கசக்கி எறிந்த காகித்ததில் தெளிவற்றதாய் கிறுக்கப்பட்டதோர் வாசகம்

சுவாசச் சிறைகளில்
சிறைப் பட்டிருந்தாய்
இத்தனை நாள்
இரும்புப் பறவைகள்
இதயம் தின்னும் இரவுகளில்
நான்
கடல் மடியில் வீழ்ந்துகிடந்தேன்
மணிப்புறாக்களை
இரசிக்கவாவது வேண்டுமென
நாம்
செய்து கொண்ட சங்கல்பங்கள்
இதுகாறும் நிறைவேறவில்லை
அரிதாரம் பூசப்பட்ட
நம் முகங்கள்
ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும்
நினைவுறுத்திச் செல்லும்
நாம் பேசிய வார்த்தைகளை
நாம் பேசிய வார்த்தைகளை
மழை நனைத்த போது
அவற்றை பிழிந்து விட
எத்தனித்தோம்
வழிந்ததெல்லாம்
இரத்தமும்
கொதித்துக் கிடந்த சொற்களினால்
வெந்துருகி ஓடும் சதைகளும்
தகிக்கிற நிலத்தில் கிடப்பதைக் காட்டிலும்
குளிர்கிற கடலில்
மடிவது எளிது
......................
மௌனம்.
மௌனப் பிணக்கங்கள்தாம் வலிகொடுக்கும்
சத்தமிட்டு சாடும் சண்டைகளை விட.

Comments

Anonymous said…
என்ன அருமையான சொற் பிரயோகங்களும், ஆழமான் பிரிவுத் துயரை விவரிக்கும் கவிதை. மனம் கவர்ந்தது.

பின் தொடர்பவர்கள்