெய்வத்தின் குரல் அன்று. அதை அப்படியே அட்சரசுத்தமாக உள்வாங்கி, அதன் படி வாழ வேண்டிய எந்த ஒரு அவசியமும் பிறத்தியாருக்கு இல்லை. அவனவன் வாழ்க்கை அவனவனுக்கு. அடுத்த வேளை உணவென்பது, இந்த நொடி நம் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் எடுக்கிற முடிவுகளைப் பொறுத்தது அவ்வளவே. எதற்கெடுத்தாலும் கலைஞனிடம் கருத்து கேட்பது என்பது அந்த வகையில் ஒரு முட்டாள்த்தனம்.
அதே போலத்தான் அதீதங்களும். கலைஞனுக்கு கலை மனம் தான் அதீதமேயொழிய வேறொன்றுமில்லை. அதற்காக அவன் செய்கிற எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு செல்ல வேண்டிய எந்த ஒரு கட்டாயமும் இல்லை. ஒரு வகையில் எல்லா மனிதனும் அவனுக்கென்று ஒரு விஷயத்தை அதீதமெனக் கொண்டிருக்கிறான். இதில் கலைஞன் எந்த வகையில் பிரிந்து நிற்கிறான்?
உண்மையில் கலைதான் தெய்வம். அதைத்தாண்டி வேரொன்றையும் கொண்டாடவோ பொறுத்துக் கொள்ளவோ யாருக்கும் எந்த அவசியமும் கட்டாயமும் இல்லை!
Comments