குப்பைமேடு

யார் யாரெல்லாமோ எழுதுகிறார்கள் என்பதற்கும் எல்லோரும் எழுதுகிறார்கள் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதில் ஒன்று தொனிப்பொருள். முன்னது கொஞ்சம் திமிரான வார்த்தையாக வந்து விழுவதற்கு கனிசமான அளவு சாத்தியக்கூறுகள் உண்டு. பின்னது அப்படி இல்லை.

எழுதுவது என்னவோ மிக நல்ல விஷயம்தான். எழுத்துக்காரர்களின் பிரசவம் அதிகரிக்கிற அளவுக்கு வாசகர்களின் மக்கட்தொகை விரிந்திருக்கிறதா என்று யோசித்தால் கொஞ்சம் தலையை சொரிந்துக் கொண்டே நமட்டுச்சிரிப்புடன் நகர வேண்டி இருக்கிறது. எழுதுவதற்கு எந்த அளவிற்கு இலக்கியப் பரிச்சயம் வேண்டும் என்பதற்கு எந்த அளவு கோலும் இல்லை. ஆனால் பண்பட்டதாக நம் வாக்கிய அமைப்பு இருப்பதற்கு அந்த பரிச்சயம் தேவைப்படத்தான் செய்கிறது. அப்படி வெளிவருகிற வாக்கியமும் ஒரு ஏமாற்று வேலைதான். ஏனெனில் அது அவனுடைய சத்திய வார்த்தைகள் அல்ல. வெளிப்பூச்சு பூசி அழகானதாக்கப்பட்ட அவலட்சணம் அது. சிலருக்கு அது பிறவியிலேயே அழகாக அமைந்து விடுகிறது. ஆனால் அவலட்சணமானாலும் நாம் விடுவதில்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.

வாசக பருவம், நிரம்பவும் சகிப்புத்தன்மை கொண்டதாக இருந்தே தீர வேண்டும். அது வாசகனின் தலையெழுத்து. பிரபல்யத்தைப் பொறுத்துத்தான் எழுத்தும் இப்பொழுதெல்லாம் வாசக சமுத்திரத்தால் தரம் பிரிக்கப்படுகிறது. பிரபலமானவர்கள் இராசா வீட்டுக் கன்னுக்குட்டி. அவர்களின் மூத்திரம் கோமயமாக வணங்கப்படும். ஒன்றுமில்லாதவனின் பன்னீர் கூட மூத்திரம்.

எழுத்து அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கைகூடுவதில்லை. அதே சமயம் அது வரமும் இல்லை. சொல்கிற பாணியில்தான் இது எல்லாமே. எல்லோருக்கும் வசீகரமான ஒரு மொழியில் சொல்லப்படுகிற கெட்டவார்த்தைக் கவிதைகள் கூட காவியம்.யாருக்கும் புரியாத மொழியில் சொல்கிற எல்லாமும் கருமாந்திரம்.

இதை ஒரு பெருமிதமாக எடுத்துக்காட்டி சொல்லிக்கொள்ள இங்கு ஏதுமில்லை. சத்தியமாக இது புலம்பல்தான். யாருடைய இரசனையையும் குறிப்பிட்டு இது இல்லை. காத்திரமான எழுத்துக்களுக்கு கிடைத்திராத அங்கீகாரத்தைப் பற்றிய புலம்பல் இது.

புரிவது புரியாததும் அவரவர் மனோநிலையைப் பொறுத்தது. 

Comments

பின் தொடர்பவர்கள்