காலம்

So long as men can breath or eyes can see
So long lives this and this gives life to thee!

                                          ~Shakespeare~
காலம்...

நமக்குத் தெரிந்த அதிகபட்ச நீளம்,உயரம், அகலம்.. இவை எல்லாவற்றையும் கடந்தது... மொத்தத்தில் இந்த பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டு, அதனை ஆட்டிப் படைத்து அதற்குள்ளே தானும் ஒரு அங்கமாகிப் போன ஒன்று. இதை வஸ்து என்கிற கணக்கிலா? இல்லை கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று என்ற கணக்கிலா? எவ்விதமும் விளங்காது நின்றது.

இவ்விதம், காலத்தைப் பற்றிய ஒரு அனுமானம், அதை எப்படி வடிவமைப்பது என்ற ஒரு ஆராய்கிற ஒரு தன்மை மனிதனுக்கு எப்பொழுது தோன்றியது என்பதை யாராலும் கண்டறிய முடியாமல் தொக்கி நிற்கிறது. ஆனால் 14000 வருடங்களுக்கு முன்பே நிலவின் போக்கை வைத்து கணக்கிடுகிற பக்குவம் மனிதனுக்கு இருந்திருக்கிறது. காலத்தைப் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை மனிதனுக்கு எப்பொழுது வந்தது என்பதும் இன்று வரையில் அறுதியிட்டு கூற முடியாததாய் இருக்கிறது. மொத்ததில் காலம், நம்முடனே சேர்ந்து பயணிக்கிற ஒரு புரியாத புதிர். கடவுள் மாதிரி என்று கூட சொல்லிக் கொள்ளலாமே!

நம் மேலே அழுந்தி எழுந்து நம்மையும் கட்டித் தூக்கி எறிகிற காலத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு வேளை பிரம்மாண்டத்தின் காரணமாகத்தான் நம்மால் இந்த காலத்தைப் பார்க்க முடியவில்லையோ என்னவோ! காலம் ஒரு அம்பு போல எல்லாப் பக்கங்களிலிருந்தும் நேராக செல்கிறது. கண்ணன் பாதம் படுகிற இடமெல்லாம் பூ பூக்கிற மாதிரி இந்த காலம் செல்கிற வழியெல்லாம் பூக்களும் முட்களும் விளைகின்றன. ஒரு பூவைக் கிள்ளுகிற மென்மையோடும் பக்குவத்தோடும் காலத்தை தொட்டுப் பார்க்கத் தான் நாம் ஒவ்வொருவரும் துடிக்கின்றோம். ஆனால் தொடுவதற்குள்ளே இருக்கிற அவசரம் முட்களைக் கொண்டு கிழித்து விடுகின்றன. பூவோ முள்ளோ பார்த்து எடுக்க வேண்டியது நம் கைகளில்தானே இருக்கிறது?

பார்வையில்லாதவற்களுக்கு காலம் எப்படி இருக்கும்? இரவு பகல் என்ற எந்த பேதமும் இல்லாமல் எப்பொழுதும் ஒரே பொழுதையே பார்த்துக் கொண்டு இருக்கிற அவர்கள் வாழ்க்கை உண்மையிலேயேப் பொறாமைப் பட வேண்டிய ஒன்று. மூப்பே இல்லாத வாழ்க்கை அவர்களுடையது. எங்கும் நகராமல், எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்கிறது அவர்களுக்குண்டான காலமும் நேரமும். புற தூண்டுதல்கள் தாம் அவர்களின் காலத்தை நிர்ணயிக்கின்றதேயொழிய, அவற்றின் தொந்தரவு இல்லாவிடில் காலம் இவர்களுக்கு நிச்சலனமாய்தான் நிற்கிறது.

காலம் தூணில் கட்டிப் போடப் பட்ட குழந்தையைப் போல. பசியெடுக்கும் போது தன்  பற்களால் கிழித்துத் தின்கிறது. அதற்கு பொழுது போகாதபோது தானும் சிரித்து, நம்மையும் சிரிக்க வைக்கிறது. சொல்லவந்ததையே சுற்றி சுற்றி, ஒரே விசயத்தையே மீண்டும் மீண்டும் சொல்கிறது இந்த காலம். அபாரமான ஒரு Randomnessஇல் குறிப்பிட்ட patternஐக் காட்டுகிற காலத்தின் திறமை அத்தனை அழகு.

உயிரியலில் circadian rhythm என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளேயும் இருக்கிறது இந்த circadian rhythm. அதிகாலையில் எழுப்பி, இரவில் தூங்க செய்து பசிக்க வைக்கிற வேலைகளெல்லாம் இந்த circadian rhythத்தை சார்ந்தது. இப்படி காலத்தைப் பற்றியதொரு பிரக்ஞையை எந்த ஒரு பயிற்றுவித்தலும் இன்றி, இருக்கிற எல்லா உயிரினத்துக்குள்ளும் கடவுள் என்கிற ஒரு Great Architect தவிர்க்க முடியாத ஏதோ ஒரு காரணத்துக்காக பதிந்திருக்கிறார் போலும்.

மொத்தத்தில் அதன் பிரம்மாண்டத்தின் காரண்த்தினாலோ, இல்லை அதன் கரங்களின் ஈர்ப்புக் காரணத்தினாலோ இவையெல்லாமன்றி இன்னமும் வரையறுக்க முடியாத ஏதோ ஒரு காரணத்தினாலோ, இன்னமும் காலத்தை வெல்ல முடியாமல் இருக்கிறோம். மீண்டும் ஒரு காலம் வரும், இந்த காலத்தை வெல்வதற்கு என்ற நம்பிக்கையோடே வருகிற காலம் காத்திருப்போம்!! :)

And nothing 'gainst times scythe can make difference
Save breed to brave him, when he takes thee hence

                                                      ~Shakespeare~

Comments

Paleo God said…
//பார்வையில்லாதவற்களுக்கு காலம் எப்படி இருக்கும்? இரவு பகல் என்ற எந்த பேதமும் இல்லாமல் எப்பொழுதும் ஒரே பொழுதையே பார்த்துக் கொண்டு இருக்கிற அவர்கள் வாழ்க்கை உண்மையிலேயேப் பொறாமைப் பட வேண்டிய ஒன்று. மூப்பே இல்லாத வாழ்க்கை அவர்களுடையது//

அருமை இதப்படிச்சதும் எனக்கு ஒரு கவிதையே வருது! முடிஞ்சா எழுதறேன்.

:)) அருமை நட்பே.
நன்றிங்க ஷங்கர்... உங்க தூண்டுதல் தான் இந்த பத்திய எழுதக்காரணம்.. என்னால முடிந்தது... :)
மீண்டும் மீண்டும் படிக்க வைத்த நல்ல சிந்தனை.. தொடருங்கள்...
//நாளைப்போவான்//

பெயர் காரணம் சொல்ல முடியுமா??
நன்றி எறும்பு... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... :)

உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு....

பெயர்க்காரணம்னு சொல்லிக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் நாட் கடத்தி செய்கிற ஒரு 'நல்ல' பழக்கத்தினால், நந்தனார் போல நாளைப்போவான் என வைத்துக்கொண்டேன்.....

:)))

பின் தொடர்பவர்கள்