கொம்பாடிக் குரங்குகளுக்கு...

ஒரு கட்டத்திற்கு  மேல், கொஞ்சம் தெளிவாக சொல்லப்போனால், மடியிலோ இல்லை மற்ற பிரதான அங்கங்களிலோ எங்கேயாவது கனம் வந்துவிட்டால், மனிதனின் இன்டெராக்டிவ் மனோபாவம் குறைந்து விடும் போல. மேதைமைத் திமிர் என்று இதை ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் கலகலவென்றிருந்த இடங்கள் எல்லாம் தன் சோபை இழந்து போய்விடுகின்றன. தாய் இழந்த வீடு மாதிரி. பார்க்க நன்றாகவா இருக்கிறது இது?

வெறுமனே ஒவ்வொரு முறை பேசும்போதும் எழுதும்போதும் நன்றி சொல்லி ஆரம்பிப்பது மட்டும் நாம் இன்னும் முன்னிருந்த மாதிரியே இருக்கிறோம் என்று காட்டிவிடாது. நாம் எழுதுகிற அல்லது வரைகிற எல்லா பாடாவதிகளையும் நிறுத்தி நிதானமாய் வாசித்து விட்டு பக்தி சிரத்தையுடன் கீழே பின்னூட்டமிடுகிற வாசகனிற்கு ஒரு சிரிப்பானையாவது போட்டுவிட்டு போவதில் அப்படியென்ன ஒரு சோம்பேறித்தனம்? இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம். ஆனால் மற்றவர்கள் நம்மை சிலாகிக்க இது போதும். கொஞ்சம் டவுன் டு எர்த்தாக இருப்பதில் எந்த வித தவறும் இல்லை என்பது என் வாதம். 

அவரவர் துறையில் பெரிய ஆள் என்பது அவரவர் திறமையில் மட்டும் இல்லை. சினேக மனோபாவத்திலும் இருக்கிறது. தனக்கென ஒரு வட்டம் உருவாக்கி அதற்குள்ளேயே உருளுவது எவ்வளவு அபத்தம்? அதைவிட அதற்குள் வேறு யாரையும் நுழையவிடாமல் பகிஷ்கரிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்?
 
இப்படியாக நீங்களும் நானும் புறக்கணிக்கும் சாமானிய வாசகன், அவனளவில் அவனும் ஒரு திறமையை தனக்கே தெரியாமல் ஒளித்து வைத்திருக்கிறான். அது வெளியே வரும் வரையில்தான் நம் ஆட்டமெல்லாம்.

இனி அவரவர் பதில்கள் அவரவர் புரிதலுக்கேற்ப...

Comments

பின் தொடர்பவர்கள்